“அப்பா, இப்பதான் ஆம்புலன்ஸில் வந்தார்!”

வெ.நீலகண்டன், படங்கள்: ப.சரவணகுமார்

``ஆட்டோவுல அப்பா தூங்கிட்டு இருந்தப்போ, யாரோ ஒரு அங்கிள் கார்ல வந்து மோதிட்டாங்களாம். அப்பாவுக்கு தலையில் அடிபட்டுடுச்சாம். ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோனப்போ, அப்பா, சாமிக்கிட்ட போயிட்டாராம். இப்பதான் ஆம்புலன்ஸ்ல அப்பா வந்தார். தலை எல்லாம் கட்டுப் போட்டிருந்தது. பாவம் அப்பா!'' - இழப்பின் வலி அறியா இளம் பிஞ்சு மயிஷா, தன் மாமாவின் மொபைலில் `டெம்பிள் ரன்' விளையாடிக்கொண்டே பேசுகிறாள்.

ஏழு வயது மயிஷா எதிர்கொண்டுள்ள இழப்பு, சாதாரணமானது அல்ல. நான்கு மாதங்களுக்கு முன்னர் தங்கையையும் தாயையும் இழந்த மயிஷா, இப்போது கொடூர விபத்தில் தன் தந்தையையும் பறிகொடுத்துவிட்டாள். சென்னை கதீட்ரல் சாலையில், கடந்த செப்டம்பர் 19-ம் தேதி அதிகாலை குடிபோதையில் கார் ஓட்டி வந்த ரேஸ் வீரர் விகாஸ் ஆனந்த் ஏற்படுத்திய விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகத்தின் மகள்தான் இந்த மயிஷா. பெற்றோரையும் சகோதரியையும் அபகரித்துக்கொண்டு இந்தக் குழந்தையைத் தனிமைப்படுத்திவிட்டது காலம்.

திருத்தணிக்கு அருகில் இருக்கிறது அகூர் கிராமம். வடக்குத் தெருவில் புதிதாகக் கட்டி பூச்சுப் பணி முடியாத அந்தப் புதிய வீடு, துயரத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆறுதல் சொல்ல வரும் அனைவரின் பார்வையும் மயிஷாவின் மீதே நிலைத்திருக்கிறது. பேத்தியின் தலையை வருடியபடி கம்மியக் குரலில் துயரம் ததும்பப் பேசுகிறார் ஆறுமுகத்தின் அம்மா கிருஷ்ணவேணி.

“எனக்கு மொத்தம் ஆறு பசங்க. ஆறுமுகம், கடைசிப் பையன்; கடுமையான உழைப்பாளி. பத்தாவதுக்கு மேல அவனுக்கு படிப்பு ஏறலை. கட்டட வேலை, விவசாய வேலைக்குப் போவான். கொஞ்ச காலம் ஆட்டோ ஓட்டினான். எந்தக் கெட்டபழக்கமும் இல்லாத புள்ளை. என் அண்ணன் மகளைத்தான் கல்யாணம் பண்ணி வெச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு, உள்ளூர்ல வருமானம் பத்தலை. `சென்னைக்குப் போறேன்'னு கிளம்பினான். `ஆட்டோ எல்லாம் வேணாம்டா. இங்கேயே ஏதாவது ஒரு தொழிலைப் பார்த்துக்கிட்டு, பொண்டாட்டி புள்ளையோடு நிம்மதியா இரு'னு சொன்னேன். `இங்கே இருந்தா, உப்பு-புளிக்குக்கூட சம்பாதிக்க முடியாது. வெளியே போனாத்தான் நாலு காசு கையில் நிக்கும்'னு சொல்லிட்டுப் போனான். சொந்த ஆட்டோ வாங்க வசதி இல்லை. ஒருத்தர்கிட்ட வாடகைக்கு எடுப்பான். 24 மணி நேரத்துக்கு 300 ரூபாய் வாடகை. பெட்ரோல் நாமதான் போட்டுக்கணும். ஒரு வாரம் ரெண்டு வாரம்னு ஆட்டோவுலயே தங்கி, சென்னையில் ஓட்டிட்டு, ஊருக்கு வருவான். கடந்த எட்டு வருஷங்களா இதுதான் அவன் வாழ்க்கை.

ராத்திரி நேரத்துல, ரோட்டோரத்துல ஆட்டோவைப் போட்டுட்டுத் தூங்குவான். அன்னைக்கு சாயங்காலம், `ரொம்ப உடம்பு வலியா இருக்கும்மா. சீக்கிரமே ஸ்டாண்டுக்கு வந்துட்டேன்'னு சொல்லிட்டு, மயிஷாகிட்ட ரொம்ப நேரம் பேசினான். `வீட்டுக்கு வரும்போது ரிப்பனும் பொட்டும் வாங்கிட்டு வாப்பா'னு மயிஷா சொல்லிட்டிருந்தா. `நாளைக்கு சாயங்காலம் கிளம்பி வர்றேன். நீ நல்லா படி'னு சொன்னான். படுபாவி... குடிபோதையில ஒருத்தன் கார் ஓட்டிட்டு வந்து எங்க குடும்பத்தையே அழிச்சுட் டானேய்யா...'' என்று கதறுகிறார் கிருஷ்ணவேணி.

சில வருடங்களுக்கு முன்னர் கிருஷ்ண வேணியின் இன்னொரு மகன் அருணகிரி, கிணற்றில் விழுந்த மாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது, கிணற்றில் மூழ்கி இறந்து விட்டார். அவரது இரண்டு பெண் குழந்தைகளும் கிருஷ்ணவேணியின் பராமரிப்பில்தான் இருக்கிறார்கள்.

ஆறுமுகத்தின் மனைவி பெயர் புஷ்பா. பத்தாவது வரை படித்திருந்தார். மயிஷாவோடு சேர்த்து இரண்டு குழந்தைகள். இளையவள் பெயர் ரஞ்சனா. முதல் வகுப்பு படித்தாள். கணவனின் சுமையைக் குறைப்பதற்காக, பிள்ளைகளை மாமியார் வீட்டில் விட்டுவிட்டு, கூலி வேலைக்குச் செல்வாராம் புஷ்பா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்