கொளுத்துவது ஒன்றும் வரலாற்றில் புதியதல்ல

கவிதை: சுகுணா திவாகர் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி

நெருப்பைக் கண்டுபிடித்தபோதுதான்

நம் வரலாறு தொடங்கியதாகச் சொல்லப்பட்டது.

வரலாறு என்பது

நெருப்பாற்றின் கரையில் வளர்ந்த குழந்தை.

இடமுலை திருகி எறிந்ததில்

எரிந்தது ஒரு நகரமெனில்

வாலின் கருநிழல் படிந்து

எரிந்தது மற்றுமொரு நகரம்.

பின்னும் வன்மம் குறையாது

நகரத்தின் மன்னனின் உருவப்பிரதிகள் மீது

ஆண்டுதோறும் தீ சூழ்கிறது.

முன்னையிட்ட தீ, அன்னையிட்ட தீ

மங்கையிட்ட தீ, கொங்கையிட்ட தீ என

வரலாற்றில் நெருப்பு நின்று விளையாடியது.

தீ எப்போதும் ஒரே திசையில் எரிவதில்லை,

அது காற்று போல், நதி போல், கண்ணீர் போல்,

முத்தம் போல் நில்லாது பரவுகிறது.

அந்த நெருப்பு

ஒரு சர்ப்பத்தின் தலையைப் போல இருந்தது.

காலத்தின் மகுடி ஓசையில்

அது நெளிந்து நடனம் ஆடியது.

அது ஓர் அழகிய நடனம் என்று சொல்வதற்கில்லை.

காலத்தின் இடுக்குகளில்

தீ பரவுகிறது

ஓர் அகதியின் ரகசியப் பாடல் போலவும்

தன்பால் புணர்ச்சியாளனின் அழைப்பைப் போலவும்.

வரலாற்றில் எப்போதும் நெருப்பு அணைவதில்லை.

கொளுத்துதலை நாம் நிறுத்தியதுமில்லை.

புத்தகங்கள் கொளுத்தினோம்

உருவ பொம்மைகள் கொளுத்தினோம்

குடிசைகள் கொளுத்தினோம்

வழிபாட்டிடங்கள் கொளுத்தினோம்.

மனிதர்களையும் சிலநேரம் விலங்குகளையும் பறவைகளையும்

கொளுத்துவதற்கு எதுவுமில்லா சமயங்களில்

வரலாற்றை இழுத்துவந்து கொளுத்துவோம்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்