ஆண்பால் பெண்பால் அன்பால் - 3

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
#MakeNewBondsகவிஞர் மனுஷ்ய புத்திரன், ஓவியம்: பிரேம் டாவின்ஸி

வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்ச உள்ளனர்.

மாதொருபாகனாக வாழும் கொடுப்பினை, எல்லோருக்கும் வாய்த்துவிடாது. என் மனம், ஒரு பகுதி ஆணாகவும் ஒரு பகுதி பெண்ணாகவும்தான் இருக்கிறது. ஒன்று இன்னொன்றை இடைவிடாமல் கனவு காண்கிறது; அறிய முற்படுகிறது. `என் கவிதைகளில் நான் ஏன் பெண்களைப் பற்றி அல்லது பெண்களின் மன உலகம் பற்றியே அதிகம் எழுதுகிறேன்?' என்ற கேள்வியை அடிக்கடி சந்திக்கிறேன். மறைந்த கவிஞர் ஞானக்கூத்தன், என் கவிதைகளைப் பற்றி குறிப்பிட்டபோது `அது பெண்கள் பால் வைத்த நேயம்’ எனக் குறிப்பிட்டார்.

என் வாழ்க்கையின் எந்தக் காலகட்டத்தை எடுத்துக்கொண்டாலும், அது பெண்களைப் பற்றிய நினைவுகளால் ததும்புகிறது. ஆண்கள் எப்போதும் நிழல்களாக, மங்கிய சித்திரங்களாக இருக்கிறார்கள். பாலூட்டும் பெண்கள் மீது வீசும் பால் வாசனைபோல, என் சொற்களின் இடையே பெண் வாசனை எப்போதும் இருக்கிறது. நான், பெண்களால் வளர்க்கப்பட்டவன்; பெண்களோடு வளர்ந்தவன்.

என் தாத்தா, சிங்கப்பூரில் மதபோதகராக இருந்து இறந்துபோனார். ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தை, தனி ஒருத்தியாக நின்று உருவாக்கியவள் என் பாட்டி. அவள், எங்கள் வயல்களில் ஆட்சி செலுத்தினாள்; பருவத்துக்கு ஏற்ப எதையேனும் பயிரிட்டுக்கொண்டே இருந்தாள். பள்ளிக்குச் சென்றுவிட்டு, மனம் சோர்ந்தபடி வீட்டில் வந்து அமர்ந்திருப்பேன். என்னை, அவள் அப்படியே விடவில்லை. வயலில் பயிரிட்ட மக்காச்சோளக் கதிர்களை எடுத்து வந்து என்னிடம் கொடுத்தாள். என் வீட்டு வாசலில் ஒரு சாக்குப்பையை விரித்து, நான் அவற்றை விற்க ஆரம்பித்தேன். பிறகு, மாமரங்கள் காய்க்கும் காலங்களில் மாங்காய்களையும் மாழ்பழங்களையும் கொண்டுவந்தாள். நிலக்கடலை, சீதாப்பழங்கள் என நான் எங்கள் தெருவின் பிரபலமான வணிகனாக மாறியபோது எனக்கு வயது ஒன்பது. பிறகு, சந்தையில் இருந்து கரும்புக்கட்டுகளை வாங்கிக்கொடுத்தாள். அவற்றை நான் துண்டு போட்டு விற்க ஆரம்பித்தேன். ஆரஞ்சுமிட்டாய், கடலைமிட்டாய், பால்கோவா, கல்கோனா என, என் வர்த்தக சாம்ராஜ்ஜியம் விரிவடைந்தது. பணத்தைக் கையாள அப்போதே கற்றுக்கொண்டேன்.

`ஓர் எழுத்தாளனான நீங்கள் எப்படி ஒரு நிறுவனத்தைச் செயல்படுத்துகிறீர்கள்?' என யாராவது கேட்கும்போது, `என் பாட்டி, எனக்கு மாங்காய்களை விற்கக் கற்றுக்கொடுத்தாள்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். இது ஒரு தலைமுறை சார்ந்த விஷயம். அடிப்படையில் அவள் கடும் உடல் உழைப்பாளி; ஒரு விவசாயச் சமூகத்தின் பிரதிநிதி. வயலில் வேளாண்மை, வீட்டில் மாடுகளும் கோழிகளும் சூழ்ந்திருந்தன.

