சாதிகளிடம் ஜாக்கிரதை!

இரா.கலைச்செல்வன் - படம்: சொ.பாலசுப்ரமணியம்

பாலி' பட இயக்குநர், தன் அடுத்த படைப்புடன் தயாராகிவிட்டார். இந்த முறை இயக்குநராக அல்ல... தயாரிப்பாளராக!

``சில விஷயங்களை ஆவணப்படுத்துவதற்கான தேவை, இங்கே மிக அதிகமாகவே இருக்கிறது. வெகுஜன சினிமாவில் பேச முடியாத அரசியலை, அதிக சுதந்திரத்தோடு ஆவணப்படங்களின் வழியே பேச முடியும் என நம்புகிறேன். அரசியல் மட்டும் அல்ல, இன்னும் நிறைய விஷயங்களை ஆவணப்படுத்தவேண்டிய அவசியம் இருக்கிறது'' - `சாதியிடம் ஜாக்கிரதை', `டாக்டர் ஷூ மேக்கர்' என அடுத்தடுத்து இரண்டு ஆவணப்படங்களுடன் வந்திருக்கிறார் தயாரிப்பாளர் பா.இரஞ்சித். இரண்டுமே தீவிரமான அரசியல் படங்கள்.

2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி ஹரியானாவின் மிர்ச்பூர் கிராமத்தில், ஒரு நாய், `ஜாட்' சமூக மனிதர்கள் சிலரைக் கண்டு குரைத்தது. அந்தக் குரைப்புக்கான மனிதர்களின் எதிர்வினை படுபயங்கரமாக இருந்தது. அடுத்த சில நாட்களில் ஜாட் சமூகத்தினர் அந்த ஊரின் தலித்கள் மீது பெரும் வன்முறையைக் கட்டவிழ்த்தனர். தலித் கடைகள் உடைக்கப்பட்டன; தலித்கள் வசிக்கும் வீடுகளை எரித்துச் சாம்பலாக்கினர்.

கலவரத்தில் ஆளுக்கொரு பக்கமாகப் பயந்தோட, தாரா சந்த் என்கிற 70 வயது முதியவரும், அவரின் மாற்றுத்திறனாளி பெண்ணான சுமனும் வீட்டில் சிக்கிக்கொள்கிறார்கள். சாதியம் மூட்டிய தீயில் கருகி, செத்து மடிகிறார்கள். இந்தக் கலவரத்துக்கும் உயிர்ப் பலிகளுக்கும் காரணம், ஒரு நாய்... தலித் ஒருவரால் வளர்க்கப்பட்ட நாய்.

தலித்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து, இந்தியா முழுக்க அலைந்து திரிந்து ஆய்வுகள் நடத்திவருபவர் இயக்குநர் ஜெயக்குமார். சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டையே உலுக்கிய `மனோஜ் - பப்ளி'யின் ஆணவக்கொலை குறித்து அறிந்துகொள்ள ஹரியானாவுக்குச் சென்றார். அங்கே சுற்றித் திரியும்போதுதான் மிர்ச்பூரின் சூழல் ஜெயக்குமாரைப் பெரிய அளவில் பாதித்தது. பா.இரஞ்சித்திடம் பகிர்ந்துகொண்டார். இரஞ்சித் இதைத் தயாரிக்க சம்மதம் தெரிவிக்க, `சாதியிடம் ஜாக்கிரதை' ஆவணப்படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டன.

`தலித்தாகப் பிறந்ததால் நாங்கள் மனிதர்கள் இல்லையா ? பசுவைத் தெய்வமாக வழிபடுபவர்கள், எங்களை ஏன் சக உயிராகப் பார்க்க மறுக்கிறார்கள்? இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவைச் சொல்லுங்கள். இல்லையென்றால், எங்களைக் கொன்று போடுங்கள். தினம் தினம் இறந்துபோவதைவிடவும் ஒரேயடியாகச் செத்து மடிகிறோம்' இயக்குநர் ஜெயக்குமாரின் `சாதிகளிடம் ஜாக்கிரதை' ஆவணப்படத்தில் ஒலிக்கும் தலித் பெண்ணின் குரல் இது. இப்படி ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களின் அழுத்தமான பதிவே இந்த ஆவணப்படம்.

``இந்தச் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அது குறித்த ஆவணப்படத்தை எடுக்க என்ன காரணம்?''

``இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கான குறைந்தபட்ச நீதிகூடக் கிடைக்கவில்லை. மேலும், அவர்களின் வாழ்வாதாரமே பெரிய கேள்வியாக இருக்கிறது. அவர்களின் குரலை ஒலிக்கவைக்கும் சிறு முயற்சிதான் இது.

மிர்ச்பூரில் இந்தக் கலவரச் சம்பவம் நடந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன, இன்றும்கூட 50-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அவர்கள் நிற்பது ஜாட் சமூகத்தின் பாதுகாப்புக்காக. மேலும், பாதுகாப்புக்காக இருக்கும் வீரர்களே குடித்துவிட்டு கலாட்டா செய்வது, தலித் பெண்களை பாலியல் தொந்தரவு செய்வது எல்லாம் நடக்கின்றன. அதைத்தான் இந்த ஆவணப்படத்தில் பதிவுசெய்திருக்கிறோம்'' என்கிறார் ஜெயக்குமார்.

இந்த ஆவணப்படத்தைக் காணும்போது, 1993-ம் ஆண்டில் காவல் துறையினரின் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி, தொடர் போராட்டங்களைச் சந்தித்து, இறுதியில் தோல்வி கண்டு தன் 38 வயதில் மரணமடைந்த `அத்தியூர்' விஜயா, மேலவளவு பஞ்சாயத்தின் தலித் தலைவர் முருகேசன் தலை வெட்டப்பட்டது, சின்ன உஞ்சனை `கண்டதேவி' தேரோட்டத்தில் தலித்கள் கொலைசெய்யப்பட்டது, பரமக்குடி துப்பாக்கிச் சூடு... என வரலாறும் வாழ்க்கையும் மறக்கடித்த பல சம்பவங்களை நினைவுக்கு வந்துபோவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்