வாட்ஸ்அப் அரசியல்!

ஜி.கார்ல் மேக்ஸ்

செய்திக்கும் வதந்திக்குமான இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. வதந்தியை உருவாக்குபவர்களுக்கு எப்போதும் இருக்கும் கீழ்த்தரமான கிளுகிளுப்பு மனநிலையைத் தாண்டி, இப்போது அரசியல் நிலைப்பாடும் அதிகம் இருக்கிறது என்பதுதான் இதில் நாம் கண்டிருக்கும் முன்னேற்றம்.

பழநியில் இருந்து அவிநாசி செல்லும் வழியில் இருசக்கர வாகனம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி, அதில் வந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிர் இழக்கிறார்கள். அந்த வழியாக வந்த வைகோ தனது வண்டியை நிறுத்தி, ஆம்புலன்ஸை வரவழைத்து உதவினார் என்பது செய்தி. ஆனால், `வைகோ வந்த வாகனத்தில் மோதிதான் அவர்கள் உயிர் இழந்தார்கள்' எனப் படத்துடன் ஒரு செய்தி வதந்தியாகப் பரவுகிறது. இறந்து கிடப்பவர்களின் அருகில் துயரம் தோய்ந்த முகத்துடன் வைகோ நிற்கும் புகைப்படம், அந்த வதந்திக்கு ஒரு பெருமதியை வழங்குகிறது. பிறகு என்ன... அந்தப் புகைப்படத்தைப் பார்த்த வேகத்துக்கு அதை மிக வேகமாகப் பரப்புகிறார்கள் இணையவாசிகள். பரப்பியவர்களில் எல்லா அரசியல் சார்புடையவர்களும் இருக்கலாம். ஆனால், வைகோவைப் பிடிக்காதவர்கள் அதில் கூடுதல் ஆர்வம் காட்டியிருப்பார்கள் என்பது அது வேகமாகப் பரவியதற்கு ஒரு காரணம்.

இதைப் புரிந்துகொள்ள பெரிய சாதுர்யம் ஒன்றும் தேவை இல்லை. இணையத்தில் புழங்கும் பழக்கம் இருந்தாலே போதும். இந்த விவகாரத்தில் வதந்தி மீதான குறுகுறுப்பைத் தாண்டி, அதைத் தனது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு என்பது மிகவும் ஆபத்தானது; தண்டனைக்கு உரியது.

இதில் மிகவும் ஆபாசமானது என்னவென்றால், தான் பகிர்ந்தது தவறான செய்தி எனத் தெரிந்தால், அதில் தமக்கு எதுவும் பொறுப்பு இல்லை என்பதுபோலவும், தானும் அதில் ஏமாற்றப்பட்டதுபோலவும் சிலர் நடந்துகொள்ள முயல்வதுதான். இது மிகவும் பொறுப்பற்ற மனநிலை. ஒரு செய்தியின் உருவாக்கத்தில் எவ்வளவு பொறுப்பு இருக்கிறதோ, அதற்கு நிகரான பொறுப்பு அதைப் பகிர்வதிலும் இருக்கிறது.

நம்மிடம் சுயக்கட்டுப்பாடு இல்லை; அதை உறுதி செய்து கொள்ளும் அளவுக்குப் பொறுமை இல்லை என்றால், அதைப் பகிராமல் இருப்பதுதான் அறம். ஏனெனில், தனி மனிதர்களுக்கு அது தரும் மன உளைச்சல் என்பது அளவில்லாதது. இதில், வதந்திக்கு உள்ளாகுபவர் புகழ்பெற்றவராக இருந்தால், திரைத் துறையினராகவோ இருந்து விட்டால், அது தவறான செய்தி எனத் தெரிந்தும்கூட அதைப் பகிர்ந்துகொண்டே இருப்பதும் அது குறித்து தொடர்ந்து விவாதிப்பதன் மூலம் அந்தச் செய்தியை நீண்டகாலத்துக்கு உயிருடனே வைத்திருப்பதும் நடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்