இன்பாக்ஸ்

குழந்தை குட்டிகளுடன் லண்டனில் குடியேறிருக்கிறது பிராட் பிட் - ஏஞ்சலீனா ஜோடி. லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் விலைக்கு ஏதாவது வீடு கிடைக்குமா எனத் தேடி அலைந்து, ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்து பால் காய்ச்சியிருக்கிறார்கள். எட்டு பெட்ரூம்கள் கொண்ட அந்த வீட்டுக்கான மாத வாடகை, ஜஸ்ட் 14 லட்ச ரூபாய்தான். பிராட் பிட்டின் `வேர்ல்டு வார் Z2’ படத்தின் ஷூட்டிங் முடியும் வரை, லண்டன்தான் தாய்வீடு என்கிறார் ஏஞ்சலீனா! சென்னைக்கு வாங்க மக்களே!

டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்தப் போட்டியில் இந்தியா ஜெயித்தாலும் ஸ்டெம்ப்புகளை அள்ளிக்கொண்டு போவார் தோனி. `இதன் ரகசியம் என்ன?' எனப் பலமுறை கேட்டும் வாய் திறக்காதவர், `ஓய்வுக்குப் பிறகு ஏதாவது பொழுதுபோக்கு வேண்டுமே. அப்போது வீடியோக்களில் வெற்றிபெற்ற மேட்சுகளைப் பார்த்து `இந்த ஸ்டெம்ப் இந்த மேட்சில் இருந்து எடுத்தது' எனக் குறித்துக்கொள்வேன்' என்று சிரித்துக்கொண்டே சொன்னார். ஆனால், உண்மையில் `320 ஸ்டெம்ப்புகள் கொடு. அதை வைத்து நான் என் வீட்டின் சுற்றுச்சுவரை எழுப்ப வேண்டும்' என்று தன்னிடம் கேட்ட ஏழை பள்ளி நண்பனின் ஆசையை நிறைவேற்றத்தான் தோனி இப்படிச் செய்கிறார் என்கிறார்கள். நண்பேன்டா!

பிரேசில் மீனவர் ஜோவோ பெரேரா டிசோசாவுக்கும், டின்டிம் என்ற பென்குயினுக்கும் இடையேயான நட்புதான் இணையத்தின் சென்டிமென்ட் சென்சேஷன். 2011-ம் ஆண்டு, அடிபட்டுக் காயமடைந்து பிரேசிலில் கரை ஒதுங்கிய பென்குயினை, ஜோவோ காப்பாற்றி தினமும் உணவு அளித்து வளர்த்தார். `டின்டிம்' எனப் பெயரும் மூன்று வேளை சோறும் வைத்துக் காப்பாற்றி, அதைக் கடலில் கொண்டுபோய் விட்டார் ஜோவோ. அப்போது சென்ற டின்டிம், ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதமானால் 5,000 மைல்கள் பயணித்து ஜோவோவைத் தேடிவந்து பார்க்கிறது. எட்டு மாதங்கள் இவருடன் தங்கிவிட்டு, பின்னர் இனப்பெருக்கம் செய்வதற்காக பிப்ரவரியில் சென்றுவிடும். அதையும் தாண்டி புனிதமானது!

இஸ்ரோவின் சமீபத்திய சாதனை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். அப்படீனா? இத்தனை நாட்கள் நாம் வழிகாட்டியாகப் பயன்படுத்திய ஜி.பி.எஸ்., அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்பம், அதற்கு மாற்றாக இந்தியாவுக்கு என சொந்த நேவிகேஷன் சிஸ்டம் உருவாக்கும் பணியில், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது இஸ்ரோ. இந்தத் தொழில்நுட்பத்தை நிறுவ, ஏழு செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்த வேண்டும். கடந்த வாரம் 6-வது செயற்கைக் கோளையும் வெற்றிகரமாக நிலைநிறுத்திவிட்டனர். `இன்னும் ஒரே ஒரு செயற்கைக்கோள் மீதம் இருக்கிறது. அந்தப் பணியை அடுத்த மாதம் முடித்துவிடுவோம்’ என்கிறார் இஸ்ரோ தலைவர் கிரண்குமார்.  இதுதான் ரியல் மேக் இன் இந்தியா!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்