கலைடாஸ்கோப் - 46

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
எண்ணம் வண்ணம்: சந்தோஷ் நாராயணன்

பாவன், கணினியை உற்றுப் பார்த்தான். `விதவிதமான முகபாவங்கள், டிஸ்கவுன்ட் விலையில் கிடைக்கும்' என்கிற ஆன்லைன் ஸ்டோர் கண்ணில் பட்டது.

`உனக்கு, நல்லா சிரிக்கிற மாதிரி ஒரு முகத்தை டவுண்லோடு பண்ணி மாட்டத் தெரியாதா?' எனக் கடந்த சந்திப்பில் கேட்டிருந்தாள் பாவனா.

அவள் முகத்தில், சிரிக்கும் சிலிக்கான் முகம் மாட்டப்பட்டிருந்தது.

இயந்திரங்களோடு இயந்திரங்களாகிப்போன இந்தக் காலத்தில், உணர்ச்சிகளை முகத்தில் காட்ட மனிதர்களால் முடியாமல்போய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டதை நினைத்துக்கொண்டான். அந்த நினைப்புக்குக்கூட தன் முகத்தை எப்படி வைத்துக்கொள்வது எனத் தெரியாமல் குழம்பினான்.

ஆன்லைன் ஸ்டோரின் கேமராவில், தன் முகத்தின் பதிவை அப்லோடி விட்டு அரை நொடிக் காத்திருத்தலுக்குப் பிறகு, பல்வேறுவிதங்களில் சிரிக்கும் அவன் முகங்களை கணினி காட்டியது. அதில் நன்றாகச் சிரிக்கும்

ஒரு முகத்தைப் பார்த்து ஆர்டர் செய்தான். 3டி டிஜிட்டல் நுட்பம் சிரிக்கும் சிலிக்கன் முகத்தை, அவன் முகத்தில் பதித்தது.

கண்ணாடியைப் பார்த்தான். நன்றாகச் சிரிக்கும் முகம்.

“பாவனா, உன்னை இப்போதே பார்க்க வேண்டும்” - நுண்பேசியில் அழைத்தான்.

``நான் உன்னைப் பார்க்கத்தான் வந்துகொண்டிருக்கிறேன். உன் வாசல் வரை வந்துவிட்டேன். கதவைத் திற” என்றாள்.

நன்றாகச் சிரிக்கும் முகத்துடன் ஆவலுடன் கதவைத் திறந்தான்.

“என் நாய்க்குட்டி `பப்பி' செத்துப்போச்சு” என்றபடி, பாவனா உள்ளே வந்தாள்.

அழுகை முகத்தை ஒட்டியிருந்தாள்.

அபாவன் பாய்ந்து கணினியை மீண்டும் ஆன் பண்ணினான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்