“ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு!”

எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: பா.காளிமுத்து

ட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வைகோவுடன் நடத்தும் முதல் சந்திப்பு இது. செம உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. காரணம், எட்டு ஆண்டுகளாக நடந்த அரசு விரோத வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. கறுப்பு சால்வையைச் சரிசெய்துகொண்டே கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார்.

‘‘எட்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் இருந்து விடுதலையாகி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?”

‘‘பாலகங்காதர திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற புகழ்வாய்ந்த தலைவர்கள் மீது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது எந்தப் பிரிவுகளில் வழக்கு போட்டார்களோ, அதே பிரிவுகளில் என் மீது கலைஞர் கருணாநிதி போட்ட வழக்கு இது.  இந்த வழக்கில் சுதந்திர இந்தியாவில் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பொடா சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, முதன்முதலில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட முதல் எம்.பி-யும் நான்தான். `அப்படி ஒரு வாய்ப்பு மீண்டும் கிடைக்கும்போல் இருக்கிறது' என்று, என் மனதை அதற்குத் தயார்படுத்தி வைத்திருந்தேன். இது நியாயமற்ற வழக்கு என உணர்ந்ததால், நீதிமன்றம் என்னை விடுதலை செய்துவிட்டது. எனக்கு சிறை தண்டனை தரப்பட்டிருந்தால், எங்கள் தோழர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். இந்த விடுதலைகூட எனக்குச் சின்ன ஏமாற்றம்தான். எந்தத் தண்டனையும் என்னையும் எனது உறுதியையும் குலைத்துவிடாது. இந்தத் தீர்ப்பு எனக்கு விடுதலை தந்த தீர்ப்பு மட்டும் அல்ல; ஈழத் தமிழர்களுக்கும் மனித உரிமை ஆர்வலர்களுக்கும் கிடைத்துள்ள தீர்ப்பு!”

‘‘மொத்தம் 52 ஆண்டுகால அரசியல் பொதுவாழ்வு.அதில் 22 ஆண்டுகள் ம.தி.மு.க பொதுச்செயலாளர்... இந்த அரசியல் பயணம், உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?’’

‘‘என் மீது கொலைப்பழி சுமத்திய 1993-ம் ஆண்டு, நான் வேதனையின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். ‘ஏன் அரசியலுக்கு வந்தேன்?’ என்றே வருத்தப்பட்டேன். இந்த 22 ஆண்டு அரசியலில், சில முட்டாள்தனமான முடிவுகளை எடுத்துள்ளேன் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, சிறையில் இருந்து வெளியே வந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாதது.  அந்த ஆண்டு நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன். நான் எம்.பி-யாக இல்லாமல் போய்விட்டேன். ஆனாலும் அந்த ஐந்து ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன் சிங்கை 17 தடவைப் போய்ப் பார்த்து, ‘இலங்கைக்கு,  ராணுவத்தை அனுப்ப வேண்டாம்; ஆயுதம் கொடுக்க வேண்டாம்’ எனக் கெஞ்சினேன். இதுவே நான் எம்.பி-யாக இருந்திருந்தால், டெல்லியில் அனைத்து தலைவர்களையும் சந்தித்திருக்கலாம்; நாடாளுமன்ற விவாதங்களில் பேசியிருக்கலாம். காங்கிரஸ் அரசின் துரோகச் செயலை வெளிக்கொண்டுவந்து, ராணுவ நடவடிக்கையைத் தடுக்க முடியாமல் போய்விட்டதே என நிறைய முறை வருத்தப் பட்டிருக்கிறேன்.

என்னை பொடாவில்  சிறையில் அடைத்த ஜெயலலிதாவுடனேயே 2006-ம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தேனே... அதுவும் ஒரு முட்டாள்தனமான நடவடிக்கைதான். அதனால்தான் என் மீதான நம்பகத்தன்மை பொதுவெளியில் நொறுங்கி தரைமட்டமானது. அதன் பிறகு, 2011-ம் ஆண்டில்  நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆறு ஸீட், ஏழு ஸீட் எனச் சொல்லி 12 ஸீட்டுக்கு வந்தபோது, நாங்கள் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என முடிவெடுத்தோம். அப்போது ஜெயலலிதா எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் ஏழு இடங்களில், ‘ உங்கள் அன்புக்குரிய சகோதரி’ எனக் குறிப்பிட்டிருந்தார். வேறு யாருக்கும் அவர் இப்படிக் கடிதம் எழுதியது கிடையாது. 

