விகடன் சாய்ஸ்

கூலித்தமிழ் (கட்டுரைகள்) மு.நித்தியானந்தன்.

வெளியீடு: க்ரியா, சென்னை. பக்கங்கள்: 180, விலை: 400 ரூபாய்.   

19-ம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து இலங்கை காபி தோட்டங்களுக்கு கூலிகளாகச் சென்ற லட்சக்கணக்கான ஏழை மக்களின் பயண அவலம், வேலைக் கொடுமைகள், அடிமை வாழ்வு... என ஆங்கிலேயர்கள் ஏவிய அடக்குமுறைகளின் ஆவணமே இந்தப் புத்தகம். பல்வேறு தளங்களில் சேகரித்த நூல்கள், நாளிதழ்கள், துண்டுப் பிரசுரங்கள், அகராதிகள், கடிதங்கள், அறிக்கைகள் போன்றவற்றின் ஆதாரங்களோடு விவரிக்கிறார் நூலாசிரியர் நித்தியானந்தன்.

இந்தியாவில் இருந்து சென்று, நூற்றாண்டு கால பேருழைப்பால் இலங்கையின் வளர்ச்சியில் பங்கேற்று, அதன் குடிமக்களாக மாறிய மலையகத் தமிழர்களின் வரலாறு பேசும் முதல் இரண்டு நூல்களான ‘கோப்பிக் கிருஷிக் கும்மி’, ‘தமிழ் வழிகாட்டி’ ஆகிய நூல்களின் வழியே நமக்கு கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள் குறித்து விரிவாக ஆராய்கிறது. தவிரவும் மலையகத்தில் எழுதப்பட்ட நாவல்களான ‘சுந்தர மீனாள் அல்லது காதலின் வெற்றி’, ‘கண்ணனின் காதலி’ பற்றியும், முதல் பெண் இலக்கிய ஆளுமை அஞ்சுகம் குறித்தும் விரிவாகப் பேசுகிறது `கூலித்தமிழ்'.
தமிழ்நாட்டில் வறுமை நிலையைப் பூதாகாரமாக்கி, மலையகக் காபி தோட்டங்களில் செல்வ வளம் கொழிப்பதாகச் செய்யப்பட்ட உளவியல் பிரசாரங்கள், கடல் பயணங்களிலும் தரைவழிப் பயணங்களிலும் மக்கள் அனுபவித்த கொடுமைகள், பலியான உயிர்கள், அந்தக் காலகட்டத்தில் இந்த உண்மையைச் சார்ந்து எழுந்த எதிர்க்குரல்கள், அவர்கள் மீதான அடக்குமுறைகள் போன்ற அரிய தகவல்களையும் பதிந்திருக்கிறது இந்தப் புத்தகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்