டார்கெட் பியூஷ் மனுஷ்! - ஒரு ரியல் ‘கத்தி’ ஸ்டோரி

மு.நியாஸ் அகமது, ஓவியம்: ஹாசிப்கான்

வருக்கு, பூர்வீகம் தமிழ்நாடு அல்ல; தமிழும் அவ்வளவாக வராது. ஆனால், தமிழ்நாட்டின் சூழலியல் போராட்டக் களத்தில் மிக முக்கியமானவர். சூழலியல் சார்ந்து இயங்கவிரும்பும் பலருக்கும் அவர் ஆதர்சம். அப்படிப்பட்ட ஒருவருடைய கைது, என்ன மாதிரியான அதிர்வு அலைகளை உருவாக்கும்?

காவல் துறைகூட எதிர்பார்த்திருக்கவில்லை. தமிழ்நாட்டின் சிறு நகரம் ஒன்றில் நடந்த கைது, இன்று இந்தியா முழுக்க விவாதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் அவருக்கு ஆதரவாக எண்ணற்ற இளைஞர்கள் அணிதிரள்கிறார்கள்.

கைதுசெய்யப்பட்டவர் சேலத்தைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்... பியூஷ் மனுஷ்.

 யார் இந்த பியூஷ் மனுஷ்?

பியூஷின் பூர்வீகம் ராஜஸ்தான். சென்ற தலைமுறையில்தான் அவரது குடும்பம் சேலத்தில் குடியேறியது. அவர்களது முழுக் கவனமும் தொழிலில் மட்டும்தான். இவரும் கல்லூரிப் படிப்பு முடிந்ததும், கொசுவலை உற்பத்தித் தொழிற்சாலையைச் சிறிதாகத் தொடங்கினார். நிறைவான லாபம். இருந்தும், பியூஷுக்கு இயல்பாகவே சூழலியல் மீது மிகுந்த அக்கறை. `கொசுவலை உற்பத்திசெய்வதற்காக, சாயங்கள் பயன்படுத்துவது நெருடலாக இருக்கிறது. நமக்கு நாமே உண்மையாக இல்லையோ, நமது பிழைப்புக்காக நம் நம்பிக்கைகளுக்குத் துரோகம் செய்கிறோமோ, நம் நம்பிக்கைகளுக்கு நாமே முரண்படுகிறோமோ?' என தனக்குள்ளேயே விவாதித்துக்கொண்டார். திடீரென ஒருநாள், கொசுவலை உற்பத்தித் தொழிற்சாலையை மூடிவிட்டார்.

`நாம் ஆயிரக்கணக்கில் மரங்கள் நடலாம். ஆனால், பெரு நிறுவனங்கள் `வளர்ச்சி' எனப் பொய்யான காரணங்களைக் கூறி, லட்சக் கணக்கில் மரங்களை வெட்டிக்கொண்டிருக்கின்றன. அதை எல்லாம் காக்க போராடாமல், வெறும் செடிகளாக நடுவது மட்டும் சூழலியல் செயற்பாடு ஆகாது' என பியூஷிடம் சொல்லியிருக்கிறார் சூழலியல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமன். இந்தச் சொற்கள், அவரை உலுக்கின.

இதற்குப் பிறகு, பியூஷ் மனுஷ் வாழ்வில் பெரும் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. பியூஷ், தன்னை முழுநேரச் சூழலியல் செயற்பாட்டாளராக மாற்றிக்கொண்டார். அதுவரை பியூஷ் சேத்தியாவாக இருந்தவர், தன் பெயரில் இருந்த `சேத்தியா' என்ற சாதியை நீக்கி, `மனுஷ்'-ஐ சேர்த்துக்கொண்டார்.

மக்களைத் திரட்டி பியூஷ் முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாமே அவசியமானவை; அசாத்தியமானவை. மிகப் பெரிய ரசாயன ஆலை ஒன்று, முறைகேடாக ரசாயனக் கழிவுகளை மேட்டூர் காவிரி ஆற்றில் கொட்டியது. இதனால் பலரும் மோசமான நோய்களுக்கு உள்ளானார்கள். இதற்கு எதிராக மக்களைத் திரட்டி ஜனநாயக வழியில் போராடியும், சட்டப் போராட்டம் நடத்தியும் வென்றார் பியூஷ். இதுபோல் பியூஷின் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு மக்கள் போராட்டம் ‘கஞ்சமலைப் பாதுகாப்பு இயக்கம்’.

பெரும் நிறுவனங்கள் சில ஒன்றாக இணைந்து, கஞ்சமலையில் உள்ள தாதுக்களைச் சுரண்டும் முயற்சியில் ஈடுபட்டன. அந்த நிறுவனங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டினார். மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல், அந்த நிறுவனங்கள் கவுந்தி - வேடியப்பன் மலைகளை நோக்கி ஓடின. அங்கும் சென்று மக்களை ஒருங்கிணைத்துப் போராடி வென்றார் பியூஷ்.
அரசின் பங்களிப்பு சிறிதும் இல்லாமல் சேலத்தில் மக்களைத் திரட்டி, `சேலம் மக்கள் குழு' என்ற அமைப்பைத் தொடக்கினார். அந்த அமைப்பு புனரமைத்த மூக்கனேரி, குமரகிரி அம்மாபேட்டை ஏரி போன்றவை, இப்போது சேலத்தின் முக்கிய அடையாளங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்