விஜய் 60 - அப் டு டேட் அப்டேட்ஸ்

ம.கா.செந்தில்குமார், படம்: ஜி.வெங்கட்ராம்

விஜய்க்கு வயது 42. `துப்பாக்கி', `கத்தி', `தெறி' என படங்கள் ஏற, ஏற இன்னும் இளமையாகிக்கொண்டே போகிறார் இளைய தளபதி. சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள், 60-வது படம் என எண்ணிக்கை கூடிக்கொண்டே போனாலும்  அதே ஸ்லிம் உடம்பும், ஸ்லீக் ஸ்டைலும், சிம்பிள் நடிப்புமாகத் தெறிக்கவிடும் விஜய்யின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் இங்கே...

இதுவரை 21 அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் விஜய். இவரின் 60-வது படத்துக்காக இன்று முன்னணியில் உள்ள எல்லா இயக்குநர்களும் கதை சொல்லியிருந்தனர். பெரும்பாலானோரின் ஸ்கிரிப்ட் பிடித்திருந்தாலும் இயக்குநர் பரதனைத் தேர்வுசெய்தது பலருக்கும் ஆச்சர்யம். ‘எதுக்கு நீங்க பரதன் சாரைத் தேர்ந்தெடுத்தீங்க?’ என அவருக்கு நெருக்கமானவர்கள் கேட்டபோது, ‘எல்லாரும் வெற்றிபெற்ற இயக்குநர்களுக்கே வாய்ப்பு தர்றாங்க. நம்ம மூலமா ஒரு இயக்குநர் வெற்றி பெற்றார்னா நமக்குப் பெருமைதானே! ஒரு வெற்றிக்காகத்தான் இந்தப் போராட்டம். பரதன் சாரும் வெற்றிக்கான மனிதர். ஒரு ஹிட் கொடுத்துட்டார்னா அவரும் ஹிட் லிஸ்ட்ல வந்திடுவார்ல’ என்றாராம்.

எம்.ஜி.ஆர் உள்பட பல சீனியர் நடிகர்களின் படங்களைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், ‘விஜய்-60’யைத் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கெனவே தயாரித்துள்ள
எம்.ஜி.ஆர் படத் தலைப்புகளில் ஒன்றுதான் இந்தப் படத்தின் டைட்டில்.

கிராமப் பின்னணியில் நடக்கும் கதை. சிறந்த வசனகர்த்தா என்பதை மீண்டும் ஒருமுறை இந்தப் படத்தில் நிரூபித்திருக்கிறாராம் இயக்குநர் பரதன். படத்தில் மொத்தம் ஐந்து பாடல்களில் மூன்று பாடல்களை பதிவு செய்துள்ளனர். அதில் ஓப்பனிங், மெலடி என இரு பாடல்களை ஷூட் செய்து முடித்திருக்கிறார்கள்.

வித்தியாசமான முயற்சி, அவார்டு வின்னிங் ஸ்கிரிப்ட் என்றால் விஜய்க்கு அலர்ஜி. ‘ஆர்வமா எதிர்பார்த்து வர்ற ரசிகர்களை சந்தோஷப்படுத்தி அனுப்புற மாதிரியான கமர்ஷியல் என்டர்டெய்னர்தான் நம்ம ஏரியா. அதைத்தான் என்கிட்ட ரசிகர்கள் எதிர்பார்க்கிறாங்க’ என்பார்.

ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரசிகர்களை தன் அடையாறு அலுவலகத்துக்கு வரவழைத்துச் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஒரு முழுநாள் அவர்களுடன் இருந்து, ஒவ்வொருவருடனும் தனித்தனியாக போட்டோ எடுத்துக்கொள்வார். என்னதான் பிஸி ஷெட்யூல் இருந்தாலும், இந்தச் சந்திப்பு தவறாமல் நடக்கும்.

  ஒரு பிரபல நடிகரின் மகன், இவரின் தீவிர ரசிகர். சமீபத்தில் விபத்தில் சிக்கியவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுத் தேறிவருகிறார். ஓரளவு தேறிவந்தவர் கண் விழித்தபோது ‘தெறி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போட்டோஸ் வந்துள்ளது. அதைப் பார்த்தவர் அவரை அறியாமல் ‘தெறி’ எனச் சொல்லியுள்ளார். அதை அந்த நடிகர் விஜய்யிடம் ஷேர் செய்ய, விஜய் அப்போது கோவாவில் ஷூட்டிங்கில் இருந்துள்ளார். ‘நான் சென்னைக்கு வந்ததும் முதல் மீட்டிங் அந்தப் பையனைச் சந்திப்பதாகத்தான் இருக்கும்’ என்றவர், சென்னை வந்ததும் ஏர்போர்ட்டில் இருந்து நேராக அந்த நடிகரின் வீட்டுக்குப் போயிருக்கிறார். மகிழ்ச்சியில் நடிகரின் மகன் விபத்துக்குப் பின்னர் முதல்முறையாகச் சிரிக்க ஆரம்பித்திருக்கிறான்.