இத்தகைய தவறான முடிவுகள் எடுத்தாலும், அது அரசியல்ரீதியாக பல விமர்சனங்களைக் கொடுத்தாலும் எனது போராட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டு வாழ்ந்துவந்தேன். அந்த ஐந்து ஆண்டுகாலத்தில் முல்லைப்பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை என இடைவிடாத போராட்டங்கள் நடத்திவந்தேன். இப்போதும் மக்கள் பிரச்னைகளை முன்வைத்தே அரசியல் செய்துவருகிறேன். தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் மத்தியில் ஒருவன் கட்சி நடத்துவதே சாதனைதானே! மக்களுக்காகப் போராட ம.தி.மு.க இருக்கிறது என்ற பெயரை வாங்கியிருக்கிறோம்.”

‘‘இவ்வளவு அரசியல் அனுபவம்கொண்ட நீங்கள், முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவித்தது சரி என நினைக்கிறீர்களா?”

‘‘ `விஜயகாந்த்தை நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகச் சொன்னதால், உங்கள் இமேஜ் போய்விட்டதே’ எனச் சொல்கிறார்கள். அதை நான் மறுக்கவில்லை. ஆனால், எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

பத்து ஆண்டுகள் கழித்து, 2015-ம் ஆண்டில் கலைஞர் எனக்கு போன் செய்தார். பேரன் அருள்நிதிக்குத் திருமணம் வைத்திருப்பதாகவும் அதற்கு வரவேண்டும் என்றும் சொன்னார்.  ‘சிலதெல்லாம் நாமாக வரவழைத்துக் கொள்வது தானே...’ என்று பேசும்போது அவர் சொன்னார். அந்த வார்த்தைக்கு ஆயிரம் அர்த்தங்கள். அதன் பிறகு அருள்நிதியின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க ஸ்டாலின், தமிழரசு ஆகிய இருவரும் வந்தார்கள். எட்டு மாவட்டச் செயலாளர்களுடன் வாசலில் நின்று பொன்னாடை போத்தி வரவேற்றேன். அந்தத் திருமணத்துக்குப் போன எனக்கு உரிய மரியாதை தரவில்லை. ஸ்டாலின் மேடையில் பேசும்போதும் அவமரியாதை தொடர்ந்தது. ஆனால், நான்  பேசும்போது ஸ்டாலினை மரியாதையோடுதான் பேசினேன். 23 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்னும் ஸ்டாலின் மனநிலை மாறவில்லை என்ற எண்ணம் அந்தத் திருமண வீட்டில்தான் எனக்கு ஏற்பட்டது.

திருப்பூரில் உள்ள எங்கள் தொழிற்சங்க இடத்தை, தி.மு.க ஆட்சியில்தான் அபகரித்துக் கொண்டார்கள். அந்த வழக்கில் நீதிமன்றம் ம.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தீர்ப்பு சொன்ன பிறகும் தி.மு.க-வினர் அப்பீலுக்குப் போனார்கள். இந்த விஷயத்தை நான் கலைஞருக்குச் சொல்லி அனுப்பினேன். அந்த ஆவணங்களையும் அவருக்குக் கொடுத்து அனுப்பினேன். அவரும்  ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார். ‘அப்பீல் போக வேண்டாம்’ எனச் சொல்லியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் எங்கள் கட்சியில் இருக்கும் சிலரை ஸ்டாலின் தொடர்புகொண்டு, ‘ தி.மு.க கூட்டணிக்கு ம.தி.மு.க-வைக் கொண்டுவந்துவிடுங்கள். அப்படி இல்லை என்றால் நீங்கள் வந்துவிடுங்கள். உங்களுக்கு உரிய இடத்தைக் கொடுக்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார். உள்மனதில் ஸ்டாலினுக்கு நம் மீது நல்லெண்ணம் இல்லை. ஆகவே ம.தி.மு.க-வைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நான் அந்த முடிவை எடுத்தேன்.

மக்கள் கூட்டு இயக்கம் நடத்தவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜனும் ஜி.ராமகிருஷ்ணனும் வந்தார்கள். திருமாவளவனும் பேசினார். `வெற்றி பெற முடியுமா?' எனக் கேட்டேன். `போராடி பார்ப்போம்' என்றார்கள். `அ.தி.மு.க - தி.மு.க-வுக்கு மாற்று அணியை உண்டாக்குவோம்' என்றார்கள். திருமாவளவன்தான் முதன்முதலில் மூன்றாவது அணி குறித்து என்னிடம் பேசினார். அப்போது விஜயகாந்த் அவர்கள் தி.மு.க-வுடன்தான் போகப்போகிறார் என்ற செய்தி, பலமாக அடிப்பட்டது. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் `விஜயகாந்த் வந்தால் நாம் வெற்றி பெற முடியும்’ என்றார்கள். `முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால்தான் கூட்டணிக்கு வருவோம்’ என்று விஜயகாந்த் சொன்னார். நாம் வெற்றிபெறவேண்டும் என்றால், இதுதான் சரி என நாங்களும் ஒப்புக்கொண்டோம். ஆனால், விஜயகாந்த் பெயரை முன்மொழிந்தது தவறுதான்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்