சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

அமைதிப் பூங்கா

பள்ளிக்குப் போன மகள்
பத்திரமாக வீடு திரும்பிவிட்டாள்
அவளை யாரும்
கத்தியால் குத்தவில்லை.
வீட்டிலிருந்த மனைவிக்கு
எந்த ஆபத்துமில்லை
அவளை மிரட்டி
வீட்டை யாரும் களவாடிச் செல்லவில்லை.
அலுவலகம் சென்றிருந்த நானும்
வீடுவந்து சேர்ந்துவிட்டேன்
வழியில் யாரும் என்னை
வெட்டிச் சாய்க்கவில்லை.
இனி
இந்த இரவைக் கடந்தாக வேண்டும்
பத்திரமாக.

- அ.நிலாதரன்

அஸ்தியாவின் உலகம்

ஒரே ஒரு களிமண் உருண்டைதான்
வழங்கப்பட்டது பெருங்கருணையுடன்.
முதலில் அம்மா செய்தாள்
அது கொஞ்சம் பாலூட்டியது.
மறுபிசைவில் அப்பா செய்தார்
தலைகோதி முத்தமிட்டது.
இரண்டு பாகமாக உடைத்து
பிறகு திருப்தியுறாமல்
சிறுசிறு உருண்டைகளாக்கி
சிறு சிறு அண்ணன்களை உருவாக்கினாள்
அவர்கள் தோள்களில் அமர்த்தி
விளையாட்டுக் காட்டினார்கள்.
மீதமிருந்த சிறு உருண்டைகளை
தங்கைகளாக்கினாள்
ஓடிப்பிடித்து விளையாடியதோடு
சண்டையும் போட்டார்கள்.
இரவுக்கு என்ன அவசரமோ
தன்னைப் பகலாக்கத் துவங்க
களிமண் பிடுங்கப்பட
திடுக்கிட்டு விழித்த சிறுமி அதிஸ்யா
அன்றைய சமையல் வேலைக்குத் தயாராகிறாள்.

- க.அம்சப்ரியா

பக்கத்து வீடு

என் பக்கத்து வீட்டில்தான் தம்பி குடியிருக்கிறான்.
பக்கத்து வீடென்றாலும்
நாங்கள் பேசிக்கொள்வது கிடையாது.
என் மனைவிக்கும் அவன் மனைவிக்கும்
எப்போதும் ஆகாது.
பக்கத்திலேயே இருப்பதால் அடிக்கடி சண்டை வரும்.
ஆகவே நாங்கள் இருவரும் தனித்தனியாக
பக்கத்துப் பக்கத்து வீடுகளில் குடியிருக்கிறோம்.
இதில் சில அதிசயங்களும் உண்டு.
என் பிள்ளைகள் அவன் வீட்டில் போய்
எப்போதும் சாப்பிட்டு வருவார்கள்.
அவனுடைய பிள்ளைகள் வழக்கம்போல்
என் வீட்டில் விளையாடிவிட்டுப் போவார்கள்.
எங்கள் குழந்தைகள் மீது எங்களுக்கு அவ்வளவு பாசம்.
எங்கள் அப்பாவும் அம்மாவும் இன்னும் இருக்கிறார்கள்.
எங்கள் வீட்டிற்குப் பின்னால் வசிக்கிறார்கள்.
எப்போதாவது நாங்கள் எதிர்படும்போது
ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதோடு சரி.
இதில் என்ன ஆச்சர்யமென்றால்
நாங்கள் இருப்பது பக்கத்துப் பக்கத்து வீடுகள்தாம் எனினும் பக்கத்துப் பக்கத்து வீடுகள் அல்ல...
ஒரே வீட்டுக்குள் இருக்கும்
பக்கத்துப் பக்கத்து அறைகள்.

- எஸ்.நடராஜன்

கஸ்பேகி மலைச்சிகரம்

கஸ்பேகியின் பனிசூழ் பசுமலைச் சிகரங்களை
அருகிருந்து பார்க்கப் பார்க்க
எவ்வளவு ஆனந்தமாயிருக்கிறது.
நந்தவன நளின வளைகோடுகளுக்குப் பின்னிருந்து
ஆஸ்துமாவில் வீழ்ந்த அம்மாதான் சிலுசிலு
குளிர்க்காற்றால் எனை ஆசுவாசம் செய்கிறாளென்று
நிச்சயத்திலும் நிச்சயமாக எனக்குத் தெரியும்.
மேலும் தெரியும்
வெம்மையின் வெடிப்பில் உதிர்ந்த தீஞ்சொல்லைக்
கொத்தி விருட்டெனப் பறந்த காதலி
அங்கு அந்த செர்ரி மரத்தினடியில்தான்
கண்ணீர் உகுக்கிறாளென்றும்.
காயங்கொண்ட சிறுகுகளை ஆறுதலாகத் தடவி
ஒருமுறை அவள் உள்ளங்கைகளில்
முகம் புதைக்க வேண்டும்போலிருக்கிறது
பின் சற்று சாவதானமாக அம்மாவின் மடியில்
தலைசாய்த்தால் உறுதியாக அதுதான் சொர்க்கம்.
எப்போதாவது விழிக்குமென் ஆறாவது கண்
இப்போதா விழிக்க வேண்டும்
அங்கு யாருமே இருக்கப்போவதில்லையெனும்
உன் தாக்கத்தை உளமாற ஏற்கிறேன் நண்ப.
எனினும்
ஒருமுறையேனும்
ஒரேயொருமுறையேனும்
அதன் நிச்சலன புதிர்முகங்களுக்குப் பின்னால்
சென்று வரவேண்டும் எனதன்பு நண்ப
அங்கு யாருமே இருக்கப்போவதில்லை என்றாலும்
யாராவது இருக்கலாம் என்பதற்காகவேனும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்