ஆயிரம் சூரியன் ஆயிரம் சந்திரன் ஒரே ஒரு பூமி - 2

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புதிய தொடர் - 2ம.செந்தமிழன், படம்: வி.பால் கிரேகோரி, ஓவியம்: ஹாசிப்கான்

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் கருத்தை ஆசான் திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். `முன்னோர் எவ்வளவோ அறக் கருத்துகளை எழுதிச் சென்றிருக்கிறார்கள். அவை அனைத்திலும் முதன்மையானது ‘பல்லுயிர் ஓம்புதல்’. `ஓர் உயிரினத்தைப் பயன்படுத்திக்கொண்டே பாதுகாக்கவும் செய்வதுதான் ஓம்புதல்’ என இந்தச் சொல்லின் பொருளை எனக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் தற்சார்பு வேளாண் வல்லுநர் பாமயன். மிக ஆழமான அர்த்தமுள்ள சொல்.

மரங்களை வெட்டிப் பயன்படுத்திக் கொண்டே, காடு வளர்க்க வேண்டும். கால்நடைகளை உணவுத் தேவைகளுக்கும் பிற தொழில்களுக்கும் பயன்படுத்திக்கொண்டே, அவற்றைப் பராமரித்துப் பெருக்க வேண்டும். இதுதான் ஓம்பும் வழிமுறை. `இருக்கும் வளங்களை சக மனிதருக்கும் பிற உயிரினங் களுக்கும் பகுத்துக்கொடுத்து வாழும் வழிமுறை தான், மற்ற அனைத்தைக் காட்டிலும் தலையானது’ என்ற நமது மரபுக் கொள்கை இந்தக் காலச் சிக்கல்களை ஒழிக்கும் வலிமையுடையது.

கூடியிருத்தல் என்பது உயிர்களின் அடிப்படை இயல்பு. உயர்ந்த வகை சத்துணவு கொடுத்து வழங்கப்படும் சரணாலயத்துப் புலியைவிட, இரை விலங்குகள் குறைவாக இருந்தாலும், காட்டுப் புலி வலுவாக வாழ்கிறது. வறுமையில் உழன்றாலும் உற்றார் உறவுகளோடு வாழும் மனிதர்கள், தனித்து வாழும் செல்வந்தர்களைக் காட்டிலும் நலமாக இருக்கிறார்கள். உணவும் உறைவிடமும் உயிர் நீடித்தலுக்கு அடிப்படைகள். சுற்றமும் சூழலும் வாழ்க்கையின் அடிப்படைகள். நீங்கள் வாழ்க்கையை வாழ வேண்டுமானால்,  சுற்றம் சூழலைப் போற்ற வேண்டும்.

கூடியிருக்கும்போது உயிர் இன்பம் அடைகிறது. உயிரின் ஒரே ஒரு குறிக்கோள் இன்பமாக இருப்பதுதான். பிறவி எடுப்பதே இன்பமாக இருக்கத்தானே! எல்லாக் கொள்கை களும் சமயங்களும் கண்டுபிடிப்புகளும் இன்பத்தை நோக்கிய பயணத்துக்கான வழித் துணைகள்தானே!

கடந்த நூற்றாண்டில் நமது சமூகத்தின்மீது திணிக்கப்பட்ட கருத்துகள் இதற்கு எதிரானவையாக இருந்தன. தனித்துச் செல்லுதல், தனித்து இயங்குதல் ஆகியவைதான் முன்னேற்றத்துக்குத் துணை செய்யும் குணங்கள் என்ற கருத்து பலவிதங்களில் பரப்பப்பட்டது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையின் மீது பெரும் கருத்துப் போர் தொடுக்கப் பட்டது. மூத்தோர் கருத்துகள் யாவும் ‘பழமைவாதம்’ எனும் முத்திரைக்குள் முடக்கப்பட்டன.

