வேண்டாம் உயிர் விளையாட்டு

ந்திய மருந்துச் சந்தையில் அதிகம் புழக்கத்தில் உள்ள 344 மருந்துகளைத் தடைசெய்து கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது மத்திய அரசு. இந்தியாவில் இவ்வளவு அதிகமான மருந்துகள் ஒரே நேரத்தில் தடைசெய்யப்படுவது இதுவே முதல்முறை. மிகப் பிரபலமான விக்ஸ் ஆக்‌ஷன் 500 மாத்திரை, கோரக்ஸ் சிரப் போன்றவையும் தடை செய்யப்பட்டவற்றில் அடக்கம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தற்காலிகத் தடை உத்தரவு பெற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் இந்தத் தடை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தடைக்கு உள்ளாகியிருப்பவை அனைத்தும் கூட்டு மருந்துகள். ஒரு நோயைக் குணப்படுத்தும் பல்வேறு மூலக்கூறுகளை ஒன்றிணைத்து உருவாக்கப்படும் மருந்துகள். ஆனால், ‘இந்த மருந்துகளில் நோயைக் குணப்படுத்தும் அம்சங்கள் எதுவும் இல்லை என்பதுடன், இதில் ஊறு விளைவிக்கும் மூலக்கூறுகளும் கலந்துள்ளன’ என உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அப்படியானால், இத்தனை ஆண்டுகளாக இந்த மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டவர்களின் உடல்நிலைப் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? வலிநிவாரணி, சளி, இருமல் என மிகச் சாதாரண உடல்நலப் பிரச்னைகளுக்கான மருந்துகள் இவை. பெரும்பாலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மக்கள் நேரடியாக கடைகளில் வாங்கக்கூடியவை. ஒவ்வொரு நாளும் இந்த மருந்துகளை ஐந்து கோடிப் பேர் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இத்தனை கோடிப் பேரின் உடலுடன், உயிருடன் மிக நேரடியாகத் தொடர்புடைய மருந்துப் பொருட்கள் மீதான கண்காணிப்பை மிக மெத்தனமாகக் கையாள்கிறது அரசு.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 40 ஆயிரம் மருந்துக் கடைகள் உள்ளன. இவற்றில் இருந்து, தடைசெய்யப்பட்டுள்ள 344 வகையான கூட்டு மருந்துக் கலவைகள்கொண்ட பல்வேறு நிறுவனங்களின் மருந்துகளைக் கண்டறிந்து அப்புறப்படுத்துவது உடனடியாகச் சாத்தியம் இல்லை என்றும், ஆறு மாத காலம் அவகாசம் தேவை என்றும் விற்பனையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. மருத்துவர்களோ, ‘கூட்டு மருந்துகளைத் தடைசெய்துள்ளதால் இனிமேல் ஒரு மருந்துக்குப் பதிலாக மூன்று, நான்கு மருந்துகளை எழுதவேண்டியிருக்கும். இது நோயாளிகளுக்கு, மருத்துவர்கள் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கும்’ என்கிறார்கள். தடைசெய்யப்பட்டுள்ள மருந்துகளின் ஆண்டு வணிக மதிப்பு 4,000 கோடிக்கும் அதிகம். இத்தனை பிரமாண்டமான சிக்கலில், சட்ட விதிகளை மீறி செயல்பட்ட மருந்து நிறுவனங்களின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

ஒரு குற்றத்துக்கான தண்டனை என்பது, ‘இனிமேல் அதைச் செய்யக் கூடாது’ என்பதுடன் முடிந்துவிடுமா? இதுவரை செய்ததற்கு என்ன தண்டனை?

மருந்துப் பொருட்கள் மட்டும் அல்ல, சில மாதங்களுக்கு முன்னர் மேகி நூடுல்ஸில் ஆபத்தான நச்சு அதிகம் கலந்திருப்பதாகக் கூறி, அதற்கு தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். புகழ்பெற்ற குளிர்பானங்கள் பலவற்றில் அனுமதிக்கப்பட்ட வரம்பைவிட அதிகமாக பூச்சிமருந்து கலந்திருப்பதை பல ஆய்வுகள் வெளிக்கொண்டு வந்துள்ளன. இந்திய விவசாயச் சந்தையில் புழக்கத்தில் உள்ள பல பூச்சிமருந்துகள், உலக நாடுகள் பலவற்றில் தடைசெய்யப்பட்டவை. இப்படி மருத்துவம், உணவு, விவசாயம் என மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் ஆபத்தான நச்சுகள் கலப்பதைத் தெரிந்தே அனுமதிக்கிறது அரசு.

மக்கள் நலன் காப்பதே ஓர் அரசின் அடிப்படை பணி. வெளிநாடு வாழ் பிரதமர் மோடி, மற்ற நாடுகளைப் பார்த்தேனும் இதைத் தெரிந்துகொள்ளட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்