யாருக்கு வாக்கு?

நெருங்கி வருகிறது தேர்தல். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை ஆளப்போவது யார் என்பதை முடிவுசெய்யவேண்டிய முக்கியமான தருணம். ஒருபக்கம் தி.மு.க., மறுபக்கம் அ.தி.மு.க. கடந்த 49 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்துவரும் இரு பெரும் கழகங்கள் இந்தத் தேர்தலிலும் எதிரும்புதிருமாக நிற்கின்றன. கூடுதலாக மக்கள் நலக் கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கூட்டணி, நாம் தமிழர் கட்சி என,  அதிகாரத்தைக் குறிவைத்து நம்மிடம் வருகிறார்கள். இவர்களில் நிச்சயம் ஒருவர்தான் நமது ஆட்சியாளர். எனில், யாருக்கு நாம் வாக்களிப்பது?

கடந்த பத்து ஆண்டுகளில் அதிகம் பேசப்பட்ட, மக்கள் அடியோடு வெறுத்து ஒதுக்கும் ஒன்று... ஊழல். எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலையில் மக்களுக்கு அரசியல் மீதே வெறுப்பு வந்ததற்கு, இரண்டு கழகங்களும்தான் முழுப் பொறுப்பு. இவர்களுக்கு சொத்துக்குவிப்பு வழக்கு என்றால், அவர்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம். பொதுப்பணித் துறை முதல் நெடுஞ்சாலைத் துறை வரை, பணி நியமனம் முதல் பணி மாறுதல் வரை ஊழல் இல்லாத துறை எது... ஊழல் நடக்காத நாள் எது? அடி முதல் நுனி வரை ஊழலை ஒரு பொது இயல்பாக நிலைநிறுத்தியதில் இருவருக்குமே சம பங்கு உண்டு.

 ஊழலுக்கு எதிராக வாக்களிக்க விரும்பும் ஒருவர், இந்த இருவரில் யாரைத் தேர்வுசெய்வது?

ஆறுகளில் மணல் கொள்ளை; கடலோரத்தில் தாதுமணல் கொள்ளை; மலைகளை வெட்டி கிரானைட் கொள்ளை... இவற்றைச் செய்வது யார்... செய்ய அனுமதிப்பது யார்...செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவது யார்? இரு கழகங்களின் உறுதுணை இல்லாமல் இவை நடக்கும் என, சிறுகுழந்தைகூட நம்பாது. நம் கண் முன்னே நிகழும் இந்த இயற்கை வளச் சூறையாடலை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தடுத்து நிறுத்துமா?

மக்கள் வழங்கிய அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் ஆட்டம்போடுவதில் இரு கழகங்களும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்லர். தனியார் பள்ளிகளை வளர்த்தெடுத்து, அரசுப் பள்ளிகளை நலிவடையவைக்கும் தந்திரம்மிக்க இவர்களின் செயல்பாடுகளில், இரு கட்சிகளுக்கும் சம பங்கு உண்டா, இல்லையா? ஈழ உரிமைக்காகப் போராடினால் சிறை என்றால், டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடினால்... தேசத்துரோக வழக்கு. கருத்துரிமையின் குரல்வளையை நெரிப்பதில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் என்ன வித்தியாசம்?

அவர், பாசத்தலைவனுக்குப் பாராட்டு விழா எடுத்தார். இவர், சட்டமன்றத்தையே அடிமைகளின் கூடாரம் ஆக்கினார். எனவே, இரு கழகங்களும் ஒருவருக்கு ஒருவர் மாற்றாக இருக்கும் தகுதியை இழந்துவிட்டன. எனில், அடுத்த தேர்வு யார்... மக்கள் நலக் கூட்டணியா? இரு திசைகளிலும் இடம் கிடைக்காததால் இடம்பெயர்ந்தவர்களின் கூடாரம் அது. எனில், பா.ம.க-வா? தானே நினைத்தாலும் தன் சாதிச் சாயத்தை அதனால் கைவிட முடியாது. ‘கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவருவோம்’ எனத் தேர்தல் அறிக்கை வெளியிடும் பா.ஜ.க-வும், ‘அன்பான சர்வாதிகார’ ஆட்சி அமைக்க விரும்பும் நாம் தமிழர் கட்சியும் ஒரு ஜனநாயக நாட்டில் பரிந்துரைக்கத்தக்கத் தேர்வுகளா? எனில், நாம் என்ன செய்வது?

கட்சிகளை விடுவோம். நபர்களைக் கவனிப்போம். உங்கள் தொகுதி வேட்பாளர்களில் யார் சிறந்தவர்? அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கட்டும். கட்சியை மறந்து அவரது தகுதியை மட்டும் பரிசீலிப்போம். கடந்தகாலச் செயல்பாடு, இப்போதைய அணுகுமுறை, எதிர்கால நோக்கம்... இவற்றில் தீர்க்கமாக இருப்பவர் எவரோ, அவருக்கே நம் வாக்கு. அந்த ஒருவர் யார்? பார்வையை விசாலப்படுத்துங்கள். கவனமாகப் பரிசீலியுங்கள். உறுதியாக முடிவெடுங்கள். தொடர்ந்து பேசுவோம். நெருங்கி வருகிறது மே 16.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்