ஓட்டு போடு தமிழா!

தேர்தலில் வாக்களிக்க எல்லோரும் தயாராகிவிட்டோம். பெரும்பாலானோருக்கு இது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்குமான மோதல். நடுத்தரவர்க்கத்தினருக்கு இது, அரசியல்வாதிகளின் அதிகாரச் சண்டை. இளைஞர்களுக்கு இது ஒரு புது அனுபவம். வேறு பலருக்கு இது மாற்றத்துக்கான தருணம். பொதுவில் இது ஒரு ஜனநாயகத் திருவிழா. இந்தத் திருவிழாவில் நம்முடைய பங்கு எத்தகையதாக இருக்க வேண்டும்?

எவற்றை எல்லாம் பரிசீலித்து வாக்களிக்கப்போகிறோம் என்பதற்கு முன்னால், வாக்களிக்க வேண்டும் என்பது முதலில் முக்கியம். எதன் பொருட்டும் எந்தக் காரணத்தை முன்வைத்தும் வாக்களிக்கும் கடமையில் இருந்து நாம் பின்வாங்கக் கூடாது. அன்றைய நாளில் நமக்கு மிக முக்கிய வேலை இருக்கலாம். ஓர் ஓய்வு நாளைக் கொண்டாடும் மனநிலையோடு இருக்கலாம். குடும்பத்தோடு வெளியில் செல்லத் திட்டமிட்டிருக்கலாம். இவை அனைத்தையும்விட முக்கியமானது தேர்தலில் வாக்களிப்பது. ஏனெனில், இது நமது எதிர்காலம் தொடர்பானது. நாம் அந்தக் கடமையில் இருந்து தவறும்போது, அரசியல்வாதிகளைக் குற்றம்சொல்லும் தகுதியை இழக்கிறோம். நல்லவர்களைத் தேர்வுசெய்யவும், அல்லாதவர்களை நிராகரிக்கவும் வாக்களிப்பது மிக முக்கியமானது; முதன்மையானது.

அப்படி நாம் அளிக்கும் வாக்கு என்பது, நமது சொந்த சிந்தனையின் முடிவாக இருக்க வேண்டும். கணவர் சொன்னார் என மனைவியும், அப்பா சொன்னார் என மகளும் தன் வாக்களிக்கும் உரிமையை முடிவுசெய்யக் கூடாது. உறவுக்குள்ளேயே இதுதான் அளவுகோல் எனும்போது, ‘சாதிச் சங்கத்தின் முடிவு’, ‘ஊர்க் கட்டுப்பாடு’ என்ற காரணங்கள் எல்லாம் அடியோடு புறக்கணிக்கத்தக்கவை.

ஓட்டுரிமை என்பது மிகவும் அந்தரங்கமானது. உங்கள் அந்தரங்கத்தை முடிவுசெய்யும் உரிமையை யாரோ ஒருவருக்கு வழங்காதீர்கள். இன்னொரு புறம், ‘நாங்க ஏழு தலைமுறையா அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டு போடுவோம். திடீர்னு எப்படி மாத்த முடியும்?’ என, ஓட்டுரிமையை மூடநம்பிக்கைபோல கருதாதீர்கள். தர்க்கரீதியாக நடைமுறைச் செயல்பாடுகளைப் பரிசீலித்து, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பதை முடிவுசெய்யுங்கள்.
 
அரசியல் கட்சிகள் மீதும், அவர்களின் செயல்பாடுகள் மீதும் நமக்கு அதிருப்தி இருக்கலாம். ஓட்டு வாங்க விதம்விதமான வாக்குறுதிகளை வழங்கும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், அவற்றில் பாதியைக்கூட நிறைவேற்றுவது இல்லை என எண்ணலாம். தொகுதிப் பக்கமே வருவது இல்லை என்ற புகார் இருக்கலாம். நாம் வாக்களித்துத் தேர்வுசெய்யும் ஒரு எம்.எல்.ஏ-வை நேரில் பார்க்க வேண்டும் என்றால், அது ஏன் மலையைப் புரட்டும் வேலையாக இருக்கிறது? ஒரு மக்கள் பிரதிநிதியை எளிதாகச் சந்தித்துவிட முடியாதா என்ற ஆதங்கங்கள் இருக்கலாம். இவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றால், வாக்குச்சாவடியைப் புறக்கணிப்பது அல்ல, பங்கேற்பதுதான் சரியானது. ஏனெனில், நாம் நம்முடைய வாழ்வை, வளங்களை இங்குதான் தொலைத்தோம்; இவர்களிடம்தான் தொலைத்தோம்.

இவர்களிடம்தான் மீட்கவும் முடியும்.

இது தவறவிடக்கூடாத தருணம். முடிவெடுக்க வேண்டிய சமயம்.

இது வாக்களிக்கும் நேரம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்