பாபா பிசினஸ்!

விகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப் கான்

டந்த ஆண்டு மேகி நூடுல்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்ட சில நாட்களில், பத்திரிகைகளை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. `சுத்தமான, உண்மையான, சிறந்த நூடுல்ஸ் ‘பதஞ்சலி நூடுல்ஸ்’ ' என்றது அந்த விளம்பரம். இந்தப் புதிய பதஞ்சலி பிராண்ட், பரபரப்புச் சாமியார் பாபா ராம்தேவுக்குச் சொந்தமானது. இந்த விளம்பரங்களைக் கண்ட சமூக வலைதள இளைஞர்கள் உடனுக்குடன் பாபா ராம்தேவைக் கேலிசெய்து மீம்ஸ்களால் வெளுத்துவாங்கினர். ஆனால், இந்த ஒரு வருடத்தில் இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமாக மாறியிருக்கிறது பதஞ்சலி.

5,000 கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியமாக மாறி நிற்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது, ஆன்மிகமும் அரசியலும் கலந்த விசித்திரமான ஒரு கூட்டணி.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சோப், பேஸ்ட், ஷாம்பு, நறுமணப் பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய FMCG (Fast Moving Consumer Goods)சந்தையின் மதிப்பு, இந்தியா போன்ற வளரும் நாட்டில் மிகப் பிரமாண்டமானது. நாம் டி.வி-யில் பார்க்கும் 60 சதவிகித விளம்பரங்கள் இந்த FMCG பொருட்களுக்கானவைதான். கார், பைக் வாங்குவதுபோல, வீடு, நகை வாங்குவதுபோல... இந்தப் பொருட்களுக்கான செலவு சட்டென நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த வகைப் பொருட்களுக்காக நம் குடும்பம் ஒவ்வொன்றும் மாதம்தோறும் ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறது.

அதனாலேயே பல பிரமாண்டப் பொருட்களைக் காட்டிலும் FMCG பொருட்களுக்கான லாப விகிதம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிக அதிகம். இந்தக் காரணத்தினால்தான் நெஸ்லே, இந்துஸ்தான் லீவர், ஐடிசி, பி அண்ட் ஜி எனப் பல பன்னாட்டு நிறுவனங்களும் இந்தத் துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் லாபம் எடுத்து, பல ஆண்டுகளாக இந்தியாவில் கோலோச்சி வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல நூறு கோடிகளை விளம்பரத்துக்காக மட்டுமே செலவழிக்கின்றன.

ஆனால், கடந்த ஒரே ஆண்டில் இந்த நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய FMCG துறையையும் ஆட்டம்காணவைத்திருக்கிறது, ‘பதஞ்சலி’ என்ற ஒற்றைச் சொல். இத்தனை ஆண்டுகாலமாகக் கோலோச்சிவந்த பகாசுர நிறுவனங்களான ஐடிசி, இந்துஸ்தான் லீவர், புராக்டர் அண்ட் கேம்பிள்களுக்கு எல்லாம் சரிநிகராக, விதவிதமான பொருட்களை நாடு முழுக்கக் களம் இறக்கி, இந்திய FMCG துறையின் பெரும்பங்கை தனதாக்கி இருக்கிறது பதஞ்சலி ஆயுர்வேதிக் லிமிடெட். நுகர்வோர் சந்தையில் ஒரு சாமியாரின் வரவும், அவருடைய ஆதிக்கமும் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்