இன்னொரு இரும்புப் பெண்மணி?

கார்க்கிபவா

மார்கரேட் தாட்சருக்குப் பிறகு இங்கிலாந்தின் பிரதமராகி இருக்கும் இரண்டாவது பெண் தெரேசா மே.

இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியனில் தொடர வேண்டும் என கேமரூன் அதிரடிப் பிரசாரம் மேற்கொண்டபோது அமைதியாக இருந்தார் தெரேசா. இங்கிலாந்து பிரிந்துவருவதில் அவருக்கும் விருப்பம் இல்லை. ஒருவேளை மக்கள் வாக்குகள் இங்கிலாந்து பிரிய வேண்டும் என இருந்தால்... தெரேசா பொறுமை காத்தார். அதற்குக் கிடைத்த பலன்தான் தேடிவந்திருக்கும் பிரதமர் பதவி.

59 வயது ஆகும் தெரேசா மே, இயல்பாகவே தலைமைப் பண்புக்கான குணாதிசயங்கள் கொண்டவர். உலகப் பெண் தலைவர்களில் இவரையும் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலையும்தான் ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒப்பிடுகின்றன. ஆனால், ஏஞ்சலாவுக்கும் தெரேசாவுக்கும் கொள்கை ரீதியில் பல வேறுபாடுகள் உண்டு. அகதிகளுக்கு ஆதரவுக்கரம் நீட்டுபவர் ஏஞ்சலா. தெரேசாவோ, அவர்களுக்கு உதவலாம். ஆனால், நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என்பவர்.

2010-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து அரசின் உள்துறைச் செயலாளராக இருந்துவந்தார் தெரேசா. தீவிரவாதத் தடுப்பு, குடியுரிமை, எல்லைக் கட்டுப்பாடு பிரிவுகளுக்கு தெரேசாதான் தலைவர். இன்னும் ஒரு மாதம் இந்தப் பொறுப்பில் நீடித்து இருந்தால் அதிக ஆண்டுகள் தொடர்ந்து உள்துறைச் செயலாளராக இருந்த ஜேம்ஸ் சூட்டர் ரெக்கார்டை உடைத்திருப்பார். ஆனால், இந்தக் காலத்தில் இவரது செயல்பாடுகள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. `இங்கிலாந்துக்குக் குடிபெயர்ந்து வருபவர் களின் எண்ணிக்கை குறைக்கப்படும்’ என்றது டேவிட் கேமரூன் அரசு. ஆனால், கடந்த ஆண்டுகளில் அது முன்னர் இருந்ததைவிட அதிகம் ஆனது. சட்டத்துக்குப் புறம்பாக இங்கிலாந்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்ற பல அதிரடி முயற்சிகள் எடுத்தார் தெரேசா. வேன்களில் `Go home or face arrest' என்ற போர்டுகளை மாட்டி, லண்டன் நகரம் எங்கும் ஓடவிட்டார். ஒரே ஒருவர் மட்டுமே தாமாக வந்து சரண் அடைந்தார். அந்தப் பிரசாரம் படுதோல்வி அடைந்தது. 

ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதால் இங்கிலாந்துக்குப் புதிய நண்பர்கள் தேவை. பொருளாதார, வர்த்தக முன்னேற்றத்துக்கு அமெரிக்காவுடனான நட்பு அவசியம். நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரி, ட்ரம்ப் என யார் வெற்றி பெற்றாலும் அவர்களோடு நட்பு பாராட்டவேண்டியதுதான்  தெரேசாவுக்கு டாப் ப்ரியாரிட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்