ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 1

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய தொடர் - 1ம.செந்தமிழன், படம்: அய்.அசோக்

திரும்பிச் செல்லுதல் எப்போதும் இன்பம் தரக்கூடியது. எங்கு திரிந்தாலும் வீடு திரும்ப வேண்டும். வீடு என்பது, குடியிருக்கும் இடத்தையும் குறிக்கும்; இறையின் திருவடியையும் குறிக்கும். அலைவதும் திரிவதும் திரும்பிச் செல்வதற்காகத்தான் என்பதைப் புரிந்துகொண்டால், இன்பம் குடிகொள்ளும்.

முன்னேற்றம் என்ற கருத்து வலுவாகவும் கருணையற்ற வகையிலும் முன்வைக்கப்படும் காலம் இது. `முன்னேறி முன்னேறி எங்கு செல்வது?' என்ற கேள்வியைக் கேட்டால், எவரிடமும் பொருத்தமான விடை இல்லை. `முன்னேற்றத்துக்கான பாதை கடுமையானதாகவும் சுயநல வெறிகொண்டதாகவும் இருக்கிறதே... இது சரியா?’ என்ற கேள்விக்கும் பொருத்தமான விளக்கம் இல்லை. `இவற்றை எல்லாம் கண்டு கலங்கினால், நீ அடைய வேண்டிய இலக்கை அடைய முடியாமல்போகும். ஆகவே, ஓடு… ஓடு… நிற்காதே’ என்ற அறிவுரை எல்லா தரப்பிலும் வழங்கப்படுகிறது.

சொர்க்கத்தை அடைவதுதான் உங்கள் இலக்கு என்றால், அதற்கான பாதை நரகமாக இருக்க முடியாது.

வறண்ட ஆறுகளில் காய்ந்துகிடக்கும் நாணல் கோரைகள், தொழிற்பேட்டைகளுக்காக அழிக்கப்பட்ட மேய்ச்சல் காடுகளில் இருந்து தப்பி ஓட வழியின்றி வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் பாம்புகள், ரசாயன நஞ்சுகள் கடலில் கலக்கப்பட்டதால் பெருங்கூட்டமாகச் செத்துக் கரை ஒதுங்கும் திமிங்கலங்கள் எல்லாம் வளர்ச்சிக்காகப் பலிகொடுக்கப்படுபவைதான். `எந்தக் கேள்வியும் கேட்காதே, எல்லாம் முன்னேற்றத்துக்காக. நிற்காதே, திரும்பிப் பார்க்காதே, போய்க்கொண்டே இரு’ என்ற சிந்தனை ஆட்டிப்படைக்கும் காலம் இது.

பூமியைக் காப்பது பற்றி நான் உரையாடப்போவது இல்லை. ஏனெனில், பூமிக்குத் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளத் தெரியும். மலைகளை வெட்டுகிறீர்களா? நன்றாக வெட்டுங்கள். பெருங் கடல்களுக்குக் கீழே உள்ள கண்டத் திட்டுகளை சில அடிகள் நகர்த்திக்கொண்டால், கடலுக்கு மேலே புத்தம் புதிய மலைகள் முளைத்து வந்து விடும். இமயமலை பூமியால் அப்படி உருவாக்கப் பட்டதுதான். பெருங்கடலுக்கு அடியே உள்ள கடின நிலத்தை ஓரிரு ஆழிப்பேரலைச் சீற்றங்கள், சில நிலநடுக்கங்கள் வழியாக அப்படியே மேலே கொண்டுவந்துவிடுவது பூமிக்கு எளிதான செயல். இமயமலையின் உச்சியில் இப்போதும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கிடைக்கின்றன.

எரிவாயு எடுக்கிறீர்களா? நன்றாக எடுங்கள். அதற்காக நிலத்தைத் தோண்டி நிலத்தடி நீரை உறிஞ்சித் துப்புகிறீர்களா? நன்றாகத் துப்புங்கள். ஒரே ஒரு நிலப்பிளவு, நிலத்தின் மேல் உள்ள பல கோடி உயிரினங்களை உள்ளே விழுங்கிக் கொள்ளும். அந்த உயிரினங்கள் யாவும் மட்கி, எரிவாயுவாகவும் தங்கமாகவும் வைரமாகவும் நிலக்கரியாகவும் இன்னும் பல விலைமதிப்பற்ற ‘செல்வங்களாகவும்’ மாற்றப்படும்.

காடுகளை அழிக்கிறீர்களா? நன்றாக அழியுங்கள். ஒரே ஒரு பெருமழை, காடுகளை அழித்து நீங்கள் நட்டுவைத்த வண்ணக்கொடிகளையும் கட்டி வைத்தக் கட்டடங்களையும் விழுங்கிச் செரித்துவிடும். ஆகப்பெரிய அரண்மனைகளின் மதில்களில்கூட அரசமரங்கள் முளைத்துக்கிடக்கும்.

பூமி, தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும். அதற்குப் பின்னர், `முன்னேற்றம்', `வளர்ச்சி' போன்ற சொற்கள் எழுதப்பட்ட புத்தகங்களும் பதாகைகளும் ஏதோ ஒரு கடலுக்கு அடியில் அல்லது ஏதோ ஒரு பனிமலையின் உச்சியில் சிதைந்துகிடக்கும் கழிவுகளாகத்தான் இருக்கும்.

இயற்கையைச் சீரழித்து வளர்ச்சி காணுதல் என்பதன் உண்மையான பொருள், மனிதகுலம் தன்னைத்தானே அழித்துக்கொள்வதுதான். ஏனெனில், மனிதர்களும் இயற்கையின் அங்கங்கள் தான். இயற்கை வேறு, மனிதர் வேறு என்ற மயக்கத்தை நவீன அறிவியல் நிலைநாட்டியுள்ளது. இயற்கையின் பார்வையில் வளர்ச்சி என்பது, முடிவை நோக்கிய பயணத்தைக் குறிக்கிறது.

வெகுவேகமாக வளரும் முருங்கைமரங்கள் எளிதில் முறிந்துபோகின்றன. மிகவும் நிதானமாக வளரும் பனைமரங்கள் கல் போன்று உறுதியாக நிற்கின்றன. நாற்பதே நாட்களில் வளர்ந்து, அறுபது நாட்களில் பூக்கும் குரோட்டன் செடிகள் யாவும் தண்ணீரின் சலசலப்பில்கூட வேர்களை இழந்து சரிகின்றன. பொறுமையாக வளரும் கள்ளிச்செடிகள் கடும் வறட்சியையும் பெருமழையையும் தாங்கி, வேர்களை இழக்காமல் நீடிக்கின்றன. ஆமைகளின் வளரும் வேகமும் நகரும் வேகமும் குறைவு. அவற்றின் ஆயுள், நூற்றாண்டுக்கணக்கில் நீள்கிறது. பிறந்த சில நாட்களில் இறக்கை வளர்த்து, ஒரு நொடிக்கு பல நூறு முறை படபடத்துப் பறக்கும் பூச்சியினங்கள் யாவற்றின் ஆயுட்காலமும் வாரக்கணக்கில் அடங்கிவிடுகிறது.

வளர்ச்சி எப்போதுமே முடிவை நோக்கியதுதான். வாழ்க்கையும் அப்படியே. ஆனால், அந்த வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்கள் முடிவுக்கு விடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்