ஜனநாயகம் காக்க...

ரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இந்தியத் தேர்தல் வரலாற்றில் இதுவரை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது; ஆனால், ரத்துசெய்யப்படுவது இதுவே முதல்முறை. இனி, மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மனுத்தாக்கல் செய்வது உள்பட அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் மறுபடியும் நடைபெறும்.

அரவக்குறிச்சியிலும் தஞ்சாவூரிலும் வெள்ளமெனப் பாய்ந்த பணம்தான் ஒரே காரணம். இதனால், முதலில் தேர்தல் தேதி இருமுறை தள்ளிவைக்கப்பட்டது. அப்போதும்கூட இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பது தடைபடவில்லை. அரவக்குறிச்சி தொகுதி ஈசநத்தம் பகுதியைச் சேர்ந்த வயதான தம்பதியருக்கு, ஓர் ஓட்டுக்கு 2,000 ரூபாய் வீதம் கட்சிக்காரர்கள் பணம் கொடுக்க முயல... அவர்கள் மறுத்தபோதும் பிடிவாதமாகத் திணித்துவிட்டுச் சென்றுள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் அந்தத் தம்பதியரின் மகன், தேர்தல் ஆணையத்துக்குப் புகார் அனுப்பியிருக்கிறார். இந்தத் தகவலை வருத்தத்துடன் பதிவுசெய்திருக்கும் தேர்தல் ஆணையம், ஒட்டுமொத்தமாக தேர்தலையே ரத்துசெய்துவிட்டது.

இது ஜனநாயகத்துக்கு நிகழ்ந்திருக்கும் மிகப் பெரிய தலைக்குனிவு. இந்தியாவின் அரசியல் விழிப்புமிக்க மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. ஆனால், இன்று அதை ஆயிரத்துக்கும் ஐந்நூறுக்கும் விலைபேசும் நிலைக்கு, வாக்களிக்கப் பணம் தரும்/பெறும் இழிவான இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. மேலிருந்து கீழாக ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தையும் ஊழலுக்குப் பயிற்றுவித்திருக்கிறார்கள். ‘இந்த அரசியல்வாதிகள் வெற்றி பெற்றுச் சென்ற பிறகு, எங்களுக்காக எதையும் செய்யப்போவது இல்லை. இப்போது கிடைப்பதையும் எதற்கு விட வேண்டும்?’ என்று எண்ணும் பலர், எந்தத் தயக்கமும் இல்லாமல் இந்த ஜனநாயக ஊழலில் கை நனைக்கிறார்கள்.

தேர்தல் ஆணையமே பண விநியோகத்தை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது, சட்டப்படி குற்றம். அந்தக் குற்றம் நிகழ்வதை வழிமொழியும் ஆணையம், குற்றத்தை இழைத்தவர்கள் யார் என்பதை அறிவித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டாமா? செய்த குற்றத்தை அப்படியே விட்டுவிட்டு, இன்னொரு நாள் தேர்தலை நடத்துவதால் மட்டும் என்ன பயன்? ஏற்கெனவே பண விநியோகத்தில் ஈடுபட்டவர்களோ அல்லது அந்தக் கட்சிகளைச் சேர்ந்த வேறு சிலரோதான் மறுபடியும் வேட்பாளர்களாக வரப்போகின்றனர். அவர்கள் எந்தவகையில், இப்போதைய தவறுகளுக்குத் தீர்வாக இருப்பார்கள், அவர்கள் மீண்டும் பண விநியோகத்தில் ஈடுபட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம், அப்படி மீண்டும் ஒரு பண விளையாட்டு நிகழ்ந்தால், அதைத் தடுப்பதற்கு ஆணையம் என்ன செயல் திட்டம் வைத்திருக்கிறது, இந்த இரண்டு தொகுதிகளில் பண விநியோகம் நடந்ததால் தேர்தல் இல்லை என்றால், மீதம் உள்ள 232 தொகுதிகளிலும் பண விநியோகம் நடைபெறவில்லை என்கிறதா தேர்தல் ஆணையம்?

இப்படி ஆயிரம் கேள்விகள் முளைக்கின்றன. பதில் அளிக்கவேண்டிய ஆணையமோ, தேர்தலைத் தள்ளிவைப்பதையும் ரத்துசெய்வதையும் மட்டுமே தீர்வாக முன்வைக்கிறது. ஆனால் நம் முன்னே இருக்கும் சிக்கல், மிகக் கடினமானது. இத்தனை எளிய முறையில் அதற்குத் தீர்வு கண்டுவிட முடியாது. ஜனநாயகத்தின் உயிர் நரம்பில் புது ரத்தம் பாய்ச்சும் ஓர் அறுவைசிகிச்சையே இதற்கான தீர்வு. அதற்கு முன்பாக... தங்களுக்கு பணம் கொடுக்க வருவோரை விரட்டி அடித்து, கொடுத்த பணத்தைத் திருப்பிக்கொடுத்து, ஊழலற்ற, நேர்மையான தேர்தலை உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தை ஆரோக்கியமான பாதையில் அழைத்துச்செல்ல வேண்டியது தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்களின் கடமை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்