அப்போலோவில் ஜெயலலிதா - ஆடும் ஆட்சி... கலங்கும் கட்சி!

ப.திருமாவேலன்படங்கள்: தே.தீட்ஷித், மீ.நிவேதன், க.பாலாஜி

ம்மா மேற்பார்வை இல்லாத வீடு எப்படி உருப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். ‘அம்மா’ மேற்பார்வை இல்லாத கட்சி, ஆட்சி..?

குன்ஹா தீர்ப்பு தந்தது முதல் ஆட்சியே முடங்கிப்போனது. ‘இதோ வந்துவிடப்போகிறோம்' என்ற நம்பிக்கையில் இரண்டு சப்பாத்தி, கொஞ்சம் தயிர்சாதத்துடன் பெங்களூரு போன முதலமைச்சர் ஜெயலலிதாவை, ``உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகிவிட்டன. இதற்கான தண்டனை என்ன என்பதை, பிறகு சொல்கிறேன். நீங்கள் அந்த அறையில் உட்கார வைக்கப்படுகிறீர்கள்” என்று குன்ஹா சொன்னதை, ஜெயலலிதாவின் காதுகள் நம்பவில்லை. அதன் பிறகு அமைச்சர்களின் கால்கள் தலைமைச் செயலகம் செல்லவில்லை.

பாதிப்பேர் சென்னைக்கும் பெங்களூருக்குமாக அலைந்தார்கள். மீதிப்பேர் கோயில்களிலேயே குடிகொண்டார்கள். முதலமைச்சரின் செயலாளர்கள் பெங்களூரில் இருந்தார்கள். புதிய முதலமைச்சர் புகைப்படத்தை மாற்றாமல் ராஜ விசுவாசம் காட்டியது தமிழகச் செய்தித் துறை. அதிகாரிகள் பலர், கோட்டைக்கு வரவே இல்லை. வந்த சிலர் பார்த்துக் கொடுத்த வேலைதான், நத்தம் விசுவநாதன் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு நடத்த காரணம். இப்படி, கோட்டையே மூடப்பட்டது. குன்ஹா தீர்ப்பு - ஜாமீனில் ஜெயலலிதா விடுதலை - கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு - நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு என ஒன்றரை மாத காலத்தையும் திருவிழாவாகவே அ.தி.மு.க-வினர் மாற்றினார்கள்.

அந்தக் காலகட்டத்தில்தான் ஜெயலலிதாவின் உடல்நிலையும் குன்றத் தொடங்கியது. அவரே தலைமைச் செயலகம் வருவதைக் குறைத்துக்கொண்டார். வந்தாலும் இரண்டு மணி நேரத்தில் வீடு திரும்பிவிடுவார். சட்டமன்றம் நடைபெற்ற காலத்தில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகவே மன்றத்தில் இருந்தார். அமைச்சரவைக் கூட்டம், எப்போதாவதுதான் நடந்தது. அதிகாரிகள் கூட்டமும், `நடத்த வேண்டும்' என்ற கணக்குக்காக நடந்தது. மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வருபவர்கள் தவிர, நடைமுறைத் திட்டங்களுக்காக ஆலோசனை, மேம்பாட்டுச் சந்திப்புகள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்