வருது 50/50 வருது... - உள்ளாட்சியில் இனி பெண்ணாட்சி!

ஜோதிமணி

`உள்ளாட்சி அமைப்புகளில் நடை முறையில் இருக்கும் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு, தமிழ்நாட்டில் 50 சதவிகிதமாக உயர்த்தப்படும்' என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த முன்னெடுப்பு இது. எனினும், இது சர்ச்சைகளைக் கிளப்பவும் தவறவில்லை.

இது தேவை இல்லை என்பவர்கள் முன்வைக்கும் வாதம், `பெண்களால் சிறப்பாகச் செயல்பட முடியாது. அவர்களுக்கு அரசியல், நிர்வாக அறிவு குறைவு. 33 சதவிகித இடஒதுக்கீட்டிலேயே பெரும்பாலும் பெண்கள், ஆண் தலைவர்களுக்குப் பினாமிகளாகவும், கையெழுத்து மட்டுமே போடும் தலையாட்டிப் பொம்மைகளாகவும்தான் இருக்கிறார்கள்' என்பதுதான்.

சுதந்திரம் அடைந்து ஏறக்குறைய 46 ஆண்டுகள் வரையிலும், மக்கள்தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய வர்களே அரசியல் அதிகாரத்தில் அமர முடிந்திருக்கிறது. 100 கோடி மக்களை சில ஆயிரம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குப் பெயர்தான் உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என நாம் நம்பியிருந்த காலம் அது. அதற்கான நியாயங்களும் இருந்தன.

அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

அது ஒரு குறிப்பிட்டப் பிரிவினரிடம் மட்டுமே தொடர்ந்து தக்கவைக்கப்பட்டிருக்காமல், சாமானியரும் தலைமை இடத்துக்கு முன்னேறி தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப் பட்டதுதான் பஞ்சாயத்ராஜ்.

பஞ்சாயத்ராஜ் சட்டத்தை அறிமுகப்படுத்தும் போதே தலித்கள், மலைவாழ் மக்களுக்கான கட்டாய இடஒதுக்கீட்டோடு அறிமுகப்படுத் தினார் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி. கூடவே அதில் பெண்களுக்கான 30 சதவிகித இடஒதுக்கீடும் உறுதிசெய்யப்பட்டது. அவரின் மரணத்துக்குப் பிறகு, 1993-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் நாள் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் 73, 74-வது சட்டத்திருத்தத்தின் மூலம் 33 சதவிகித இடஒதுக்கீடாக ராஜீவ் காந்தியின் முயற்சியை சாத்தியப்படுத்தினார். இந்தச் சட்டத்தை நிறைவேற்றிய பிறகு, நரசிம்மராவ் ஆற்றிய உரை மிக முக்கியமானது.

`இந்தியாவின் மக்கள்தொகையில் பெண்கள், சரிபாதி உள்ளனர். ஒட்டுமொத்த ஊரகப் பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு ஆண்களின் பங்களிப்பைவிட அதிகம். ஆனால், அவர்களின் கைவசம் உள்ள சொத்துக்கள், வருமானம் மிகவும் சொற்பம். மேலும், கிராமப்புறங்களில் வீடுகளின் நிதி நிர்வாகம் பெண்கள் வசமே உள்ளது. பெண்களின் தொலை நோக்கு, சிக்கனம், நிதி நிர்வாகம் ஆகியவை சிறப்பாக உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இவை அவசியமான பண்புகள்.

பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் கூடுதல் பிரதிநிதித்துவம் தருவதன் மூலம், அவர்களுக்கான இடங்கள் மட்டும் அதிகரிப்பது இல்லை; இந்த அமைப்புகளைச் செயல்திறன் மிக்கதாக, நேர்மையானதாக, கட்டுக்கோப் பானதாக,கூடுதல் பொறுப்புமிக்கதாகவும் மாற்றும்.

அறப்பண்பின் வலிமையை பெண்கள் உள்ளாட்சி அமைப்புக்கும் ஊட்டுவார்கள். அவர்களை வரவேற்போம்' எனக் குறிப்பிட்டார்.

எப்போதும் கருத்து கேட்டு அறியாத, அவர்களுக்கும் ஒரு கருத்து இருக்கும் என்றுகூட நினைத்துப்பார்க்காமல் ஒடுக்கப்பட்ட மக்களின் கையில் அதிகாரம் வந்துசேர்ந்தது. ஒரு சட்டத் திருத்தத்தின் மூலம் 10 லட்சம் பெண்கள் அதிகாரம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.

ஆனால், ஒரே நாளில் 10 லட்சம் பெண்களுக்கு எங்கே போவது? வேறு எங்கே... அடுப்படிக்குத்தான். `அதிகாரம் போச்சே!' என நொந்துபோய் இருந்த ஆண்கள், ஒரே இரவில் புரட்சிக்காரர்களாக உருவெடுத்தார்கள். உடனடியாக தங்கள் மனைவியை, மகளை, சகோதரியை அரசியல் களத்துக்கு அழைத்துவந்தார்கள். அதற்கு அவர்கள் சம்மதத்தை எல்லாம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இந்தப் பிரமாண்டத் தேடலில், ஆண் தலைவர்களை எதிர்த்து நிற்கக்கூடிய, தனக்கான உரிமைக்காகப் போராடும் பெண்களும் களத்தில் கணிசமாக இறங்கினர். இப்படித்தான் இங்கே பெண்களுக்கான அரசியல், அதிகாரப் புரட்சியும் பரவலும் நிகழ்ந்தன.

