அத்தை - கவிதை

கரிகாலன், ஓவியம்: செந்தில்

தெற்குவெளி வெயிலையும் மீறி
மாவும் கொடுக்காபுளியும் விளாவும்
பறித்ததெல்லாம் யாருக்காக

கூடவே அலைந்து
ஒரு சேவகனைப்போல
வேப்பமுத்துக்களைச் சேகரித்துத்
தந்தோமே யாருக்காக

நல்லரவமும் கட்டுவிரியனுமுலவும்
கருப்பேரிக்காட்டின் நள்ளிரவில்
கரும்பும் மரவள்ளியும்
திருடிவந்தது யாருக்காக

கோடையின் தெருமுனையில்
ஆதிவராகநல்லூர் ஐஸ்காரருக்குக்
காத்திருந்து குச்சி ஐஸ்
வாங்கியதெல்லாம் யாருக்காக

மழைக்காலங்களில் மரத்தின்
வேர்களில் பூத்த குடைக்காளான்களைக்
குடை பிடிக்காமல் நனைந்தபடி
கொண்டுவந்தோமே யாருக்காக

அடிக்கடி செயின் கழன்றுகொள்கிற
பழைய ஹெர்குலீஸை 20 மைல் மிதித்து
டவுனுக்குப் போய் வாண்டுமாமா,
இரும்புக்கை மாயாவி, அன்னக்கிளி
பாட்டுப் புத்தகமெல்லாம்
வாங்கியளித்தது யாருக்காக

சே-வும் செக்கிழுத்த செம்மலும்
கொடிகாத்த குமரனும் படாத
பாடுகளையெல்லாம் இம்மண்ணில்
பட்டோமே யாருக்காக

`மருமவனே... மருமவனே’யென
வாய்நிறைய அழைப்பாளே அத்தை
அவள்பெற்ற அழகுக் கிளி
அஞ்சலைக்காகத்தானே

பல்லாங்குழி ஆடும்போது
அத்தை மகள் சிரிப்பில் மயங்கி
தோத்தாங்குளி ஆனோமே
`அத்த மக அஞ்சல
அவ குடியிருப்பதென் நெஞ்சில'
என்றெல்லாம் கவிதையெழுதினோமே

ராத்திரியெல்லாம் கண்விழித்து
அவள் கோலத்துக்குப் பறங்கிப் பூ
பறித்துவந்தோமே
வெண்டைப் பிஞ்சு விரல்களில்
மருதாணி இட்டோமே

ஒரு தை மாதத்தில் மஞ்சள்பையில்
மகளின் கல்யாணப்
பத்திரிகையைக் கொடுத்து
ஊரெல்லாம் வைக்கச்
சொன்னாளே அத்தை

இதற்காகவா பட்டோம்
அத்தனை சிரமங்களும்

இவ்வளவு வேலைபார்த்தும்
வேலையில்லாத
வெட்டிப்பையனென்று நினைத்தாளே

கடைசியில்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்னுக்குட்டியென
பாட்டு சொல்லித்தரும் ஒண்ணாப்பு
வாத்தியாருக்குத்தானா அஞ்சலை

எல்லாவற்றையும் மன்னித்துவிடலாம்
சோகமாய் தாடி வைத்துத் திரிந்தபோது
`கவலப்படாத மருமவனே
அஞ்சல இல்லன்னா என்ன
அஞ்சாப்பு படிக்கிற சின்னமவ
அன்னத்தக் கட்டிக்க' எனத்
திரும்பவும் முதலில் இருந்து
ஆரம்பித்தாளே அத்தை

அவளை இப்போது நினைத்தாலும்
அடிவயிறு எரியத்தான் செய்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்