ஜென் Z - புலி ஆடு புல்லுக்கட்டு - 10

டாக்டர். ஆர்.கார்த்திகேயன், ஓவியம்: காமேடி

  

#தமிழ்_தெரியாதா?

மதுரை விமானப் பயணத்தில் என் அருகில் இருந்த பெரியவர், ஒரு குழந்தையை மடியில் அமர்த்தி வைத்துக்கொண்டிருந்தார். வேட்டி சட்டையில் எளிமையாகத் தோற்றமளித்தார். விமானப் பணியாளர் வந்தார். குழந்தையுடன் பயணிப்பதால் பாதுகாப்பு சடங்காகப் பேச ஆரம்பித்து, ``என்ன மொழி பேசுவீர்கள், ஆங்கிலமா... இந்தியா?’' எனக் கேட்டார். இந்த இரு மொழியும் தெரியாவிட்டால், யாரும் மதுரைக்குப் பயணிக்க முடியாதோ என்பதுபோல ஒரு பார்வை பார்த்தார் பெரியவர். விமானப் பணியாளர் கவலைப்படாமல் தான் சொல்ல வந்ததை ஒப்பிக்க ஆரம்பிக்க, ``தமிழ் தெரியாதா?’' எனத் திருப்பிக் கேட்டார்.

இதை எதிர்பார்க்காத பணியாள் சற்றுத் தடுமாற, ``பரவாயில்லை... இந்தியில் சொல்லுங்கள் புரியும்'’ என்று நிதானமாகக் கேட்க ஆரம்பித்தார்.

நம் ஊரில் நம் மொழி தெரியாமல், ஓர் ஆள் அந்நிய மொழியில்தான் பேச வேண்டும் என்றால், நம்மில் பலர் சிறுத்துப்போகிறோம். `ஆக்சுவலி ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட், பட்...' என இழுப்போம். ஆனால், அந்தப் பெரியவர் தன் கர்வம் குன்றாது, `தமிழ் தெரியாதா?’ எனக் கேட்டது அவ்வளவு ஆறுதலாக இருந்தது.

பிறகு பேசும்போது நிதானமாகச் சொன்னார்... “அவர் கேட்ட இரண்டு மொழிகளும் தெரியும் சார். ஆனால், அவர்கள் கேட்கும் தொனி தவறு என்பதைப் புரியவைக்கத்தான் ‘தமிழ் தெரியாதா?’ எனக் கேட்டேன்.’'

Assertiveness என்பது இதுதான்!

#கருத்து_முரண்பாடு

நோகாமல், நோகடிக்காமல் தன் கருத்தை பதற்றமோ, கோபமோ இல்லாமல் தெரிவிக்கும் கலை இது. மாற்றுக்கருத்தைத் தெளிவாக மனம் கலங்காமல், அதேநேரம் கண்ணியமாகப் பதிவுசெய்தல் சாதாரண செயல் அல்ல.

கருத்து முரண்பாடு என்றால், ஒன்று அந்த வாக்குவாதத்தில் இருந்து, `எஸ்’ ஆகிவிடுவோம். இல்லை `செத்தான் சேகரு!’னு எதிராளியை உண்டு இல்லைனு ஆக்கிவிடுவோம். இரண்டுமே ஆரோக்கியமானது அல்ல என்கிறார்கள் உளவியல் பெருமக்கள்.

`மனதில் உள்ளதை அப்படியே சொல்லுதல்’ என்பதே இங்கு நம் கலாசாரத்தில் பெரும்பிரச்னை. இங்கு சின்னப் பொய்கள் சுலபமாக ஏற்றுக்கொள்ளப்படும். மிக எளிய உண்மைகள்கூடத் திரித்துப் புரிந்துகொள்ளப்படும்.

விருந்தினர் வீட்டுக்குச் சென்று, அவர்கள் அன்புத்தொல்லையைத் தட்ட முடியாமல் தட்டு நிறைய மிக்ஸரையும் உறுதியான மைசூர்பாகையும் அரை குண்டான் காபியையும் உள்ளே தள்ளிவிட்டு, வெளியே வந்து சபிப்போம்.

``அந்த மிக்ஸர் என்னிக்கு வாங்கியதோ? சுவீட் அதுக்கு மேலே... காபியா அது? வாயைக் கெடுத்துக்கிட்டதுதான் மிச்சம். வேண்டாம்னா விடவாப்போறான்?'’

`வேண்டாம்!’ என்பதைச் சொல்லத் தெரியாத நம் ஆளுமைப்பிழையை மறைத்து, எதிராளியைக் குற்றம் சொல்கிறோம்.

`வேண்டாம்’ எனச் சொல்லத் தெரிந்தால் நம் பசங்க பல கெட்ட பழக்கங்களில் இருந்து தப்பித்து விடுவார்கள்.

#பிரித்துப்பார்

இந்தப் புத்தகம் வாங்கிப் படிக்காவிட்டாலும், இந்தத் தலைப்பை எங்கேயாவது எழுதி வைத்துக்கொண்டு தினமும் ஒருமுறை பாருங்கள்.

`Don’t say YES when you want to say NO’

`நெஞ்சத்தைக் கிள்ளாதே' படத்தில் ஒரு காட்சி. சுஹாசினியை மோகன், பிரதாப் இருவரும் விரும்புவார்கள். ஆனால், பிரதாப்பைத் திருமணம்செய்ய சம்மதிப்பார் சுஹாசினி. மோகன் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி, `ஏன் என்னைவிட்டுட்டு அவனை செலெக்ட் செய்தாய்?’ எனக் கேட்க, சுஹாசினி சொல்லும் பதில் அற்புதமானது... `அவன் `கல்யாணம் செஞ்சுக்கலாமா?’னு கேட்டான். நீ கேக்கலையே!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்