ஜெ 2.0 - நம்பர் கேம் டேட்டா

ஆர்.முத்துக்குமார், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

தேர்தல் களத்தில் ஆயிரம் கோஷங்கள் எழுப்பினாலும், ஆயிரம் வாக்குறுதிகள் தரப் பட்டாலும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது என்னவோ எண்கள்தான். அந்த வகையில் 2016-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை, சில குறிப்பிட்ட எண்களின் வழியே பார்க்கும்போது பல புதிய புரிதல்கள் கிடைக்கின்றன.

134 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது அ.தி.மு.க. ஐந்து ஆண்டு கால ஆட்சி மீதான அதிருப்தி, சொத்துக்குவிப்பு வழக்கு, ஊழல் புகார்கள், குடும்ப அரசியல், டிசம்பர் பெருவெள்ளம், கடன் சுமை, மத்திய அமைச்சர்களின் புகார்கள், எதிர்க்கட்சிகளின் ஏகோபித்த எதிர்ப் பிரசாரம் என்பதை எல்லாம் தாண்டி, அ.தி.மு.க பெற்றிருக்கும் முக்கிய வெற்றி இது. கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலைவிட 16 இடங்கள் குறைவு. பெரிய கூட்டணிக் கட்சிகள் எதுவும் இல்லாததால் 232 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தினார் ஜெயலலிதா.

ஒரு வகையில் அந்த முடிவே அ.தி.மு.க-வின் வெற்றிக்கு அடித்தளம். மற்றபடி, தி.மு.க-வின் பலவீனம், பலமுனைப் போட்டி என்பவை எல்லாம் அதன் பிறகுதான். `எம்.ஜி.ஆருக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாவது முறை ஆட்சியைப் பிடித்த தலைவர் ஜெயலலிதா’ என்று பெருமிதம்கொள்கிறார்கள்.  உண்மைதான்... என்ன ஒன்று, இந்தச் சாதனையை 50-களில் காமராஜரும் 70-களில் கருணாநிதியும் செய்திருக்கிறார்கள். அவர்களின் அடியொற்றி எம்.ஜி.ஆர்., இப்போது ஜெயலலிதா.

முழுக்கவே பெண்களைக் கவரும் தேர்தல் அறிக்கையால் வென்றதா அ.தி.மு.க.?

மொத்த வாக்காளர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். ஆகவே, ஆட்சியாளரைத் தீர்மானிப்பதில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக இருந்தது. தவிரவும், முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு பெண். தனி ஒரு நபராக அரசியல் களத்தில் இருக்கிறார். அவரை அனைத்து ஆண் தலைவர்களும் சுற்றிவளைத்து விமர்சனம் செய்கிறார்கள். ஆகவே, அவருக்கு அனுசரணையாக நாம் இருக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்ட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, இந்தத் தேர்தலில் அதிகமாகி யிருப்பது நிரூபணமாகியிருக்கிறது.

இன்னும் கொஞ்சம் உடைத்துச் சொன்னால்... சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றதையோ, அல்லது மேல்முறையீட்டில் அவர் சிறைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பையோ பெண்கள் பலரும் உள்ளார்ந்து விரும்பவில்லை. அது அ.தி.மு.க-வின் ஆகப்பெரிய பலம். இன்றைய வெற்றிக்கான முக்கியக் காரணி.

பெண்களின் ஏகோபித்த கோரிக்கைகளுள் ஒன்றான மதுவிலக்கைச் சாத்தியமாக்கக்கூடிய வகையில், `படிப்படியான மதுவிலக்கு’ என்று அறிவித்தது அவருக்கான ஆதரவுத்தளத்தை விரிவுபடுத்தியிருக்கலாம். தனக்கு என சொந்த வாகனம் என்பது பெண்களின் கனவுப்பட்டியலில் ஒன்று. `50 சதவிகித மானிய விலையில் இருசக்கர வாகனம்’ அறிவிப்பு, வாகனக் கனவில் வாழும் பல பெண்களை ஜெயலலிதாவின் பக்கம் நகர்த்தியிருக்கலாம். மின்கட்டணச் சுமையை மறைமுகமாகச் சுமக்கும் பெண்களுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற வாக்குறுதி, `அப்பாடா, கொஞ்சம் சமாளிச்சுடலாம்’ என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. முக்கியமாக, பேறுகால உதவித்தொகை பெற்றோரின் நிதிச்சுமையைக் குறைக்கக்கூடிய ஒன்று.

இவை எல்லாம் சேர்ந்து, பெண் வாக்காளர்களை ஜெயலலிதாவின் பக்கம் வலுவாகத் திருப்பியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்