இந்தச் சட்டம் இயற்றப்பட்டு, 1996-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட 1,16,488 பேரில், 39,364 பேர் பெண்கள். மிகப் பெரிய மாற்றத்தின் முதல்படி. ஆனால், அவர்களுக்கான போராட்டங்களும் சவால்களும் இதற்குப் பிறகுதான் தொடங்கின. அவர்களை, தலைவர்களாக அல்ல... மனுஷிகளாகக்கூட அதிகாரிகள் மதிக்கவில்லை. அரசியலின் உள்ளாட்சி நிர்வாகத்தின் நுட்பங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் சுயமரியாதைக்கு எப்போதும்போலவே சோதனை மேல் சோதனை வந்தது. `தலைவர் வரலீங்களா?’ என எந்த நேரமும் கணவர்களையே விளித்தனர். `அப்ப நான்?’ என பல பெண் தலைவர்கள் குழம்பி நின்றனர்.

காசோலையில் கையெழுத்துப் போடுவதற்கு மட்டும் போதும் என்ற நிலைதான் நீடித்தது. (அந்தக் கையெழுத்தையே, தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, போட்டுப் பழகிய பெண்கள் பலர்!) ஆனால், இது எதுவும் அவர்களைப் பாதிக்கவில்லை.

விருதுநகர் மாவட்டத்தில் சுவாரஸ்யமான ஒரு சம்பவம். பெண் தலைவர்களும் ஆண் தலைவர்களும் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்றனர். பெண் தலைவர்கள் தங்களுக்கான பிரத்யேகப் பிரச்னைகளையும் பேச வேண்டும் என வந்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் அறையில் முதல் மூன்று வரிசையில் ஆண்கள் அமர்ந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மட்டும் பேசிக்கொண்டிருந்தார். சந்திப்பு முடிந்தது. பெண்கள் தங்கள் பிரச்னைகளை வலியுறுத்த முனைந்தபோது, ஆண்கள் `அதை வெளியில் பேசிக்கொள்ளலாம்' எனச் சொல்லிவிட்டனர்.

இந்த நிலை மாறுவதற்கான அறிகுறியே இல்லை. உடனடியாக பெண் தலைவர்கள் தங்களுக்கு என ஓர் அமைப்பு வேண்டும் என உணர்ந்தனர். இப்படியாகத்தான் காந்தி கிராமப் பல்கலைக்கழக உதவியோடு தமிழகத்தில் `பெண் ஊராட்சித் தலைவர் கூட்டமைப்பு’ உருவானது. பிறகு, தமிழகம் முழுவதும் நிறையக் கூட்டமைப்புகள் உருவாகின. மிகத் தீவிரமாக, உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய போராட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் நடத்தியபோது, இந்தக் கூட்டமைப்புகள் அவர்களுக்குத் துணைநின்றன.

சோறாக்கிக்கொண்டிருந்த பெண்கள், சும்மா இருக்கவில்லை. நேர்மையோடும் நிர்வாகத் திறமையோடும் இருந்த பெண்களில் பலர், அந்தக் கம்பசூத்திரத்தை விரைவில் கற்றுத் தேர்ந்தனர். அவர்களில் கணிசமானவர்கள், கல்வி அறிவு அற்றவர்கள், வர்க்க, சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்கள், வீதிகளில் செருப்புகளுடன் நடக்க அனுமதிக்கப் படாதவர்கள், வறுமையின் நிழலில் இளைப்பாறப் பழகியவர்கள், அந்நிய ஆண்களைக் கண்டால் அவசர அவசரமாக முக்காட்டை இழுத்து முகத்தை மூடிக் கொள்பவர்கள். ஆனால், அவர்கள் அத்தனை பேரும் அனுபவம் நிறைந்தவர்கள், அசாதாரணமான தைரியம் கைவரப்பெற்றவர்கள். நிர்வாகத்தில் கைதேர்ந்தவர்கள் (கணவன் தரும் சொற்பக் காசில் குடும்ப நிர்வாகம் செய்து பழக்கப்பட்டவர்கள் இல்லையா!) ஆண்களின் ஆதரவோடும் தன்னிச்சையாகவும் செயல்படத் தொடங்கினர். ஆண்களின் சொல்படி நடப்பதில் இருந்து பலர் விடுபட்டனர்.

ஆனாலும் இந்த உலகம் ஒட்டுமொத்தமாக அவர்களை ‘பினாமிகள்’ எனப் பெயர் சொல்லி அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தது. ஆண்டு ஆண்டுகாலமாக அடுப்படியிலும் விளைநிலங்களிலும் தொழிற்சாலைகளிலும் தங்களை மெழுகுவத்தியாக உருக்கிக்கொண்டு, வெளியுலகத்தைப் பற்றி கவலைப்படக்கூட நேரம் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த பெண்களை ஒரு வாய்ப்பு கிடைத்ததும் நீச்சல் தெரியாதவர்களைக் கிணற்றில் தள்ளிவிடுவதுபோல தள்ளிவிட்டு, அவர்கள் ஏன் தங்கப்பதக்கம் வாங்கவில்லை என அலறுகிற சமூகம்தானே நம்முடையது!

ஆனால் இதே சமூகம், சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எழுந்து ஒரு வார்த்தைகூட பேசியிராத ஆண்களைப் பற்றி என்றாவது விமர்சித்திருக்கிறதா? தொகுதிக்குள் எட்டிக்கூடப் பார்த்திராத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைத்திருக்கிறதா? பெரும்பாலான ஆண் பிரதிநிகள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதற்காக ஆண்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர்கள் என்ற முடிவுக்குதான் வந்திருக்கிறதா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்