சொல்வனம்

ஓவியம்: செந்தில்

மீன்கள் எங்கே போயிருக்கும்?
முன்பொரு காலத்தில்
மரங்கள் அடர்ந்த பறவைக் கரைகளோடு
இங்கோர் அழகிய ஓடையிருந்ததென்று
நான் காட்டிய இடத்தில்
இன்று கரிய சாலையிருந்தது.
இரண்டு பக்கமும் கடைகள் வழிந்திருந்தன.
`ஓடையென்றால் என்னப்பா?’ என்கிறாள் அம்மு
`வாட்டர் ஸ்டிரீம்’ என்றதும் தலையாட்டுகிறாள்
`எவ்வளவு பெரிய ஓடை அது?’ என்று கேட்கிறாள்
`குழந்தைகள் நீந்துமளவு குட்டி ஓடை’ என்கிறேன்
`அப்ப குட்டிக் குட்டி மீன்களெல்லாம் இருந்திருக்கும்’
அவளாகவே ஒரு முடிவுக்கு வருகிறாள்.
`பெரிய மீன்கள் எல்லாம் எங்கே இருந்துச்சுப்பா?’
`அதோ தெரிகிறதா பேருந்து நிலையம்
அங்கே முன்பொரு தாமரைக் குளமிருந்தது
இந்த ஓடை அங்கே சென்றுதான் கலக்கும்
பெரிய மீன்களெல்லாம் அங்கேதானிருந்தன’
சொல்லிவிட்டு அமைதியாகிறேன்
இப்போது ஓடைக்கரையின் இருமருங்கிலும்
தள்ளுவண்டிகளில் சில்லி ஃபிஷ் விற்கிறார்கள்.
வித் கூலிங் லிட்டர் இருபத்தைந்து ரூபாய்க்கு
பேருந்து நிலையத்தில் தண்ணீர் கிடைக்கிறது.
`அந்த மீன்களெல்லாம் எங்கே போயிருக்கும்?’
கவலையாகக் கேட்கிறாள் அம்மு
முனை திரும்பிவந்து குலுங்கி நிற்கிறது
விடுமுறை முடிந்து நகரம் நோக்கி
நாங்கள் செல்லவிருந்த சொகுசுப் பேருந்து.

- ஷான்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்