இது நம்ம ஆளு - சினிமா விமர்சனம்

சிம்புவின் கதையை சிம்புவிடமே சொல்லி நடிக்கவைத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

தன்னைப் பெண் பார்க்க வரும் சிம்புவிடம், அவரது முன்னாள் காதலி பற்றி கேட்கிறார் நயன். சிம்புவும் அந்தக் கதையை அப்படியே சொல்ல, `நேர்மைன்னா சிம்புடா’ என அவருக்கு ஓ.கே சொல்கிறார் நயன். நிச்சயதார்த்தம் முடிந்ததும் பூஸ்டர் பேக் போட்டு சிம்புவிடம் அவர் நாள்கணக்கில் அலைபேச, ஸ்பீக்கரில் போட்டு சிம்புவும் பதில் சொல்கிறார். இவர்கள் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போதே, சம்பந்திகள் நேரில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அதனால் திருமணம் தடைபட, என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ்.

சிம்புவின் காதலிகள், நயனின் காதலர்கள் என ரியல் கதைகளை ரீல் கதையில் சேர்த்து காக்டெயில் ஆக்கியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். அதனாலேயே கிசுகிசு கேட்கும் ஆர்வம் தாண்டி, படம் மீது எந்த ஈர்ப்பும் வராமல் போகிறது. சிம்புவின் பயோபிக் எனச் சொல்லி, வேறு யாரையாவது நடிக்க வைத்திருக் கலாம். கடமைக்கு வந்து போகிறார் சிம்பு. படத்தில் அவருக்கு மூன்று கெட்டப்கள். ஒரு கெட்டப்புக்கு தாடி வளர்த்தவர், மற்ற கெட்டப்களுக்கு உடம்பை வளர்த்திருக்கிறார். கொஞ்சம் வயது தெரிந்தாலும் ஈர்க்கிறார் நயன். பேசிக்கொண்டே இருக்கும் படத்தில், சின்ன ஆறுதல் சூரி மட்டும்தான். சந்தானமும் ஆண்ட்ரியாவும் சிம்புவுக்காக நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் சோஷியல் மீடியாவை ஒரு ரவுண்டு அடித்து பல ஒன்லைனர்களை அள்ளி வந்திருப்பது வசனத்தில் தெரிகிறது. கதையே இல்லாத குறையை மறைக்க காட்சிகளை சுவாரஸ்யமாகப் பிடித்தவர், க்ளைமாக்ஸையாவது அழுத்தமாக வைத்திருக்கலாம். எண்டு கார்டில் வந்து, தன் சோகக் கதையைச் சொல்லிவிட்டுச் செல்வது மட்டும் ஹைலைட். ஐ.டி என்றாலே  டை  கட்டிக்கொண்டுதான் அலைவார்கள் என்ற கோடம்பாக்க சம்பிரதாயத்தை, யாராவது ஒழிக்கலாம்.

முதல் பாடல் குறளரசன் பாடினால், அடுத்து சிம்பு. கடைசியில் டி.ஆர்... என படம் முழுக்க ஃபேமிலி டச். குரல் பதிந்த அளவுக்கு மெட்டுக்கள் மனதில் பதியவில்லை. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெமின் உழைப்பு வண்ணங்களாக மின்னுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்