பேரப் பிள்ளைகளுக்கும் பாட்டிகளுக்குமான உறவு, பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவைவிட மேலானது. ஏனெனில், பெற்றோர் - பிள்ளைகள் இடையிலான உறவில் ஓர் அதிகார யுத்தம் நிழல்போல படர்ந்திருக்கும். ஆனால், தாத்தா-பாட்டி உறவில் அது தோழமையின் பெரும் வெளிச்சமாகப் பரவும். எந்த நிலையிலும் வாழ்க்கை சோர்ந்து அமரக்கூடியது அல்ல என்பதை கற்றுத்தந்தவள் என் பாட்டிதான்.

அத்தைகள், மாமிகள், சித்திகள், இளம் பருவத்துத் தோழிகள் என, பெண்களின் வழியே உருவான உணர்வுகள்தான் என் மனதின் பாதைகளை உருவாக்கின. நடை பயின்ற ஒரு வயதில் இருந்து மூன்று வயது வரை யாராவது ஓர் அத்தையையோ சித்தியையோ தேடி ஓடிக்கொண்டேதான் இருந்திருக்கிறேன் என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.

`ஒருநாள்கூட அவனை வீட்டில் இருக்கவிட மாட்டீங்களா?’ என, என் சித்திகளிடம் அம்மா அலுத்துக்கொண்டிருக்கிறாள். பிறகு, நான் வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு காலம் வந்தபோது, இதை நினைத்து நினைத்து அழுதிருக்கிறாள்.

என் அம்மாவுக்கு நான் கொடுத்தது எல்லாம் துயரத்தின் கரைக்க முடியாத சுமைகள். மருத்துவமனை மருத்துவமனையாக அலைந்தாள். தர்ஹாக்களுக்கு என்னை அழைத்துச்சென்றாள். எனது நினைவுகளில் முதலாவது வேளாங்கண்ணியில் மாதாவின் முன்பாக நான் அமர்ந்திருப்பது. பிறகு, அம்மாவும் நானும் டூரிங் தியேட்டரின் சினிமா இருளுக்குள் உட்கார ஆரம்பித்தோம்.  அம்மா, நான் எதை நினைப்பேனோ, அதுதான் `சரி' என நம்பினாள். ஐந்தாம் வகுப்பில் `நான் இனி பள்ளிக்குச் செல்லப்போவது இல்லை’ என்றபோது, ‘உனக்குப் பிடிக்கலைன்னா விட்டுடு’ என்றாள்.

நான் எழுதிய என்னுடைய முதல் புத்தகம், 16 வயதில் வெளிவந்தது. ஒரு பிற்பகலில் தபால் மூலம் அந்தப் புத்தகத்தின் பிரதிகள் என்னை வந்து சேர்ந்தன. ஏன் எனத் தெரியாமல், அதை அன்று முழுக்க ஒளித்துவைத்திருந்தேன். மாலையில் அதை அம்மாவின் கையில் கொடுத்தேன். பார்த்துக்கொண்டே இருந்தாள். பிறகு, கேவிக்கேவி அழத் தொடங்கினாள். அவளது தோளில் அழுத்திக்கொண்டிருந்த என்னைப் பற்றிய பாரம், அந்தக் கண்ணீரில் கரைந்துகொண்டிருந்தது.

