திரைத்தொண்டர் - 27

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம்

ப்போதும்போல் அப்போதும் நான் கேட்காமலேயே அழைத்து கால்ஷீட் கொடுத்தார் ரஜினி சார். ‘தெலுங்குல என் ஃப்ரெண்ட் மோகன்பாபு படம் ஓகோனு ஓடிட்டு இருக்கு. அதோட ரைட்ஸ் வாங்கி இங்கே பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுது. அந்தப் படத்தைப் பார்த்துட்டு  முடிவுபண்ணுங்க’ என்றார். அந்தத் தெலுங்குப் படத்தைத் தயாரித்தவர் பிரகாஷ் ராவ். இவரைப் பற்றி இந்தத் தொடரின் ஆரம்பத்திலேயே நான் சொல்லியிருக்கிறேன். நான் இளைஞனாக இருந்தபோது, என்னை நம்பி சிவாஜி சாரிடம் கதை சொல்ல அனுப்பியவர். சினிமாவில் நான் வளர்ந்த பிறகு அவரின் இரண்டு மூன்று தெலுங்குப் படங்களை தமிழில் ரீமேக் செய்ததில் நல்ல பழக்கம். அவரைச் சந்தித்தேன். அந்தப் படத்தையும் பார்த்தேன். எனக்கும் பிடித்திருந்தது. அதன் தமிழ் ரீமேக் ரைட்ஸை வாங்கினேன்.

சந்தர்ப்பச்சூழலால் ஹீரோவுக்கு இரண்டு மனைவிகள். ஒருவரைப் பற்றி மற்றவருக்குத் தெரியாமல் எப்படி இருவரையும் ஹீரோ சமாளிக்கிறார் என்பதுதான் கதை. ஆனால், இரண்டு மனைவிகள் கதையில் வந்த தமிழ்ப் படங்கள் அப்போது பெரிதாக ஓடியது இல்லை. அதனால் எனக்கு பயம். காமெடிக்கு ஸ்கோப் உள்ள கதைதான். ஆனால், தெலுங்கில் நிறைய லாஜிக் மீறல்கள். தமிழ் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளக்கூடிய அளவுக்கு அதை எல்லாம் மாற்றி, நிறைய காமெடிகளைச் சேர்த்து டெவலப் செய்தேன். அப்போது ஹீரோயினாக வளர்ந்துகொண்டிருந்த ரோஜா - மீனாவை, ரஜினி சாருக்கு ஜோடியாக ஃபிக்ஸ் பண்ணினேன். டைரக்‌ஷன், சுரேஷ் கிருஷ்ணா. படத்தை ஒரே ஷெட்யூலில் முடித்தோம். அந்தப் படம் ரிலீஸாகி மிகப்பெரிய வெற்றி. அந்தப் படம்தான் ‘வீரா’. தமிழ் சினிமா வரலாற்றில் கோடிகளைத் தாண்டி வியாபாரமான முதல் படம் ‘வீரா’தான்.

அதுவரை வருடத்துக்கு நான்கைந்து படங்களில் நடித்துக்கொண்டிருந்த ரஜினி சார், ‘வீரா’வுக்குப் பிறகு படங்களைக் குறைத்துக்கொண்டார். ‘எப்ப தோணுதோ அப்ப படம் பண்ணலாம்’ என முடிவுசெய்து, இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படம் பண்ணிக்கொண்டிருந்தார். அதிலும் வெளி கம்பெனிகளுக்குக் குறைவாகத்தான் பண்ணினார். பெரும்பாலும் சொந்தப்படங்களே. அவருக்கு வெளியில் பண்ணும் ஐடியா இருந்திருந்தால், நிச்சயமாக என்னைக் கூப்பிட்டு ஒரு படம் கொடுத்திருப்பார். ஒரே ஒருமுறை, `நாம மறுபடியும் ஒரு படம் பண்ணுவோமா?’ என, நானே போய்க் கேட்டேன்.

‘படம் பண்ணணும்னு ஐடியா வரும்போது, நானே உங்களைக் கூப்பிடுறேன் சார்’ என்றார். ‘வாழ்க்கை முழுவதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தவர், ஒரு நிலைக்கு வந்த பிறகு அவருக்கு என சில விஷயங்களில் முடிவெடுக்க உரிமை இல்லையா என்ன?’ என நினைத்து, அவரை அதன் பிறகு நான் தொந்தரவு பண்ணவே இல்லை.

கமல் சாரும் அப்போது ‘மருதநாயகம்’ படத்தை பெரிய அளவில் திட்டமிட்டு எடுத்துக்கொண்டிருந்தார். அதனால் வேறு எந்தப் படங்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், அந்தப் படம் நின்றுபோன பிறகு அதில் இருந்து மீண்டு வர அவர் மிகவும் சிரமப்பட்டார். அந்தச் சமயத்தில் அவரிடமும் போய் கால்ஷீட் கேட்டேன். ‘நானே இப்ப ரொம்ப சிரமப்பட்டுட்டு இருக்கேன். எனக்கு மொத்தமா யாராவது பணம் கொடுத்தால், அதை வெச்சு கடனை எல்லாம் அடைச்சுடுவேன். ஆனா, `மொத்தப் பணத்தையும் கொடுங்க, உங்களுக்கு கால்ஷீட் தர்றேன்’னு உங்ககிட்ட கேட்கிறது நியாயம் இல்லைண்ணே. நீங்க வெயிட் பண்ணுங்க. நான் எங்கேயும் போகப்போறது இல்லை. நாம படம் பண்ணுவோம்’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்