சிக்ஸர் சரிதை!

பரிசல் கிருஷ்ணா

பாலிவுட்டின் முடிவில்லா பயோ பிக் வரிசையில் இப்போது களம் இறங்கியிருப்பது கேப்டன் கூல் தோனியின் சிக்ஸர் சரிதை.

பீஹார் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மைதானத்துக்குத் தண்ணீர் தெளித்துப் பராமரிக்கும் பம்ப்-மேன், அப்பா பான் சிங் தோனி (அனுபம் கெர்). ‘ஆடி போய் ஆவணி வந்தா டாப்பா வருவான் பையன்’ கேரக்டரில் தோனியின் அம்மா. தம்பியின் கனவுகளுக்குத் தோள் கொடுக்கும் அக்கா என்று, சராசரிக் குடும்பம். 

எப்போதும் ஃபுட்பாலே கதியாகக் கிடக்கும், கோல் கீப்பரான தோனியிடம், `விக்கெட் கீப்பிங் செய்றியா?’ எனக் கேட்கிறார் பள்ளியின் கிரிக்கெட் பயிற்சியாளர். ‘சின்ன பந்துல யாராச்சும் விளையாடுவாங்களா?’ என ஆரம்பத்தில் மறுக்கிற தோனி, பிறகு அவரிடம் மறுக்க முடியாமல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபடுகிறார். அடிப்படையில் பேட்டிங்கில் ஆர்வம்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அதிலும் பயிற்சி மேற்கொண்டு... ஒருகட்டத்தில் ரயில்வேயில் அவருக்கு வேலையும் கிடைக்கிறது.

தொடர்ந்து இப்படியே வேலைசெய்வதா, அல்லது கிரிக்கெட் விளையாடப் போவதா என இடைவேளையில் முடிவெடுக்கும் அவர், என்ன செய்தார் என்பதும், அதன் பின்னான சாதனைகளும் நாம் எல்லாம் அறிந்த கதைதான். ஆனால், அதைப் படமாக்கிய விதத்துக்காக நீரஜ் பாண்டேவுக்குப் பூங்கொத்து நீட்டத் தோன்றுகிறது.

படத்தின் காஸ்டிங்கைத் தேர்வுசெய்த குழுவுக்கு இரட்டைப் பூங்கொத்து. ஹீரோவாக சுஷாந்த் சிங் ராஜ்புத்... அத்தனை பொருத்தம். கொஞ்சம் கொஞ்சமாக என்றெல்லாம் இல்லாமல், முதல் ஃப்ரேமில் இருந்தே தோனியாக  நம் மனதில் உட்கார்ந்துவிடுகிறார். அவர் உழைப்பு நடிப்பில் மிளிர்வது மட்டும் அல்ல... கிரிக்கெட்டிங் ஷாட்களிலும் கன கச்சிதம்.

கிரிக்கெட் தெரியாத ரசிகர்களையும் மனதில் கொண்டு வசனங்களை அமைத்திருக்கிறார் இயக்குநர். ‘பீஹார்காரங்களுக்கு கிரிக்கெட்டை விட பாலிட்டிக்ஸ் ரொம்பப் பிடிக்குமே’, ‘வாழ்க்கையும் கிரிக்கெட் மாதிரிதான். பாலுக்குத் தகுந்த மாதிரி அடிக்கக் கத்துக்கோ. எல்லா பாலும் அடிக்கிற பாலாவே வராது’, ‘வேலை வேணும்கிறதுக்காக எல்லாம் அவுட் ஆக மாட்டேன்’ என ரசிக்க வைக்கிற பன்ச் வசனங்கள்.

சாக்‌ஷியின் காதல் ஆரம்பிக்கிற விதம் அழகு. அதற்குப் பிறகு அலுப்பு. படத்தின் ஸ்பீடுக்கு பிரேக் போடுகின்றன அந்தக் காட்சிகள். அதன் பிறகு ரசிகர்களை இழுக்கவைக்க, ஒரிஜினல் மேட்சையே காட்டுகிறார்கள்.

எல்லாம் சரி... ஆனால் இது உண்மையிலேயே தோனியின் பயோ பிக் என்றால் அவரது அண்ணன் எங்கே? முக்கியமான முடிவாக சீனியர் ப்ளேயர்களை நீக்கியதை ஜஸ்ட் லைக் தட் காட்டி நகர்ந்துவிட்டார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் உடையில் வந்து கையெழுத்துப் போட்டதோடு சரி, அந்தப் போட்டிகளைக் காட்டவே இல்லையே... அதற்கும் தடையா என்ன? கிரிக்கெட் என்பதே குழு விளையாட்டு தானே! படத்தில் தோனி, தோனியைத் தவிர ஒன்றும் இல்லை எனக் களம் இறங்கியது சரியா? அவர் பற்றிய சர்ச்சைகளே இல்லையா? படம் முழுக்க அத்தனை நல்லவராகவே காட்டியதன் மூலம், ‘சினிமாவுலகூட இவ்வளவு நல்லவனைப் பார்க்க முடியாதே’ என நினைக்க வைத்துவிட்டார்கள்!

ஒரு பயோ பிக்கை இத்தனை சுவாரஸ்யத்துடன் கொடுக்க முடியும் எனக் காட்டியதற்காக நம்ம தல தோனிக்குப் பெரிய விசில் போடலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்