குரலோசையில் குறளோசை!

வீயெஸ்வி, படங்கள்: கே.ராஜசேகரன் ஓவியம்: கார்த்திகேயன் மேடி

சென்ற வருடம் நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஒருநாள், சித்ரவீணை ரவிகிரணை அலைபேசியில் அழைத் திருக்கிறார் கோபாலகிருஷ்ண காந்தி.

‘நான் கலந்துகொள்ளவேண்டிய ஒரு கூட்டத்துக்காக, 34 திருக்குறள் களைக் குறிச்சுவெச்சிருக்கேன். நீங்க அவற்றை ட்யூன் செய்து பாடிக் கொடுக்கணும்' எனக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சம்மதித்த ரவிகிரண், அந்தக் குறள்களை விருத்தமாகப் பாடிக் கொடுத்திருக்கிறார். ரவிகிரணின் காதுகளில் வள்ளுவனின் குறட் பாக்கள் தொடர்ந்து ரீங்காரமிட்டன.

இந்த வருடம் ஜனவரி மாத முதல் வாரத்தில் பனிப்பொழியும் ஒரு காலைப் பொழுதில் பெசன்ட் நகர் கடற்கரையில் நடந்து கொண்டிருந்த ரவிகிரணுக்கு, திடீரென மின்னல் அடித்ததுபோல் ஒரு யோசனை.

‘1,330 திருக்குறள்களையும் கர்னாடக ராகங்களுடனும் தாளங்களுடனும் இசையமைத்துப் பாடினால் என்ன?'

கடற்கரை நடையை முடித்துக் கொண்டு ரவிகிரண் நேராகச் சென்றது பெசன்ட் நகர் பிள்ளையார் கோயிலுக்கு. ஆனைமுகத்தோனை கண்கள் மூடி வேண்டிக்கொண்டார்.

ரவிகிரணின் வாய், முதல் குறளை முணுமுணுத்துப் பாடியது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.


உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மையான ஆதி பகவனின் ஆசி, இந்த 49 வயது இசை மேதைக்கும் கிட்டியிருக்க வேண்டும்.

முதல் அதிகாரமான `கடவுள் வாழ்த்து' கம்பீர நாட்டை ராகத்தில் தொடங்கப்பட்டால் பொருத்தமாக இருக்கும் என, மனதளவில் தீர்மானித்துக்கொண்டார். அண்மையில் ஒரு பொன்மாலைப் பொழுதில் ரவிகிரணை நேரில் சந்தித்தபோது...

கிழக்குக் கடற்கரை சாலை பாலவாக்கத்தில், உள்ளடங்கிய குறுக்குத் தெரு ஒன்றில் இருக்கிறது கலைநயத்துடன் கட்டப்பட்டிருக்கும் ரவிகிரணின் வீடு. உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் முற்றம். சாப்பிடும் மேஜையை ஒட்டியிருக்கும் சிறிய பூஜை அலமாரியில் பிரதானமாக திருப்பதி வெங்கடாசலபதியும் தாயாரும்.

‘`என் சித்ரவீணை அரங்கேற்ற கச்சேரி, 1978-ம் ஆண்டு திருப்பதியில் நடந்தது. அந்தச் சமயம் எனக்குத் தரப்பட்ட படம் இது.”

வரவேற்பு அறை சோபாவில் சம்மணமிட்டு உட்கார்ந்துகொண்டார் ரவிகிரண்.

‘`1,330 குறள்களுக்கு இசை அமைப்பது என்பது முடிவானதும், இதை பொதுமக்கள் முன்னிலையில்தான் செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன். என் சீடரும் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரியுமான டி.கே.ராமச்சந்திரனைத் தொடர்பு கொண்டு இதற்காக அரங்கம் ஒன்றும், பார்வையாளர்கள் சிலரையும் ஏற்பாடு செய்து கொடுக்கக் கேட்டுக்கொண்டேன். தரமணியில் உள்ள International Institue of Tamil  Studies வளாகத்தில் உள்ள அரங்கம் எனக்கு ஒதுக்கித் தரப்பட்டது.”

முதலில் கணக்கு போட்டுப் பார்த்தபோது, அத்தனை குறள்களுக்கும் மெட்டு அமைத்து முடிக்க மொத்தம் நூறு மணி நேரம் தேவைப்படும் என நினைத்திருக்கிறார் ரவிகிரண். மறுபடியும் கூட்டிக் கழித்துப் பார்த்தபோது, ஐம்பது மணி நேரத்தில் அது சாத்தியப்படக்கூடும் என அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்