பெற்றோரும் பிள்ளைகளும் மட்டும் அல்ல, சகோதர உறவுகளும் மூத்தோரும் கூடிவாழ்ந்த குடும்பங்கள் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை, நீக்கமற நிறைந்திருந்தன. கால்நடைகளுக்கும் பெயர்வைத்து உறவுகொண்டாடிய குடும்பங்கள் அப்போது எண்ணிக்கையில் மிகையாக இருந்தன. இந்தச் சமூக அமைப்பில் குழந்தை மற்றும் முதியோர் காப்பகங்கள், மருத்துவமனைகள், மனநல மையங்கள் குறைவாக இருந்தன. மிக முக்கியமாக, போதை அடிமைகளின் எண்ணிக்கை அப்போது குறைவு.

நமது கூட்டுக் குடும்பங்கள் சமூகத்தின் பொருளாதார உற்பத்திமையங்களாகவும் இருந்தன. ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டது. வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, கைவினைத் தொழில்கள், நெசவு போன்ற தொழில்கள் யாவும் குடும்ப உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குடும்பங்களில் வளர்ந்த பிள்ளைகள் இளம் பருவத்திலேயே தொழிற்கல்வியைக் கற்றுக் கொண்டனர். பொதுக் கல்விக்காக மட்டும், பள்ளி களுக்குச் சென்றனர்.

ஒருவரை ஒருவர் அரவணைக்கும் வாய்ப்பு அப்போது இருந்தது. நகரங்களின் உருவாக்கமும் நவீன தொழிற்பெருக்கமும் இந்தக் கூட்டு வாழ்க்கையைக் கேலிசெய்தன. `பொருளாதாரம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்’ என்ற மாயக் கருத்து கட்டமைக்கப்பட்டது.

பொருளாதாரத்துக்காக நகரங்களுக்குச் செல்லுதல் நாகரிகமாகச் சித்தரிக்கப்பட்டது. அறம் பிறழாத வாழ்க்கையை வாழ்வதுதான் நாகரிகம் எனப்படும். ஆனால், எல்லா அறங்களையும் சாய்த்துவிட்டு வளர்ந்த நவீனக் கட்டமைப்புக்கு  `நாகரிகச் சமூகம்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

தனித்துச் செல்லுதல் எனும் சிந்தனையைப் பொருளாதார ஆதாயம் நியாயப்படுத்தியது. தொடக்கத்தில் பெற்றோரைப் பிரிந்து பிள்ளைகள் சென்றனர். இப்போது கணவனும் மனைவியும் பிரிந்துகிடக்கின்றனர். இந்தப் பிரிவுகளும் அவை தரும் துயரங்களும் பொருளாதாரம் எனும் வரம் பெறுவதற்கான தவம்!

சேர்ந்து வாழும் மனிதர்கள் குறைந்துகொண்டே போகிறார்கள். ஒரே வீட்டில் இருந்தாலும் கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகிய மூன்று உறவு களுக்குமான இடைவெளி கூடிவிட்டது. விடிந்ததும் மூவரும் மூன்று திசைகளில் பயணிக்கின்றனர். இருட்டியதும் மூவரும் ஒரு வீட்டுக்குள் அடைகின்றனர். மூவருக்குமான இலக்குகள் வேறு, தடைகளும் வெற்றிகளும் வேறு. மூவருக்குமான உரையாடலில்கூட, தங்கள் இலக்குகளைப் பற்றிய சொற்களே நிரம்பியுள்ளன.

எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதாரப் பந்தயத்தில் ஓடுவதற்குச் சொந்த ஊர் சுமையாக இருந்தது... அதை உதறி வீசினார்கள். வேகம் மேலும் கூடியது. பந்தயம் மேலும் கடினமானபோது தாய்மொழி சுமையாக இருந்தது... அதையும் வீசினார்கள். வேகம் அதிகரித்தது. பின்னர், அறச் சிந்தனைகள் பெரும் சுமையாகின. அவை அனைத்தையும் உதறிவிட்டு ஓடினார்கள். இறுதியாக உறவுகள் யாவும் சுமையாகிப்போயின. அவற்றையும் கழற்றி வீசிவிட்டு பொருளாதாரப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நவீன மனிதர்கள். இப்போது, `பொருளாதாரம் மற்றும் வெற்றிகரமான வாழ்க்கை’ என்ற வெறி மட்டுமே விஞ்சியுள்ளது. இனி வீசி எறிய எதுவும் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்