கலைடாஸ்கோப் - 50

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

Z யானை

``யா
னைகளுக்கு பெரிய உடல். அதுதான் பிரச்னை. காட்டில் உணவு போதவில்லை. சாலைகளைக் கடக்கின்றன. நகரங்களுக்குள் வருகின்றன” என்றார் டாக்டர் ஆர்.ஜே.

லேபுக்கு வெளியே விருந்தினர் அறை சோபாவில், கிருஷ்ணாவை உட்கார சைகை காட்டியபடி தானும் வந்து அமர்ந்தார்.

“அதன் வாழிடங்களின் வழித்தடங்களின் மீது மனிதர்களின் குறுக்கீடுக்கு பங்கு இல்லையா... சரி என்னதான் தீர்வு?” எனச் சாய்ந்தபடி கேட்டார் கிருஷ்ணா.

“ஜி.எம்.ஓ! யானைகளை ஜெனிட்டிக்கலி மாடிஃபை பண்ணுவது. கிட்டத்தட்ட தீர்வை எட்டிவிட்டேன். இதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினால், இன்னும் ஐம்பது வருடங்களில் உங்கள் நாட்டின் காடுகளில் பன்றிக்குட்டி சைஸுக்குத்தான் யானைகள் இருக்கும். காடுகளுக்குள் கிடைத்ததைத் தின்று அமைதியாக வாழும். மனிதர்களுக்குத் தொந்தரவு இல்லை” என்ற ஆர்.ஜே., தன் மடிக்கணினியைத் திறந்து திரையை ஒளிரச்செய்தார்.

கிருஷ்ணா கவலையுடன் அதைப் பார்த்தார்.

“ஜீன்கள் வழியாக யானையின் உடல் வளர்சிதை மாற்றத்தில் கை வைத்திருக்கிறேன். மூன்று அடிக்கு மேல் அவை வளர சாத்தியம் இல்லை. லேபில் நடக்கும் மாற்றங்களை, இந்த கிராஃபிக்ஸ் துல்லியமாகச் சொல்லிக்கொண்டே இருக்கும். இங்கு இருந்தே நீங்கள் அதைப் பார்க்கலாம்” என்ற ஆர்.ஜே., கணினியை கிருஷ்ணாவிடம் நகர்த்தினார்.

நீலத் திரை சில சிக்கலான ஜீன்களின் பின்னல் வடிவங்களைக் காட்டிவிட்டு, பிறகு ஒரு யானையின் கருவாக வளரத் தொடங்குவது கிராஃபிக்கலாகத் தெரிய ஆரம்பித்தது. கிருஷ்ணா தீவிரமாக கணினியில் ஆழ்ந்திருப்பதை, புன்னகையுடன் நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்தார் ஆர்.ஜே.

“இட்ஸ் ஹேப்பனிங் ரிவர்ஸ். ஜீனில் நீங்கள் செய்த மாற்றம், யானையின் பரிணாம வளர்ச்சியை, பின்னோக்கி அழைத்துச்செல்கிறது பாருங்கள்” - கத்தினார் கிருஷ்ணா.
“வ்வ்வாட்?” என்றபடி மாறும் கிராஃபிக்ஸைப் புரியாமல் பார்த்தார் ஆர்.ஜே.

“இட்ஸ் மம்மூத்” எனப் பரபரத்தார் கிருஷ்ணா.

அடுத்த விநாடி கட்டடமே அதிரும்படியாக லேபுக்குள் இருந்து கேட்டது ஒரு பிளிறல்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்