விவசாயிகளைக் கைவிடலாமா?

ஞ்சாவூர் விவசாயி பாலன், வங்கிக் கடன் மூலம் டிராக்டர் வாங்கி, அதற்கான தவணைத்தொகையை கடைசி இரண்டு மாதங்களாகச் செலுத்தவில்லை என்பதற்காக தனியார் நிதி நிறுவன ஊழியர்களும் காவல் துறையினரும் அவரை இழுத்துத் தள்ளி, டிராக்டரையும் கைப்பற்றிச் செல்லும் வீடியோ காட்சி, கடந்த வாரம் நாடு முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. நாடாளுமன்றத்திலும் இது எதிரொலித்தது. அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அரியலூரில் ஒரு விவசாயி இதே காரணத்துக்காகத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். ஒரத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செல்வம், டிராக்டர் கடனுக்கு முறையாக தவணை செலுத்தவில்லை எனக் கூறி நிதி நிறுவன ஊழியர்கள் அவரை மிரட்டி, அடித்து, அவமானப்படுத்த... மனம் உடைந்த அவர் விஷம் குடித்து உயிரைவிட்டிருக்கிறார்.

லாபமற்ற தொழிலாக விவசாயம் மாறியுள்ள நிலையில், கடன்களுக்கான தவணைத் தொகையைக்கூட கட்ட முடியாமல் தடுமாறி நிற்கிறார்கள் விவசாயிகள். `தற்சார்பு வேளாண்மை’ என்ற பாரம்பர்ய தன்மையில் இருந்து அவர்களை இ.எம்.ஐ விவசாயிகளாக மாற்றிய இந்த அவலத்துக்குப் பின்னால் ஏராளமான காரணிகள் இருக்கின்றன என்றாலும், ஒரு விவசாயியை அவமானப்படுத்தி தற்கொலைக்குத் தள்ளும் இதே நாட்டில்தான் 9,000 கோடி ரூபாய் வங்கிக் கடனை செலுத்தாத மல்லையா பாதுகாப்பாக வெளிநாட்டுக்குத் தப்பிக்கிறார்.

தஞ்சாவூர், அரியலூர் விவசாயிகள் இருவருமே வாங்கிய கடனைக் கட்டாமல் இல்லை. சுமார் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள கடனில் 5 லட்ச ரூபாய்க்கும் மேலாகக் கட்டியிருக்கிறார்கள். கடைசி ஓரிரு மாதங்களாகத்தான் அவர்கள் தவணை செலுத்தவில்லை. அதற்கே அவர்களைப் பாடாய்ப்படுத்துகின்றனர். ஆனால், 2013 - 2015 ஆகிய இரண்டு நிதியாண்டுகளில் இந்தியப் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு 1.14 லட்சம் கோடி ரூபாய்.

விவசாயி பாலனை அடித்து இழுத்துச் சென்றது வங்கி ஊழியர்கள் மட்டுமல்ல, காவல் துறையும்தான். காவலர்கள் அங்கு போகாமல் அந்தத் தனியார் நிறுவன ஊழியர்கள் மட்டும் தனியாகச் சென்று விவசாயியை அடித்தால், டிராக்டரைப் பிடுங்கினால், கிராம மக்கள் உரிய பதில் கொடுத்திருப்பார்கள். அதனால்தான் மக்களுக்கு பூச்சாண்டி காட்ட காவலர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், இப்படிச் செல்வது சட்ட விரோதம். தனியார் நிதி நிறுவனங்கள், வாகனக் கடன் கொடுத்து அது முறையாக வரவில்லை என்றால், வாகனத்தைத் தூக்குவதற்கு என அடாவடி நபர்களை வேலைக்கு வைத்திருக்கின்றன. காவலர்கள் இப்போது செய்திருப்பதும் அதே வேலைதான்.

விவசாயிகளை மிரட்டுவதும், அச்சுறுத்தி தற்கொலைக்குத் தள்ளுவதும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத கொடுஞ்செயல். ஏற்கெனவே விவசாயத்தைக் கைவிடுவோரின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்துவரும் நிலையில், எஞ்சியிருப்போரையேனும் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். மாறாக, அரசும் அரசியல் கட்சிகளும் விவசாயிகளின் துயரத்தை; கண்ணீரை வெற்றுப் பரபரப்புக்காகப் பயன்படுத்தினால்... விவசாயிகள் உரிய பதில் சொல்வார்கள். ஏனெனில், அவர்கள் விவசாயப் பெருங்குடி மக்கள் மட்டுமல்ல... வாக்காளப் பெருங்குடி மக்களும்கூட!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்