இரண்டு மணி நேரம் இருந்து ஜாலியாகப் பேசியவர், அவனின் போனை எடுத்து தன் பெர்சனல் செல் நம்பரை சேவ் செய்து கொடுத்துவிட்டு, ‘நீ எப்பவேனா என்கிட்ட பேசலாம். நீ எப்ப என்னைச் சந்திக்கணும்னு நினைச்சாலும் கூப்பிடு. நான் வந்துடுறேன்’ எனச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதேபோல முதல் மீட்டிங்குக்குப் பிறகு இரண்டு முறை மீண்டும் சந்தித்திருக்கிறார்கள்.

  அரை மணி நேரம் ஜாகிங் அல்லது ட்ரெட்மில் வாக்கிங். இதைத் தாண்டி ஜிம்மில் பெரிதாக நேரம் செலவிடுவது இல்லை.

காலை டிபன் இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை. மதியம் சிக்கன் ப்ளஸ் சப்பாத்தி. சப்பாத்தி குறைவாகவும் சிக்கன் அதிகமாகவும் இருக்க வேண்டும். மாலையில் டீ, காபி அல்லது சூப். கொஞ்சம் பிஸ்கட். இரவு மீண்டும் இட்லி, தோசை. ஆனால், இரவு 7 மணிக்குள் சாப்பாட்டை முடித்துவிடுவார். 10 மணிக்கு தூங்கச் சென்றுவிடுவார்.

  படப்பிடிப்பில் பல நடிகர்கள் வெளியில் இருந்து சாப்பாடு எடுத்துவரச் சொல்லி சாப்பிடுவார்கள். ஆனால், இவருக்கு எல்லோரும் சாப்பிடும் புரொடக்‌ஷன் சாப்பாடுதான்.

‘வயிற்றை ஃபில் பண்ணாதே’ இதுதான் விஜய்யின் டயட் மந்திரம். எவ்வளவு பசித்தாலும் எவ்வளவு ருசித்தாலும் கால் வயிறுக்குமேல் சாப்பிட மாட்டார். சிந்தி, சிதறி, வீணாக்கி... கசகசவென சாப்பிட மாட்டார். ஹோட்டலோ, வீடோ உணவை வீணாக்குவது பிடிக்கவே பிடிக்காது.

மட்டனைத் தொட மாட்டார். மீன் ரொம்பப் பிடிக்கும்.

  மாதம் ஒருமுறை சென்னைக்குள்ளேயே ஃபேமிலி அவுட்டிங் போவார். எந்த இடம் என்பதை முடிவுசெய்வது, மகன் சஞ்சய். பெரும்பாலும் அது சிட்டிக்குள் ஏதாவது ஒரு ஹோட்டலாகவே இருக்கும்.

  பி.எம்.டபிள்யூ, மினி கூப்பர், ரோல்ஸ்ராய்ஸ் என வீட்டில் பல கார்கள் இருந்தாலும், கறுப்பு வண்ண ஸ்விஃப்ட்டைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார். அனைத்து கார்களுக்குமே ஃபேன்சி நம்பர்கள்தான். ஆனால், எல்லா கார்களுமே வெவ்வேறு எண்களில் இருக்கும்.

  தானே கார் ஓட்டிக்கொண்டு லாங் டிரைவ் போகப் பிடிக்கும். பல சமயங்களில் நீலாங்கரை வீட்டில் இருந்து அடையாறு ஆபீஸ் வரை அவரே கார் ஓட்டிக்கொண்டு வந்துவிடுவார்.

  டைம் மேனேஜ்மென்ட்டில் பின்னி எடுப்பார். ‘சாரோட கார் நுழைஞ்சா மணி ஏழு’ என இப்பவும் எப்பவும் ஷூட்டிங்கில் பேசிக்கொள்வார்கள். ‘ `வர்றேன்'னு சொன்னீங்க. ஏன் இன்னும் வரலை?’ என போன் அடிக்காமல், தன்னைச் சந்திக்க வருவர்களுக்காக ஒரு மணி நேரம்கூடக் காத்திருப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்