புதியன கற்போம்!

ப்போது இரண்டு தேர்வு முடிவுகள் நம் முன்னே இருக்கின்றன. ஒன்று, ஆட்சியாளர்களைத் தேர்வுசெய்ய மக்கள் வாக்களித்த சட்டமன்றத் தேர்தல் முடிவு. மற்றொன்று, தமிழகப் பள்ளி மாணவர்கள் எழுதிய ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள். தேர்தல் முடிவுகள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான மாநிலத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவை. ப்ளஸ் டூ முடிவுகள், ஒரு தலைமுறையின் உயர்கல்வியைத் தீர்மானிப்பவை. அந்த மாணவர்கள் ஆரோக்கியமான மனநிலையுடன் இருக்கிறார்களா? தேர்தல் சத்தத்தில் அவர்களின் குரல் நமக்குக் கேட்கிறதா?

பள்ளித் தேர்வு முடிவு என்பது, முன்னெப்போதும் இல்லாத வகையில் மாணவர்களுக்கு மிகப் பெரிய மனச்சுமையாக மாறியிருக்கிறது. ‘ப்ளஸ் டூ மதிப்பெண்கள்தான், எதிர்காலம் என்னும் பொன்னுலகைத் திறப்பதற்கான திறவுகோல்’ என மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால், பெற்றோர்களும் பள்ளிக்கூடங்களும் மாணவர்கள் மீது அதிபயங்கர அழுத்தத்தைச் செலுத்துகின்றனர்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை, தங்கள் குழந்தைகளுக்கு மிகச் சிறந்த கல்வியைக் கொடுக்க நினைக்கின்றனர். அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் அவர்கள் தயார். அதனால்தான் பள்ளிப் படிப்புக்கே லட்சங்களில் செலவு செய்கின்றனர். ஆனால் பெற்றோர்கள் செய்யும் அதிக செலவும், அவர்களின் அதீத எதிர்பார்ப்புமே மாணவர்களின் மனங்களில் பெரும் அழுத்தத்தை உருவாக்குகின்றன. இறுதியில், எதிர்பார்த்ததைவிட ஒருசில மதிப்பெண்கள் குறைந்தாலும் பிள்ளைகளின் மனம் தாழ்வில் தள்ளப்படுகிறது. அதனால்தான் ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளின் இறுதியில் பல மாணவர்கள் தற்கொலை முயற்சி வரை செல்கின்றனர்.

பிள்ளை, நல்ல மதிப்பெண் பெற்றால்தான் நல்ல கல்லூரியில் சேர்க்க முடியும் என்பது பெற்றோர் எண்ணம். மதிப்பெண் குறைந்தால் கல்லூரிக்குக் கட்டவேண்டிய பணமும் அதிகரிக்கும். இது எதார்த்தம் என்றாலும், படிப்பு என்பது நினைத்தவுடன் உற்பத்தியை அதிகப்படுத்திக்கொள்ளும் இயந்திரப் பொருள் அல்ல. அது ஈடுபாடு மற்றும் திறன் சார்ந்தது. மேலும், நீங்கள் பணம் செலவழிக்கிறீர்கள் என்பதாலேயே, அவர்கள் மிகச் சிறப்பாக படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. முதலீட்டுக்கு ஏற்ற லாபத்தை எதிர்பார்க்க, உங்கள் பிள்ளைகள் ஒன்றும் அசையா சொத்து அல்ல.

ஆறறிவைப் பெருக்கி, ஆற்றலை வளர்க்கும் கல்வியின் அடிப்படை நோக்கத்தில் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். சரியான பாதைக்குத் திரும்பிச் செல்லவேண்டிய நேரம் இது.

மேலும் இந்த மதிப்பெண்கள், எழுதிய தேர்வுக்கானதுதானே தவிர, ஒட்டுமொத்த வாழ்க்கைக்கானது அல்ல. பொறியியலும் மருத்துவமும் மட்டும்தானா உயர்கல்வி? நவீன அறிவியல் உலகம் எண்ணற்ற வாய்ப்புகளை, வாசல்களைத் திறந்துவிட்டிருக்கிறது. உற்பத்தி, சேவை, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், வணிகம் என எத்தனையோ சாத்தியங்கள் நம் முன்பு கொட்டிக் கிடக்கின்றன.

புதிய வாய்ப்புகளைப் பரிசீலிப்போம். புதிய கல்வியைத் தேடிச் செல்வோம். புதிய உலகத்தை நோக்கிப் பயணிப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்