அறம் காப்போம்!

டந்த மே மாதம் தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல், அதிக அளவில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகச் சொல்லி ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி தேர்தல் ரத்துசெய்யப்பட்டது அதுவே முதல்முறை. இந்தத் தேர்தல் ரத்து, இந்திய அளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இப்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலோடு தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கும் தேர்தலை அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அப்போது வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட எந்தத் தடையையும் தேர்தல் ஆணையம் விதிக்கவில்லை.

அதனால் ஏற்கெனவே தஞ்சாவூரிலும் அரவக்குறிச்சியிலும் எந்த வேட்பாளர்கள் பணப்பட்டுவாடா செய்தார்கள் எனக் காரணம்காட்டி, தேர்தல் ரத்துசெய்யப்பட்டதோ, அதே வேட்பாளர்களையே இரண்டு கட்சிகளும் அதே இரண்டு தொகுதிகளில் நிறுத்தியுள்ளன. அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதன் வீட்டில் சோதனை, 570 கோடி ரூபாய் கன்டெய்னர் விவகாரம், கே.சி.பழனிச்சாமி வீட்டில் சோதனை என பரபரப்பான பல விஷயங்கள் நடந்து, ஜனநாயகத்துக்கு அழுக்கையும் இழுக்கையும் ஏற்படுத்தின. ஆனாலும் சர்ச்சைக்கு உள்ளான அதே வேட்பாளர்களையே இரண்டு கட்சிகளும் மீண்டும் நிறுத்துவது, அரசியல் அறம்தானா என்பதை யோசிக்க வேண்டும். ஒருவேளை அத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாது என்றும், இந்த  வேட்பாளர்களே மக்களுக்குச் சேவைசெய்ய சரியான வேட்பாளர்கள் என்றும் அந்தக் கட்சிகள் கருதினால், ஏற்கெனவே சர்ச்சைக்கு உள்ளான விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகத் தங்கள் விளக்கத்தைத் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையமும் தன்னைச் சுயவிசாரணை செய்துகொள்ளவேண்டிய தருணம் இது. பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும், தொடக்கத்தில் இருந்தே இத்தகைய பணப்பட்டுவாடாவைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி பணப்பட்டுவாடா செய்து பிடிபடும் வேட்பாளர்களை, தேர்தலில் போட்டியிடத் தடைவிதிக்க வேண்டும்.

அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் அறிவுரை கூறுவதோடு முடிந்துவிடவில்லை இந்த விவகாரம். வாக்காளப் பெருமக்களாகிய நாமும் நம்மைச் சுயவிசாரணை செய்துகொள்ள வேண்டும். வாக்கு என்பது வெறுமனே வாய்ப்பு மட்டும் அல்ல; தேர்தல் ஜனநாயகம் என்னும் பாரம்பர்யக் கட்டடத்தின் அசைக்க முடியாத அடித்தளம். தொடர்ச்சியாக அரசியல்வாதிகளால் ஏமாற்றப்படும் வாக்காளர்கள், தங்கள் பலத்தை நிரூபிக்க கையில் இருக்கும் கடைசி ஆயுதம். அதை ஐந்நூறுக்கும் ஆயிரத்துக்கும் விற்றுவிடாமல், ஜனநாயகத்தின் உண்மையான பலத்தை நிரூபிப்போம்;

அறம் காப்போம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்