கள்ளந்திரி

சிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம்

“ச்சே... ப்ச்ச்ச்... ச்சே...”

மிகுந்த கோபமும் ஆற்றாமையும் அழுகையும் கலந்து இப்படிச் சொல்லிக்கொண்டே இருந்தார் மூர்த்தி அண்ணன்.

நமக்கு நேரடியாக பேரிடியே விழுந்தாலும் பிரச்னை இல்லைபோலும். பிறரிடம் சென்று, `உன் அப்பா இறந்துவிட்டார்’ எனச் சொல்லிய பிறகு அவர்களை எதிர்கொள்வதுதான், அந்தக் கணத்தில் வாழ்வின் இதுவரையிலான உச்சபட்ச சவால் எனத் தோன்றியது எனக்கு.

அணைத்துவைத்திருந்த கைபேசியை எடுத்தவர், அதை உயிர்ப்பிக்கும்போதே அழைப்பு வந்தது.

எதிர்முனையில் அவரின் அம்மா. அழுகைச் சத்தம் ஸ்பீக்கரில் போடாமலே வெளியில் கேட்டது. ஒன்றும் பேசாமல், போனை கட் செய்தவர், நான் கண் இமைத்து அசந்த  ஒரு நொடியில், அதைச் சடாரென சுவர் மீது    எறிந்தார். சுக்குநூறாக உடைந்து விழுந்தது அந்த விலை உயர்ந்த கைபேசி. உடைந்த துண்டுகளையும் பாட்டரியையும் அள்ளிக்கொண்டு, அவரின் தோளைத் தொட்டு, அங்கு இருந்து நகர்த்தினேன். எதற்கோ கட்டுப்பட்டவர்போல என்னோடு நடந்துவந்து வண்டியில் ஏறிக்கொண்டார்.

அவர் தன்னியல்பாக  மீண்டும் மீண்டும் `ப்ச்’ கொட்டிக்கொண்டே இருந்தார்.

“ப்ச்... இன்னும் ஒரு வருஷம் இருந்துருக்கலாமேடா... ரமேஷ் பய கல்யாணம் வரைக்கும். அந்தப் புள்ள என்னடா பாவம் பண்ணான், அவர் காலையே சுத்திக்கிட்டு இருப்பான்டா, இப்படிப் படக்குனு போய்ட்டாரு... ச்ச.”

மூர்த்தி அண்ணனை எப்படி சமாதானம் சொல்லித் தேற்றுவது என உண்மையிலேயே தெரியவில்லை. அமைதியாக காரை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

அங்கு தெருவில், `கல்யாண சாவு’ எனத் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 85 வயது வரை வாழ்வாங்கு வாழ்ந்து, இறந்தவர்.

அவருடைய 80-வது வயது நிறைவை விசேஷமாகக் கொண்டாட முடிவெடுத்த மூர்த்தி அண்ணன், பந்தல் போடச் சொல்லி ஏற்பாடு செய்ததும், பந்தலுக்கான மூங்கில் கம்புகளை ஊன்றும்போதே ஆட்கள் கூடிவிட்டார்கள்... மூர்த்தி அப்பா இறந்துவிட்டாரோ என. பதறிப்போய் முதலில் வாழைமரத்தைக் கட்டினார் மூர்த்தி அண்ணன்.

``விடப்பா திருஷ்டி கழிஞ்சதுனு வெச்சுக்க...’' எனத் தேற்றினார்கள் மூர்த்தி அண்ணனை.

நான் சற்றே குறைத்து மதிப்பிட்டுவிட்டு, மூர்த்தி அண்ணனிடம் பட்டெனச் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் அதை எதிர்கொண்டவிதம் எனக்குள் பயத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. எங்கே இவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ எனப் பதறிப்போனேன்.

“ச்ச... நான் காலையில வேலைக்குக் கிளம்பி வர்றவரைக்கும் நல்லாத்தானடா இருந்தாரு? ஏன்டா ரகு, ஏதாவது சொல்றா... கீழ ஏதும் விழுந்துதொலச்சாரா?”

பதில் சொல்லி ஒன்றும் ஆகப்போவது இல்லை என்பதால், அமைதியாகவே இருந்தேன். அதுவும் நம்மை விட ஆறேழு வயது மூத்தவரைச் சமாதானம்செய்வதாக எந்த வார்த்தைகளை உபயோகித்திட முடியும்? சம்பிரதாய வார்த்தைகளைவிடவும் மெளனம்தான் இழவு வீட்டாரை எதிர்கொள்ள சரியான வழி என்பதாகப்பட்டது.

தெருவில் மூர்த்தி அண்ணன் என்றாலே, எங்களுக்கு எல்லாம் ஒருவித பரவசம் கலந்த பயம்.

நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போது, எந்நேரமும் அவர் வீட்டு மொட்டைமாடியில் நடந்து நடந்து படித்துக்கொண்டே இருப்பார்.

பெரிய பெரிய மீசை தாடிவைத்த அண்ணன்கள் எங்கிருந்தோ அவரைத் தேடிவருவதும், காலையில் கல்லூரி, மாலையாகிவிட்டால் கபடி விளையாடப் போவதும் என தெருவில் எப்போதும் பிஸியாக இருப்பார்.

நாங்கள் தெருவில் ஒன் பிச் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்போம். எவ்வளவு அவசரமாகச் சென்றாலும், எங்களைக் கடக்கும்போது ஒரு நிமிடம் நின்று, மட்டையைப் பிடுங்கி, ஒரு ஓவர் ஆடிவிட்டுத்தான் செல்வார்.

விடுமுறை மதிய நேரங்களில் நாங்கள் மெதுவாக எட்டிப்பார்ப்போம். மூர்த்தி அண்ணன் தலை தெரிந்தால், ஆமை சட்டென தன் தலையை ஓட்டுக்குள் இழுத்துக்கொள்வதுபோல் மீண்டும் வீட்டுக்குள் ஓடிவிடுவோம். அரை மணி நேரம் பந்து போடச் சொல்வார். கூடவே கணக்கு, அறிவியல் எனக் கேள்விகள் கேட்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்