ஒரு தேசம்... ஒரு மனுஷி... ஒரு சந்திப்பு!

இரா.கலைச்செல்வன்

ட்டு ஆண்டுகளுக்கு முன்னர், இரோம் சர்மிளா குறித்து ஒரு நாளிதழில் முதன்முதலாக வாசித்தேன். அதைப் படித்த நேரத்தில் இருந்தே அவர் மீது அளவில்லா பற்று ஏற்பட்டுவிட்டது. தேடித் தேடி வாசிக்கத் தொடங்கினேன். எனக்குள் அவர் உருவாக்கிய தாக்கம் அளவிட முடியாதது. அதனால்தான் இந்தியா முழுக்க நாடோடியாகப் பயணிப்பது என முடிவெடுத்தபோது, அதில் தவறவிடக் கூடாத இடமாக மணிப்பூர் தலைநகர் இம்பால் நகரத்தைச் சேர்த்தேன். காரணம், அது இரோம் சர்மிளா வாழும் மண். தன் மக்களுக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் அர்ப்பணித்து, அரசை எதிர்த்து நிற்கும் இரும்பு மனுஷியின் நகரம்.

மணிப்பூர், நாகலாந்து, அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய ஏழு வடகிழக்கு மாநிலங்களில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. `நாங்கள் இந்தியர்கள் இல்லை. எங்களுக்கு தனிநாடு வேண்டும்' என்பதை போராட்ட முழக்கமாகக் கொண்டு பல ஆயுதக் குழுக்கள் உருவாகின. இவற்றை ஒடுக்குவதற்காக மத்திய அரசால் 1958-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்.  ஆனால், இது ஆயுதக் குழுக்களைவிட சாதாரண மக்களுக்குதான் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது/இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி ஒருவரது கையில் ஆயுதம் எனச் சந்தேகிக்கக்கூடிய பொருள் இருந்தாலே அவரை சுடலாம். யாரையும் எந்த விசாரணையும் இல்லாமல் கைது செய்யலாம்.

கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக வடகிழக்கில் அமலில் இருக்கும் இந்தச் சட்டத்தால் ஏராளமான அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாலியல் வல்லுறவுகளுக்குக் கணக்கு இல்லை. இந்த நிலை கண்டு கொதித்து எழுந்த மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளா, 2000-ம் ஆண்டு, நவம்பர் 2-ம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில், இந்த ஒடுக்குமுறைச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என, பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 26. இப்போது சர்மிளாவின் வயது 42. இடைப்பட்ட 16 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக ஒரு துளி உணவைக்கூட உண்ண வில்லை. ஒரு சொட்டு தண்ணீர்கூட அருந்தவில்லை. சர்மிளாவை கைது செய்து மூக்கில் பிளாஸ்டிக் டியூப் வழியாக திரவ உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி, உயிர் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது அரசு. உணவு இல்லாததால் சர்மிளாவின் மாதவிடாய் சுழற்சி நின்றுவிட்டது. உடம்பின் பல உறுப்புகள் பலவீனம் அடைந்து தளர்ந்துவிட்டன.

இருப்பினும் தனது கோரிக்கையில் உறுதியுடன், போராட்டத்தை விடாமல் தொடர்கிறார் சர்மிளா.

அன்றைய தினம் ஹோலி. அந்த நாளில்தான் நான் கௌஹாத்தியில் இருந்து இம்பாலுக்கு பஸ் ஏறினேன். மதிய நேரம். அது ஒரு பழைய மாடல் பஸ். எனக்கு அடுத்து ஒரு முதியவர் வந்து அமர்ந்தார். பேருந்து தேடுதலால் அயர்ச்சியாக இருந்ததால், சில நிமிடங்களிலேயே உறங்கி விட்டேன். அவ்வப்போது கண் திறந்து பார்ப்பேன். காடுகள் அடர்ந்த அந்த இருட்டில் சலசலப்பது தெரியும்.

வழியில் உணவுக்காக ஒரு தாபாவில் வண்டி நின்றது. என் பக்கத்து இருக்கை முதியவர் மட்டும் வெளியே தனியாக நின்றிருந்தார். அவரிடம் பேச ஆரம்பித்தேன். அவர் தமிழ்நாட்டில் சிகிச்சை முடித்து தன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். நான் இம்பால் போய்க்கொண்டிருப்பதாகச் சொன்னேன். ``ஊர் சுற்றிப் பார்க்கவா?'' என்று கேட்டார்.

