டொனால்ட் ட்ரம்ப் - ஆதரிக்குமா அமெரிக்கா?

மருதன்

முதலில் அமெரிக்கா அவரைப் புறக்கணித்தது; பிறகு, விழுந்து விழுந்து சிரித்தது; பிறகு, மெள்ள மெள்ள அவருடன் முரண்படவும் சண்டையிடவும் ஆரம்பித்தது. இப்போது அவரைக் கண்டு அஞ்ச ஆரம்பித்திருக்கிறது; டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகிவிடுவாரா?
அமெரிக்க அதிபர் தேர்தல், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னர் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளும் தங்கள் வேட்பாளரைத் தேர்வுசெய்வதற்கான பிரைமரி தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்கின்றன. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டன் முன்னணியில் இருக்க... குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் முந்துகிறார்.

கடந்த மே 3-ம் தேதி இண்டியானாவில் நடைபெற்ற பிரைமரி தேர்தல், ட்ரம்ப்பின் வெற்றியைக் கிட்டத்தட்ட உறுதிசெய்துவிட்டது. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட  இரு குடியரசுக் கட்சி வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அசாத்திய வெற்றியைப் பெற்றிருக்கிறார் ட்ரம்ப். பிரைமரி தேர்தலில் வெற்றிபெற ட்ரம்புக்குத் தேவை 1,237 மூத்த பிரதிநிதிகளின் வாக்கு. இதுவரை ட்ரம்ப் பெற்றிருப்பது 1,014. இனியும் ட்ரம்ப்புடன் போட்டிபோட அவர் கட்சியில் எவரும் இல்லை. தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு அவர்கள் விலகிவிட்டார்கள்.

ஹிலாரி கிளின்டனுக்கு அவர் கட்சியைச் சேர்ந்த பெர்னி சாண்டர்ஸ் கடும்போட்டியாக இருக்கிறார். இடது அரசியல் சார்பு கொண்டவராக அறியப்படும் இவர் பின்னாலும், அமெரிக்கத் தொழிலாளர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். சாண்டர்ஸை வீழ்த்தவே ஹிலாரி போராட வேண்டியிருக்கிறது. அதற்குப் பிறகே அவர் டொனால்ட் ட்ரம்ப்பைச் சந்திக்கவேண்டும்.

ட்ரம்ப்பை ஆதரிப்பவர்கள் யார்?

டொனால்ட் ட்ரம்ப்பின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் உலக அளவில் பரிச்சயமானவை. அவருக்குப் போர்கள் பிடிக்கும். பெண்ணியம் பிடிக்காது. `கருக்கலைப்பு செய்துகொள்ளப் பெண்களுக்கு உரிமை இல்லை. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. தண்டனைகளைக் கடுமையாக்க வேண்டும். அமெரிக்கக் குடிமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வது அவர்களுடைய அடிப்படை உரிமை’ என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். மேலும், `ராணுவத்தை விரிவுபடுத்தியே தீரவேண்டும்’ என்கிறார்.

‘டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரிப்பவர்கள் எல்லோருமே இனவாதிகள் எனச் சொல்ல முடியாது. ஆனால், எல்லா இனவாதிகளும் டொனால்ட் ட்ரம்ப்பை ஆதரிக்கிறார்கள்’ என்கிறது ஓர் அமெரிக்க இணையதளம். ஆனால், இது உண்மை அல்ல. ட்ரம்ப் ஓர் இனவாதி என்பதை அவருடைய வார்த்தைகளைக் கொண்டே நிறுவிவிட முடியும். ஆனால், அவரை ஆதரிப்பவர்கள் எல்லோருமே இனவாதிகள் என எளிமைப்படுத்திச் சொல்லிவிட முடியாது.

`அமெரிக்க சூப்பர் மார்க்கெட் முழுக்க வெளிநாட்டுப் பண்டங்கள் நிறைந்துள்ளன. அமெரிக்க வீதிகளில் அயல்நாட்டுத் தயாரிப்புகள் வலம்வருகின்றன. இது அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு நேர்ந்துள்ள முதல் பெரும் பாதிப்பு’ என்கிறார் ட்ரம்ப். இரண்டாவது, அமெரிக்காவில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டம். இந்த இரண்டையும் முடிச்சுப்போடும் ட்ரம்ப், `ஒரு காலத்தில் அமெரிக்கா உலகையே தன்வசப்படுத்திவைத்திருந்தது. எங்கும் அமெரிக்கப் பொருட்கள் ஆண்டு கொண்டிருந்தன. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது. ஜனநாயகக் கட்சியின் தவறான கொள்கைகளால் அமெரிக்கப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்தித்துள்ளது' என்கிறார்.

ட்ரம்ப்பின் இனவாதக் கருத்துக்களோடு உடன்பட முடியாதவர்கள்கூட இதை ஏற்கிறார்கள். அதற்குக் காரணமும் இருக்கிறது. புகழ்பெற்ற குளிர்சாதன நிறுவனமான `கேரியர்', இண்டியானா பகுதியில் இயங்கிவந்த தனது தொழிற்சாலையை மூடிவிட உத்தேசித்துள்ளது. இதன் மூலம் 1,400 அமெரிக்கர்கள் வேலை இழப்பார்கள். அமெரிக்காவில் இருந்து வெளியேறும் `கேரியர்' பக்கத்தில் உள்ள மெக்ஸிக்கோவில் புதிய ஆலையை நிறுவுகிறது. காரணம், ஓர் அமெரிக்கத் தொழிலாளரின் ஒரு மணி நேர சராசரி ஊதியம் 20 டாலர். மெக்ஸிக்கோவில் மூன்று டாலர்தான். இப்போது `கேரியர்' தொழிற்சாலையின் முக்கால்வாசி தொழிலாளர்கள் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள். இவர்கள் மட்டும் அல்ல, ட்ரம்ப்பின் ஆதரவாளர் களில் கணிசமானவர்கள் அடிமட்டத் தொழிலாளர்கள்.

`மெக்ஸிக்கோ எல்லையில் ஒரு மாபெரும் சுவரை எழுப்புவேன்; ரகசியமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவி, இங்கு இருப்பவர்களின் வேலையைப் பறிப்பவர்களைத் தடுப்பேன்' என்னும் ட்ரம்ப்பின் முழக்கத்தை முட்டாள்தனமானது என்றோ, நடைமுறைச் சாத்தியமற்றது என்றோ இவர்கள் கருதவில்லை. ‘அந்தச் சுவரைக் கட்டுவதற்கான பணத்தை அவர்களிடம் இருந்தே கறக்கிறேனா இல்லையா எனப் பார்’ என்று அரங்கம் அதிர அவர் கூச்சலிடும்போது, ஆராவாரத்துடன் கைதட்டி மகிழ்கிறார்கள். இன்னொரு புறம், ட்ரம்ப்பை ஆதரிப்பவர்களில் கணிசமானவர்கள் ஹிலாரி கிளின்டனோடு உடன்பட முடியாதவர்கள்.

2002-ம் ஆண்டு ஹிலாரி கிளின்டன் செனட்டராக இருந்தபோது, ஈராக் மீதான ஜார்ஜ் புஷ்ஷின் போரை ஆதரித்து வாக்களித்தார். லிபியா தலைவர் முகமது கடாஃபியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்த  ஒபாமாவின் நடவடிக்கையை, வளைகுடா நாடுகளை ஆண்டுவரும் மன்னர்களையும் அவர்களுடைய சர்வாதிகார முடியாட்சியையும்கூட ஹிலாரி ஆதரித்துவருகிறார். அதேபோல், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தலைமைக்கு ஹிலாரியின் ஆதரவு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்