கோவையின் கோல்டன் கேர்ள்!

ஜி.கே.தினேஷ், மு.ஜெயராஜ்

சைக்கிளிங் விளையாட்டில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மனிஷா, கோவை தமிழச்சி. சமீபத்தில் நடந்து முடிந்த தெற்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று, கோவை திரும்பிய மனிஷாவைச் சந்தித்தேன்.

``வாழ்த்துகள்... சர்வதேசப் போட்டிகளில் முதல் தங்கம். எப்படி இருந்தது அனுபவம்?''

``40 கி.மீ டீம் டைம் ட்ரையல் (Team Time Trial) பிரிவில் நான், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ரித்விகா, மணிப்பூர் வீராங்கனைகள் லட்சுமி, செளபா ஆகிய நான்கு பேர் கலந்துகொண்டோம். 40 கி.மீ தூரத்தை 59 நிமிடங்கள் 23 விநாடிகளில் கடந்து, தங்கம் வென்றோம். முதல் இடத்துக்கு போட்டியே இல்லை. இரண்டாம் இடத்துக்கு, இலங்கையும் பாகிஸ்தானும் கடுமையாகப் போராடின.’’

``தமிழ்நாட்டில் சைக்கிளிங் விளையாட்டு அவ்வளவாக பிரபலம் இல்லையே. உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?''

``ஏழாம் வகுப்பு படிக்கும்போது பி.டி சார்தான் ஸ்கூல் லெவலில் நடந்த சைக்கிளிங் போட்டியில் பங்கேற்க அழைத்துச் சென்றார். அதில் இருந்துதான் சைக்கிளிங்கில் ஆர்வம் வந்தது. பிறகு மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். இதுவரை 11 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். எல்லாவற்றிலுமே பதக்கம் வென்றிருக்கிறேன்.''

``தங்கப் பதக்கம் வென்ற பிறகு வந்த பாராட்டுக்கள்..?''

``நான் தங்கம் வென்ற செய்தி, தமிழக அரசுக்குத் தெரியுமா என்றே தெரியவில்லை. அரசு சார்பில் யாரும் அழைத்துப் பேசவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. `சைக்கிளிங்கை, அவர்கள் ஒரு விளையாட்டாகவே நினைக்க வில்லையோ?' எனத் தோன்றுகிறது. சைக்கிளிங் என்பது, ஒலிம்பிக் ஸ்போர்ட். நான் இந்திய அணியில் இருக்கிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதுதான் எங்கள் கனவு. ஆனால், எங்களுக்கு நிலையான கோச் இல்லை. வருடா வருடம் மாறிக்கொண்டே இருப்பார்கள். மற்றபடி உணவு, பயிற்சி, போட்டிகளில் பங்கேற்பதற்கான செலவுகளை மத்திய அரசே பார்த்துக்கொள்கிறது. நிச்சயம் ஒலிம்பிக்கிலும் வெல்வோம்.’’

நம்பிக்கையோடு கை குலுக்குகிறார் மனிஷா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick