வேர்களைப் பலப்படுத்தும் விழா!

சில அரசியல் கட்சிகளே எதிர்பாராதவகையில் உள்ளாட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு, அதே வேகத்தில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, வேட்புமனு தாக்கலும் முடிந்துவிட்டது.
மாநகராட்சிகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையில் மாற்றம் கொண்டுவந்ததில் தொடங்கி அவசர அவசரமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் விதம் வரை எழுந்த சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் தக்க பதில்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் ஜனநாயகத் திருவிழாவாக நம் முன் வந்திருக்கிறது உள்ளாட்சித் தேர்தல்.

குடிநீர், கால்வாய், குப்பை, சாலை வசதி, தெருவிளக்கு, கொசு ஒழிப்பு... போன்ற நம்முடைய அடிப்படைப் பிரச்னைகளை, நம் பகுதியில் நம்முடன் வசிக்கும் ஒருவரால்தான் புரிந்துகொள்ள முடியும். இந்த அடிப்படைப் புரிதலோடுதான், உள்ளாட்சி அமைப்புகளின் பல பதவிகளுக்காக நடத்தப்படும் தேர்தல், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக வைக்கப்பட்டிருக்கிறது. அடிமட்டத்தில் இருக்கும் கடைசி குடிமகன் வரை அதிகாரம் சென்று சேர வேண்டும் என்பதுதான், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படை நோக்கம். மகாத்மா காந்தி தன் வாழ்நாளில் அடிக்கடி பேசிவந்த `கிராம சுயராஜ்ஜியம்' என்னும் கருத்தாக்கத்தின் அடிப்படையும் இதுதான்.

அதனால் இந்தத் தேர்தலை, தங்களின் பலத்தை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பாக அரசியல் கட்சிகள் கருதாமல், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பாகக் கருத வேண்டும். எந்தவித எதிர்மறை விமர்சனங்களுக்கும் இடம் கொடுக்காமல் இந்தத் தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தவேண்டிய பொறுப்பு, மாநில அரசுக்கும் மாநில தேர்தல் ஆணையத்துக்கும் இருக்கிறது.

திடீர் பணக்காரர்களான பல எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்களோடு ஒப்பிடும் அளவுக்கு, பதவி கிடைத்த மிகக் குறுகிய காலத்திலேயே பெரும் செல்வந்தர்களான பல கவுன்சிலர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். எனினும், உண்மையான அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்கள் சேவை செய்யும் ஒருசிலர், இன்னமும் பொதுவாழ்வில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால், பஞ்சாயத்து அமைப்புகள் மீது எவரும் விரக்தி அடையவேண்டியது இல்லை.

இதை ஏதோ முக்கியத்துவம் இல்லாத தேர்தல் என வாக்காளர்கள் குறிப்பாக, இளம் வாக்காளர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் என்று பார்க்காமல், மக்கள் சேவையில் நாட்டம் உள்ளவரா என்பதை மட்டும் அலசி ஆராய்ந்து, அத்தகையவர்கள் பதவிக்கு வர நல்லாட்சியை விரும்பும் அனைவரும் களப்பணியாற்ற வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர்களைப் பலப்படுத்தும் அழுத்தமான நடைமுறைதான் இந்த உள்ளாட்சித் தேர்தல் என்பதை, உணர வேண்டும்; ஆட்சியாளர்களுக்கும் உணர்த்த வேண்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்