ஏழைகளுக்கும் எலைட் கல்வி!

செ.சல்மான், படங்கள்: உ.பாண்டி, ஈ.ஜெ.நந்தகுமார்

ப்ளஸ் டூ தேர்வு முடிவு வெளியாகும்போது எல்லாம், ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் கொஞ்சம் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால், சமீபத்தில் வெளியான ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில், ஆனந்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ராமநாதபுரத்தின் அரசுப் பள்ளி மாணவர்களும் ஏராளமான மதிப்பெண்களை அள்ளியிருந்தனர். விசாரித்தால்... `நாங்கள் எல்லோருமே  எலைட் அரசு சிறப்புப் பள்ளியில் படித்தவர்கள்’ என்றனர்!

ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமாரால் மூன்று வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது, இந்த எலைட் அரசு சிறப்புப் பள்ளி. கடந்த மூன்று வருடங்களாக தனியார் பள்ளிகளே திகைத்துப்பார்க்கும்படி, ப்ளஸ் டூ தேர்வில் பல சாதனைகள் செய்துவருகின்றனர் இந்தப் பள்ளி மாணவர்கள். இந்த ஆண்டு இந்தச் சிறப்புப் பள்ளியில் பயின்ற 68 மாணவர்களில், ஐந்து பேர் 1150 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். 1110 மதிப்பெண்ணுக்கு மேல் 15 பேரும், 1000 மதிப்பெண்ணுக்கு மேல் 22 பேரும் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்துக்கே பெருமை சேர்த்துள்ளனர். இவர்களில் 11 மாணவ மாணவிகள் மருத்துவக் கல்வி தரவரிசையில் சேரும் தகுதி வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது அதிசயம். இந்தப் பள்ளியின் மாணவர்கள் எல்லோருமே எளிய பின்னணிகளில் இருந்து வந்தவர்கள்; பலர் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள்; ஆரம்பக் கல்வியில் இருந்தே அரசுப் பள்ளியில் படித்தவர்கள்.

எப்படி சாத்தியமானது இந்தச் சாதனை?

எலைட் பள்ளியின் இந்தச் சாதனைகளுக்குப் பின்னால் ராமநாதபுர மாவட்ட முன்னாள் ஆட்சியர் நந்தகுமாரின் உழைப்பு நிறையவே இருக்கிறது. அவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ராமநாதபுர மாவட்ட கிராமப் புற, நகர்ப் புற அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள், ப்ளஸ் டூ-வில் குறைவான மார்க் பெறுவது ஏன் என்று ஆய்வில் இறங்கினார்.  தனியார் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் மருத்துவம், இன்ஜினீயரிங்... போன்ற படிப்புகளைப் படிக்க  மெரிட்டில் செல்லும்போது, இவர்கள் மட்டும் ஏன் செல்வது இல்லை, இவர்களுக்கு என்ன  சிக்கல்... என்பதைக் கண்டறிந்தார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேல்நிலை வகுப்பில் முறையான பயிற்சி கிடைப்பது இல்லை என்பதை அறிந்து, உடனடியாக அதைச் சரிசெய்ய முடிவெடுத்தார். 
இதைப் பற்றி மாநிலத் திட்டக்குழுவில் முறையிட்ட நந்தகுமார், சமச்சீர் வளர்ச்சித் திட்ட நிதியில் இருந்து எலைட் பள்ளி அமைப்பதற்கான வேலைகளைத் தொடங்கினார். 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பமானது பள்ளி. மூன்று ஆண்டுகளுக்குள் இந்த மகத்தான சாதனை. இன்று மாவட்டத்தின் ஒவ்வோர் ஊரிலும் இப்படி ஒரு பள்ளி வேண்டும் என்று கேட்கிறார்கள்.  தங்கள் பிள்ளைகளை இந்த எலைட் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர் பெற்றோர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்