இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!

வால்டர் ஒயிட்

சினிமாவில் டான் வில்லன்களும் அவனுடைய குட்டைப்பாவாடைத் தோழிகளும் மட்டுமே ஆடுகிற விளையாட்டு... ஸ்நூக்கர். இந்த ஸ்நூக்கரின் உலக சாம்பியனே ஓர் இந்தியர்தான்.

ஸ்நூக்கர் ஒரு கிரிக்கெட் என்றால், அதில் பங்கஜ் அத்வானிதான் சர்வநிச்சயமாக சச்சின். உலகப் போட்டிகளில் வெற்றிகளை அள்ளிவருகிற அபார ஆட்டக்காரர். இவருடைய சமீபத்திய சாதனை ஆறாவது முறையாக `ரெட் ஸ்நூக்கர்' பட்டத்தை வென்றது. ஒரே நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆறு முறை இந்தப் பட்டத்தை வெல்வது உலக அளவில் இதுவே முதல்முறை. கூடவே, ஆசியப் போட்டியிலும் கோப்பைகளைக் குவிக்கிறார் இந்த தங்கமகன்.

ஸ்நூக்கரில் மட்டுமல்ல, பில்லியர்ட்ஸிலும் இவர்தான் உலக சாம்பியன். இரண்டுமே ஆடப்படுவது அதே பச்சை வண்ண மேஜையில்தான் என்றாலும் இரண்டும் வேறு வேறு ஆட்டம். பில்லியர்ட்ஸ் என்பது வெறும் மூன்று பந்துகளை மட்டுமே கொண்டு ஆடுகிற விளையாட்டு. ஸ்நூக்கர் 15 பந்துகளைக் கொண்டு ஆடப்படுவது. இரண்டுக்குமே ஆடும் முறைகளிலும் பின்பற்றவேண்டிய விதிகளிலும் வெற்றி உத்திகளிலும் ஏராளமான வித்தியாசங்கள். இரண்டிலுமே பங்கஜ் கில்லாடி கில்லி.

அர்ஜூனா விருது தொடங்கி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா வரை விளையாட்டுத் துறையின் அத்தனை விருதுகளையும் பெற்றவர் பங்கஜ். பில்லியர்ட்ஸில் தொடர்ச்சியாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தையும், ஆசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் பில்லியர்ட்ஸில் இருந்து ஸ்நூக்கரில் அடியெடுத்து வைத்தது 2012-ம் ஆண்டில்தான். ஆனால், இரண்டே ஆண்டுகளில் ஸ்நூக்கரிலும் உலக சாம்பியன்ஷிப் வென்று விட்டார். ஸ்நூக்கர் உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு (15 ரெட் ஸ்டாண்டர்ட், 6 ரெட்) பிரிவுகளிலும் இவரே சாம்பியன். இப்படி இதுவரை பங்கஜ் வென்றுள்ள உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் 15. ஆனால், இப்போதுதான் 30 வயது  ஆகிறது. இன்னும் 30 ஆண்டுகளுக்கு இவர் விளையாடுவார் என்கிறார்கள்!

``இத்தனை ஆண்டுகள் ஆடி, எத்தனையோ விஷயங்கள் செய்துவிட்டாலும் இன்னமும் நான் கற்றுக்கொள்வதை நிறுத்தவே இல்லை. வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, கற்றல்தான் என்னை வழிநடத்துகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை முயற்சி செய்துகொண்டே இருப்பதை பழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்... அதுதான் என்னை இயக்குகிறது'' என்கிறார் பங்கஜ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்