திரைத்தொண்டர் - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பஞ்சு அருணாசலம்

‘அன்னக்கிளி’ படத்துக்கான பாடல் ரிக்கார்டிங். ‘டேக்’ சொல்லி ஜானகி ஹம் பண்ணத் தொடங்கிய அடுத்த செகண்டே கரன்ட் கட். ‘ஆரம்பமே அமர்க்களமா இருக்கே...’ என்பதுபோல இசைக் கலைஞர்களுக்குள் ஏளனப் பேச்சு. ராஜா வருத்தமாக அமர்ந்து இருந்தார். ‘`ஏன் இப்ப என்னாச்சு, கரன்ட் வந்த பிறகு எடுத்துக்கலாம். உடனடியா எடுத்து சுடச்சுட சாப்பிடவா போறோம். ரிலாக்ஸா இரு'’ என்றேன்.

கரன்ட் வந்தது. டேக் போனோம். ‘அன்னக்கிளி உன்னைத் தேடுதே...’ பாடலை ஜானகி பெர்ஃபெக்ட் டாகப் பாட, எல்லாரும் கைதட்டினார்கள். அப்போது மோனோ ரிக்கார்டிங் என்பதால், பாடல் பதிவானதும் திரும்ப ஒருமுறை போட்டுக் கேட்போம். அனைத்தும் சரியாக இருந்தால், அதையே ஃபைனலாக வைத்துக்கொள்வோம். அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்யவேண்டும் என்றால், இன்னொரு டேக் போவோம்.

அப்போது அங்கே ரிக்கார்டிஸ்ட்டாக இருந்தவர் மாணிக்கம். அவரின் உதவியாளர் சம்பத். ரிக்கார்ட் செய்ததைக் கேட்போம் என நினைத்து, ‘`ப்ளே பண்ணுங்க சம்பத்'’ என்றார் ராஜா. அவரும் ப்ளே பண்ணினார். ஆனால், ‘ம்ம்ம்...’ என சத்தம் வருகிறதே தவிர, பாடல் வரவில்லை. உதவியாளர் சம்பத், சுவிட்ச் ஆன் செய்ய மறந்துவிட்டார். எதுவுமே ரிக்கார்டு ஆகவில்லை. அவருக்கு பயத்தில் கை, கால் வியர்த்துவிட்டன.

‘`ஸாரி சார், இன்னொரு டேக் போகலாம்'’ என்றார். ‘என்னடா இது, இரண்டாவது முறையும் இப்படி நடக்குதே’ என நினைத்திருப்பார்போல. ராஜாவுக்கு மேலும் வருத்தம்.  சகுனம் பார்ப்பது, எனக்கு இயல்பாகவே பிடிக்காது. அப்படி சகுனம் பார்த்து எடுக்கப்பட்ட எத்தனையோ என் படங்கள் பாதியில் நின்றுபோயிருக்கின்றன. அதனால் நான் எப்போதும் திறமையை மட்டுமே நம்புவேன். இந்த விஷயங்களை எல்லாம்  ராஜாவிடம் சொல்லி, அவரைத் தேற்றினேன். இப்படி ‘அன்னக்கிளி’ பாடல்கள் பதிவு செய்யப்பட்ட சமயத்தில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள்.

அந்தச் சமயத்தில் தி.நகர் மூசா தெருவில் என் வீட்டுக்கு அருகில் குடியிருந்தவர் இயக்குநர் தேவராஜ். எங்க ஊர்க்காரரான அவர், தினமும் காலையில் என் வீட்டுக்கு வந்துவிடுவார். அவருக்கு, காரைக்குடிக்கு அருகில் ஆராவயல். ஆனால், ஊரில் இருக்கும்போது அவர் எனக்கு பழக்கம் இல்லை. சென்னை வந்த பிறகுதான் அறிமுகம். அவர், இயக்குநர் மாதவனின் உதவியாளர். நான் வாய்ப்புக்காக அலைந்த காலத்திலேயே அவரைத் தெரியும். கவிதை மனதுக்காரர். ரசித்து ரசித்து எடுப்பதுதான் அவரின் வொர்க்கிங்ஸ்டைல். ‘நான் படம் பண்ணும்போது நீங்கதான் டைரக்டர்’ என அப்போதே அவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். அதனால் இயக்குநராக அவரையும், சிவகுமார் சார், சுஜாதா என ஆர்ட்டிஸ்ட்டுகளையும் புக் பண்ணினேன்.

‘அன்னக்கிளி’க்கான லொக்கேஷன் இதுவரை சினிமாவில் யாரும் பார்த்திராத இடமாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதுபற்றி சிவகுமார் சாரிடம் சொல்லிக்கொண்டு இருந்தபோது, ‘நான் பார்த்துட்டு வர்றேன்’ என அவரே லொக்கேஷன் பார்க்கப் போனார்.

ஒரு வாரம் சுற்றிப்பார்த்துவிட்டு தெங்குமரஹாடா என்ற மலைப்பகுதியைப் பற்றிய செய்தியுடன் வந்தார். அது அப்போது கோவை மாவட்டத்தில் சத்தியமங்கலம் தாண்டி பெரிய அளவில் அறிந்திடாத இடம். அங்கு மொத்தமே 10 வீடுகள்தான். அதில் ஒன்றிரண்டு ஓட்டு வீடுகள். மற்றவை அனைத்தும் குடிசைகள். அந்தப் பகுதிக்குப் போவதாக இருந்தாலோ, அங்கு இருந்து வருவதாக இருந்தாலோ, அது காலை ஒன்பது மணிக்குள் நடந்துவிட வேண்டும். காரணம், அங்கு ஓடிவரும் சின்ன நதி. ஆரம்பத்தில் சலசலவென தெளிந்த நீரோடைபோல ஓடிவரும் நதி, நேரம் ஆக ஆக குபுகுபுவெனக் காட்டாறாகப் பொங்கி வழியும். அதனால், 10 மணிக்கு மேல் ஆற்றைக் கடக்க முடியாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்