மறுமதிப்பீடு மெகா குளறுபடி!

அலறவைக்கும் அண்ணா பல்கலைக்கழகம்அதிஷா, ஓவியம்: ஹாசிப்கான்

`சுற்றுச்சூழல் அறிவியல் தேர்வில் தோல்வி அடைவோம்’ என வித்யா எதிர்பார்க்கவே இல்லை. இன்ஜினீயரிங்கை முடித்துவிட்டு சுற்றுச்சூழல் தொடர்பான மேற்படிப்புப் படிப்பதுதான் வித்யாவின் இலக்கு. இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்த சமயத்தில்தான் சுற்றுச்சூழல் அறிவியல் தேர்வில் தோல்வி அடைந்திருந்தார் வித்யா. மூன்று நாட்களுக்கு மேல் உணவு, உறக்கம் இல்லாமல் பித்துப்பிடித்ததுபோல அமர்ந்திருந்தார். தனிமையில் விட்டால் அவ்வளவுதான் என்ற நிலை. வித்யாவின் தந்தை, உடனடியாக அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுமதிப்பீட்டு(Revaluation)க்கு விண்ணப்பித்தார். வந்த ரிசல்ட், நேர் எதிர். தோல்வி அடைந்ததாகச் சொல்லப்பட்ட அதே பேப்பருக்கு 80 சதவிகித மதிப்பெண் கிடைத்தது.

பொறியியல் கல்லூரி மாணவர்கள், அடிக்கடி சந்திக்கும் சங்கடமாக இந்தத் தோல்விகளும் அதற்குப் பிறகான மறுமதிப்பீடுகளும் மாறிப் போயிருக்கின்றன. விடைத்தாள்கள் அலட்சியமாகத் திருத்தப்படுவதும், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த பிறகு சரியான மதிப்பெண் பெறுவதும் சகஜமாகிவிட்டன. இந்த மறுமதிப்பீட்டுக்காக ஒரு பேப்பருக்கு வசூலிக்கப்படும் தொகை 700 ரூபாய். சில மாணவர்கள் ஆண்டுதோறும் இந்த மறுமதிப்பீட்டுக்காக மட்டுமே 10,000 ரூபாய் வரை செலவழிக்கிறார்கள். விடைத்தாள் நகல்களுக்கு 300 ரூபாயும், மறுமதிப்பீட்டுக்கு 400 ரூபாயும் வசூலிக்கிறது பல்கலைக்கழகம். மறுமதிப்பீட்டில் திருப்தி இல்லை என்றால், ரிவ்யூவுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு 3,000 ரூபாய்.

வித்யா ஓர் உதாரணம். இன்று தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் வித்யாவைப் போலவே அலட்சியமாகத் திருத்தப்பட்ட விடைத்தாள்களால் சிக்கலில் சிக்கிய மாணவர்களின் எண்ணிக்கை லட்சங்களைத் தொடுகிறது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது. இப்படி `ஒவ்வோர் ஆண்டும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களால் அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கிடைத்த வருமானம் எவ்வளவு?’ என அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது. கிடைத்த தகவல் கடும் அதிர்ச்சி ரகம்.

2011-ம் ஆண்டு தொடங்கி அண்ணா பல்கலைக்கழகம் இந்த மறுமதிப்பீட்டுக்காகவும், விடைத்தாள்களின் நகல் வழங்குவதற்காகவும் மாணவர்களிடம் இருந்து வசூலித்த தொகை 75 கோடி ரூபாய். `ஆன்லைன்ஆர்டிஐ.காம்’ என்ற அமைப்பின் சார்பில் கேட்கப்பட்ட தகவல்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் ‘விடைத்தாள் நகல் களுக்காக 28.82 கோடி ரூபாயும், மறுமதிப்பீட்டுக்காக 46.65 கோடி ரூபாயும்’ வசூலிக்கப்பட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வசூலிக்கப்பட்டிருப்பது இத்தனை கோடி என்றால், எத்தனை ஆயிரம் மாணவர்களின் விடைத்தாள்கள் தவறாகத் திருத்தப்பட்டிருக்கும்? அவர்கள் அடையும் மனஉளைச்சலுக்கு யார் பதில் சொல்வது?

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கணிசமாக உயர்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு 54,531 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை சுமார் 1.09 லட்சம் பேர். ஐந்து ஆண்டுகளில் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப் போரின் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு தவறு காலப்போக்கில் குறைய வேண்டும். ஆனால், இவர்கள் ஏதோ இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிச் செல்வதைப்போல, மறுமதிப்பீடு அவசியப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறார்கள். இதற்கு என்ன மாதிரியான இழப்பீட்டை அண்ணா பல்கலைக்கழகம் தருகிறது என்றால், ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் தோல்வியடைந்த மாணவன் மறுமதிப்பீட்டுக்குப் பிறகு தேர்ச்சிபெற்றாலும், அவன் இதற்காக கட்டிய பணம் திரும்பத் தரப்பட மாட்டாது.

தற்போது ஒரு நாளைக்கு ஓர் ஆசிரியர் அதிகபட்சம் 50 விடைத்தாள்கள் வரை திருத்தலாம். ஒரு விடைத்தாளுக்கு 20 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் சம்பளம். இவ்வளவு தொகை பெற்றும் அந்த ஆசிரியர் ஒரு விடைத்தாளை முறையாகத் திருத்தவில்லை என்றால், அந்தத் தவறுக்கு மாணவர்களிடம் பணம் வாங்குவது எப்படி சரி? இன்று வரை தேர்வுமுறையிலும் விடைத்தாள் எப்படித் திருத்தப்படுகிறது என்பதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை. விடைத்தாள் நகல்களைப் பெற்றாலும், எந்த பதிலுக்கு எவ்வளவு மதிப்பெண் என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள முடியாது. நாம் எழுதியது சரியாக இருக்கிறதா எனப் பார்த்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணப் பிக்கலாம். ஆனால், நம் விடைத்தாள் முறையாகத் திருத்தப்பட்டதா என்பதைப் பரிசோதிக்கும் வாய்ப்பே இல்லை. ஏன் மார்க் குறைந்தது, எதற்காகத் தோல்வியடைந்தோம்... என்பதைத் தெரிந்துகொள்ள முடியாது. செய்ய முடிந்தது எல்லாம், மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது மட்டும்தான்.

‘`பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்தப் பிரச்னை இல்லை. இப்போது வருவதற்குக் காரணம், சப்ஜெக்ட் குறித்த அனுபவமற்ற ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தலில் ஈடுபடுவதுதான். அதிகரித்துவிட்ட பொறியியல் கல்லூரிகளால் விடைத்தாள் திருத்துவதற்கு அதிக ஆசிரியர்கள் தேவை என்ற நிலை, சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்தது. அதுவரை `ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள்தான் விடைத்தாள் திருத்த வேண்டும்’ என்று இருந்த விதியை, `மூன்று ஆண்டுகள் அனுபவமே போதும்’ என மாற்றினார்கள். அதில் இருந்துதான் பிரச்னை அதிகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்