இப்போதும் எங்கேயாவது உடல் நலம் இல்லாத அல்லது மனநலம் இல்லாத குழந்தையோடு போராடிக்கொண்டிருக்கும் ஓர் அன்னையைக் காணும்போது மனம் கசிந்து நின்றுவிடுகிறேன். அத்தகைய குழந்தைகளுக்காக தன் வாழ்வின் அத்தனை மகிழ்ச்சிகளையும் கனவுகளையும் கைவிட்ட பெண்கள் இருக்கிறார்கள். தங்கள் ஆளுமையை ஒளித்துக்கொண்ட  அன்னையர்கள் இருக்கிறார்கள். என் அம்மா என் நிமித்தமான அத்தனை சிலுவைப்பாடுகளையும் ஏன் ஏற்றுகொண்டாள்? அவளின் வழியே நான் வந்தவன் என்பதாலா? இல்லை, அவள் இயற்கையின் ஓர் அநீதிக்கு எதிராகப் போராடினாள். கைவிட முடியாத ஓர் அறத்துக்காகப் போராடினாள். உடல் நலமற்ற ஒரு குழந்தைக்காகத் தன்னையே ஒப்புக்கொடுப்பது அவளைப் பொறுத்தவரை அறத்துக்கான, நீதிக்கான போராட்டம். அது ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கிற ஆதார குணம்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது சுமதி என்கிற பெண், எங்கள் வகுப்புக்கு வந்தாள். ஒருநாள் மாலை, வகுப்பறையில் நானும் அவளும் மட்டும் இருந்தோம். அவள் எதையோ எழுதிக் கொண்டிருந்தாள். அவளிடம் முதல் வார்த்தையை எப்படியாவது பேசிவிட வேண்டும் என நினைத்தேன். ``சுமதி’’ என்றேன். அவள் தலையைத் தூக்கிப் பார்த்தாள்.

“எங்க வீட்டுக்கு ஒருநாள் வர்றியா?'' என்றேன்.

“எதுக்கு?’’ என்றாள் சிரித்துக்கொண்டே.

“இல்லை... எங்க அம்மா உன்னைப் பார்க்கணும்னு சொன்னாங்க’’ என்றேன் தடுமாறிக்கொண்டே.

“எங்க அப்பா திட்டுவாரே!’’ என்று சொல்லிக்கொண்டே, மறுபடியும் எழுத ஆரம்பித்துவிட்டாள்.

அந்தியின் மஞ்சள் வெளிச்சம் அவள் முகத்தில் பிரகாசமாக விழுந்துகொண்டிருந்தது. அதே அந்தியின் வெளிச்சம்தான் இப்போதும் என் மனதில் விழுந்துகொண்டிருக்கிறது. எங்கேயோ அவள் ஏதோ ஒருவிதமாக இருக்கக்கூடும். நான் வாழ்நாள் முழுக்க இப்படித்தான் ஓர் அன்பை, ஒரு ப்ரியத்தை எந்த ஒரு பெண்ணிடமும் சொல்ல முடியாமல் தவித்து நின்றிருக்கிறேன். ஏதோ ஒன்று என் நெஞ்சில் அடைத்துக்கொண்டுவிடும். என் வாழ்க்கையில் இருந்த காதல்கள் அனைத்தும், அந்தப் பெண்கள் என் கன்னத்தில் அறைந்து எனக்குச் சொன்னவைதான்.

பெண் தன் ப்ரியத்தை ஒரு சிலந்தி வலைபோல பின்னுகிறாள். பல்வேறு நுட்பமான இழைகளின் வழியே ஓர் ஆணை ஆட்கொள்கிறாள். இந்த உலகத்தில் ஓர் ஆண் அடையும் அத்தனை துன்பங்களுக்கும் தான் மட்டுமே மருந்து என நம்பவைத்துவிடுகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் மனதை எடுத்துக்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை. பல சமயங்களில், ஓர் ஆணை ஒரு பெண் நேசிப்பதற்கான காரணங்கள் எளிதில் அறிய முடியாதவை. திரைப்படங்களில் அல்லது பொதுவான சமூக மதிப்பீடுகளில் தன்னை அடக்கி ஆளக்கூடிய அல்லது தன்னைப் பாதுகாக்கக்கூடிய ஓர் ஆணைத்தான் ஒரு பெண் விரும்புகிறாள் என்ற ஒரு பிம்பம் திரும்பத் திரும்ப முன்வைக்கப்படுகிறது. இது ஆண்களால் இட்டுக்கட்டப்படுகிற பெண்மை குறித்த பொய்யான பிம்பம். உண்மையில் ஒரு பெண், தான் பாதுகாக்கக்கூடிய தன்னைச் சார்ந்திருக்க்கூடிய, தன் நிழலுக்காகப் பரிதவிக்கிற ஓர் ஆணைத்தான் விரும்புகிறாள். அவளிடம் அடைக்கலம் தேடிவருகிற ஓர் ஆணிடம்தான் அவள் சகஜமாகவும் இணக்கமாகவும் இருக்கிறாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்