சுடர்விடும் நம்பிக்கைகள்! - தலையங்கம்

த்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் வெற்றி குறித்த செய்திகள் மகிழ்ச்சி தருகின்றன. பொது சமூகத்தின் மனம், அரசுப் பள்ளிகளின் வெற்றியைக் கொண்டாடுகிறது; வசதிக் குறைவுகள் குறித்த வருத்தங்கள் இருந்தபோதிலும், அதன் வெற்றியைத் தனதாகக் கருதி மகிழ்கிறது. இந்த மகிழ்ச்சி, தனக்கும் தனக்கு முந்தைய தலைமுறைக்கும் கல்வியின் வாசலைத் திறந்துவிட்ட அரசுப் பள்ளிகள் மீதான நன்றியுணர்ச்சியில் இருந்து பிறக்கிறது. அதைவிட முக்கியமாக, சமூகத்தின் பெரும்பகுதி மக்களுக்கு அரசுப் பள்ளிகளின் தேவை  முன் எப்போதையும்விட இப்போது மிக அதிகமாக இருக்கிறது.

ஏனெனில், தனியார் பள்ளிகளில் பணத்தைக் கொட்டி மாளவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வந்தால் பெற்றோர்கள் பெரும்கடன்காரர்களாகிறார்கள். அவ்வளவு பணத்தை அள்ளிக் கொட்டினாலும் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளுக்கும் மதிப்பு இல்லை; பெற்றோர்களுக்கும் மதிப்பு இல்லை. வேறு வழியின்றி பெற்றோர்களின் கவனம் அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்புகிறது. ஏதேனும் ஒரு கொம்பைப் பற்றிக்கொள்வதற்கு அசைந்தாடும் கொடியைப்போல அவர்களின் மனம் அசைவுறும் தருணத்தில், அரசுப் பள்ளிகள் குறித்த நம்பிக்கை அளிக்கும் செய்திகள் உற்சாகம் கொள்ளச்செய்கிறது.

இப்படி தங்களை நோக்கி வருவோரை இறுகப் பற்றிக்கொள்ளவேண்டிய கடமை அரசுப் பள்ளிகளுக்கு இருக்கிறது. மேலும், எண்ணிக்கையில் அதிகமாக, மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் நற்பெயர் மிக்க அரசுப் பள்ளிகளை உருவாக்கிக் காட்டவேண்டிய சவாலும் இருக்கிறது. ஏனெனில், அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க விரும்புவோருக்கு, ‘நல்ல பள்ளி’யை அடையாளம் காண்பதுதான் மிகச் சிரமமாக இருக்கிறது. அதேநேரம், நல்ல பள்ளி என்பது யாரோ சிலர் உருவாக்கி வைத்திருக்க, நாம் போய் நம் பிள்ளைகளை அதில் சேர்த்துவிடுவது அல்ல. தங்கள் பங்கேற்புடன், செயல்பாட்டுடன் ஒரு நல்ல பள்ளியை உருவாக்கிக் காட்டவேண்டியது பெற்றோர்களின் கடமையும்தான். ஆசிரியர்கள், பெற்றோர்கள்... இரு தரப்பும் இணைந்து, சுடர்விடும் வெளிச்சப் புள்ளிகளை ஏராளமாக உருவாக்கிக் காட்டவேண்டியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளில் படித்து மதிப்பெண் தரவரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்ற மாணவர்களின் பேட்டிகளை ஊன்றிப் படியுங்கள்; பேச்சுக்களை தொலைக்காட்சிகளில் ஆழ்ந்து கவனியுங்கள். அவர்களின் பேச்சுமொழியிலும் உடல்மொழியிலும் ஒரு கம்பீரத்தைக் காணலாம். அரசுப் பள்ளி தரும் சுயசிந்தனையின் பேராற்றல் அது. உண்மையில் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை போட்டி மிகுந்த எதிர்காலத்துக்குத் தயார்ப்படுத்த விரும்பினால், அவர்கள் முதன்மையாக வழங்கவேண்டியது இந்த சுயசிந்தனைக் கல்விதான். அதை அரசுப் பள்ளிகளால் மட்டுமே வழங்க முடியும்; லாபத்தை மட்டுமே இலக்காகக்கொண்ட தனியார் பள்ளிகள், பிராய்லர் கோழிகளை மட்டுமே உருவாக்கும்.

அரசுப் பள்ளிகள் குறித்த அவநம்பிக்கைகள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டுவரும் சூழலில், அதை உடைத்து நொறுக்கி நம்பிக்கை துளிர்க்கச்செய்யும் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பையும் நாம் போற்றிப் பாராட்ட வேண்டும்.அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்; அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்ல, கைகொடுக்க வேண்டும். இது நம் கடமை. நம் தலைமுறைகள் கல்விபெறக் காரணமாக இருந்த அரசுப் பள்ளிகள் வீழ்ச்சி அடைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்