‘`இல்லை, நான் இரோம் சர்மிளாவுக்காகச் செல்கிறேன்’’ என்றேன். அவர் முகம் மாறியது. மெல்லிய சோகம் அப்பிக்கொள்ள, என்னைக் கட்டி அணைத்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார்.
“இங்கு இருப்பவர்களுக்கே இரோமின் போராட்டம் குறித்த மதிப்பு தெரிவது இல்லை. ஆனால், நீ எங்கு இருந்தோ எங்களுக்காக வந்திருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா?” என்றார். இருவருக்கும் இடையே மிக நீண்ட மௌனம். எங்களைச் சுற்றி இருந்த காடுகளின் பேரமைதி எங்களுடன் சேர்ந்துகொண்டது.

இருக்கையில் அமர்ந்தோம். பேருந்து புறப்பட்டது. எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்த பெரியவர், பேசத் தொடங்கியதும் நிறுத்தவே இல்லை. நிறைய அரசியல் பேசினார். இரவு முழுக்கப் பேசிக்கொண்டே இருந்தார். இரோம் சர்மிளாவை, தன் மகளைப் போல கருதுவதாகச் சொன்னார்.

நாங்கள் இம்பாலை நெருங்கிக்கொண்டு இருந்தோம். விடியற்காலை, “நான் தங்குவதற்கு ஏதாவது இடம் கிடைக்குமா... என்னிடம் டென்ட் உள்ளது. அதைக்கொண்டு எங்காவது கூடாரம் அமைக்க முடியுமா?’’ - பெரியவரிடம் கேட்டேன்.

யோசித்தவர் வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்தார்,  “நீ… இரோம் சர்மிளாவைத்தானே சந்திக்கப் போகிறாய்?”

“அவரைச் சந்திக்க வேண்டும் என ஆசைதான். ஆனால், மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பில் இருக்கும் அவரைச் சந்திப்பது சாத்தியமா என்பது தெரியவில்லை'' என்றேன்.

“முயற்சி செய். இவ்வளவு தூரம் வந்து முயற்சிக்காமல் செல்லாதே. நீ ஏதோ டென்ட் இருக்கிறது எனச் சொன்னாயே. அதை நகரின் மத்தியில் அமைத்துக்கொள். காகிதங்களில்
`I SUPPORT IROM' என எழுதி வைத்துக்கொண்டு அமர்ந்துவிடு. சில மணி நேரங்களிலேயே, ராணுவம், போலீஸ், மீடியா என எல்லாம் வந்துவிடும். மறுநாள் செய்திகளில்
நீ வருவாய். சர்மிளாவுக்காக நீ வந்திருப்பதை அவர் அறிந்தால், அளவில்லா மகிழ்ச்சி கொள்வார். அதுபோதும் அவளுக்கு” என்றார்.

இரோம் சர்மிளா என்னும் மகத்தான போராளி வாழும் மண்ணில், சுற்றித் திரிய வேண்டும் என்பதே என் ஆசையாக இருந்தது. ஆனால், இந்த முதியவர் முன்வைக்கும் யோசனை எனக்கு முட்டாள்தனமாகப்பட்டது. கொஞ்சம் பிசகினாலும் என் பாதுகாப்புக்கே ஆபத்தை விளைவிக்கும். வருடக்கணக்கில் சிறையில் அடைப்படவும்கூடும். நான் நிச்சயமாக அதைச் செய்யப்போவது இல்லை.

ஆனால், இரோமைச் சந்தித்தால் என்ன?

காலை 7 மணி. இம்பால். அந்தப் பெரியவரை அழைத்துச் செல்ல அவரின் மகன் வந்திருந்தார். விடைபெறும்போது, “நிச்சயம் முயற்சி செய்” என்று மீண்டும் மீண்டும் சொல்லிவிட்டுச் சென்றார்.
300 ரூபாய்க்கு ஓர் அறை எடுத்தேன். குளித்து முடித்து, உடை மாற்றினேன். இரோம் சிறை வைக்கப்பட்டிருக்கும் இடம் குறித்த தகவல்கள் நினைவில் இருந்தன. ஜவஹர்லால் நேரு மருத்துவமனை. ஸ்பெஷல் வார்டு. அறை எண்: A4.

மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்தேன். நிறையக் கட்டடங்கள். எதில் நுழைவது எனத் தெரியவில்லை. யாரிடமும் விசாரிக்கப் பயமாக இருந்தது. ஒருவழியாக, ஆங்கிலம் தெரியாத செக்யூரிட்டியிடம் ஆங்கிலத்தில் பேசி உள்ளே நுழைந்துவிட்டேன். வராண்டாவில் அங்கும் இங்கும் சுற்றி அலைவதைப் பார்த்து, செக்யூரிட்டி என்னைப் பிடித்து மிரட்டிக்கொண்டே ஓர் அறைக்கு அழைத்துச்சென்றார். அங்கே அந்த மருத்துவமனையின் ஏதோ ஒரு துறைத் தலைவர் வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்