திரைத்தொண்டர் - 28

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம்

னக்கு எவ்வளவு பிரச்னைகள்  இருந்தாலும்,  அவை பற்றி எல்லாம் யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால், எப்போதும் என்னுடனே இருக்கும் இளையராஜாவுக்குத் இதெல்லாம் தெரியாதா என்ன? தங்கர்பச்சானைக் கூப்பிட்டு, ‘பஞ்சண்ணனுக்கு ஒரு படம் பண்ணித்தாங்க’ எனச் சொல்லியிருக்கிறார். ‘அழகி’ படம் பிரமாதமாக ஓடிக்கொண்டிருந்த நேரம் அது. இளையராஜா சொன்னதற்காக, அவர் எனக்குப் படம் பண்ண ஒப்புக்கொண்டார்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய ‘தலைகீழ் விகிதங்கள்’ நாவலின் ரைட்ஸ் வாங்கி, அதன் கதையைச் சொன்னார். ‘நிச்சயம் வித்தியாசமான குடும்பப் படமாக இருக்கும்’ என்ற நம்பிக்கை வந்தது. ‘யாரை ஹீரோவாகப் போடலாம்?’ என்ற யோசனை. திடீரென ஒருநாள் வந்த தங்கர் சில போட்டோக்களைக் காட்டி, ‘இவரைப் போடலாமா?’ எனக் கேட்டார். வேட்டி, சட்டை, முண்டாசு என அந்த கேரக்டருக்குப் பொருத்தமான முகமாகத் தெரிந்தது. ‘ஆனால், இந்தப் படத்தில் இருக்கிறவரை எங்கேயோ பார்த்திருக்கிறேனே...’ என என்னை அறியாமல் சொன்னேன். ‘நல்லா யோசிச்சுப் பாருங்க...’ என்றார் தங்கர். ‘டைரக்டர் சேரன்தானே?’ எனச் சரியாகச் சொன்னேன்.

பேன்ட் ஷர்ட்டில் பார்த்துப் பழகிய சேரனை... வேட்டி, சட்டை, துண்டுடன் விறகு சுமந்து வருவது போன்ற காட்சியைப் பார்த்ததும், அந்த கேரக்டராகவே இருந்தார் எனத் தோன்றியது. ‘ஓ.கே சேரனையே ஃபிக்ஸ் பண்ணுங்க’ என்றேன். சேரனுக்கும் சந்தோஷம். அந்தப் படம்தான் ‘சொல்ல மறந்த கதை’. தங்கரும் நன்றாகவே எடுத்திருந்தார். ஓரளவுக்கு லாபம் கிடைத்தது. அதைவைத்து கொஞ்சம் கடனை அடைத்தேன்.

‘காத்திருந்தாலும் பரவாயில்லை. அடுத்து பெரிய படமாகப் பண்ணிவிட வேண்டும்’ என முடிவெடுத்தேன். சேரனிடமே பேசினேன். ‘நிச்சயம் பண்ணுவோம்’ என்றவர் பிறகு, ‘அண்ணே... சில பிரச்னைகள். அதனால நானே சொந்தமா ஒரு படம் பண்றேன். என் படத்தை முடிச்சுட்டு உங்களுக்குப் பண்ணித்தர்றேன்’ என்றார். அப்படி அவர் பண்ணின படம்தான் ‘ஆட்டோகிராஃப்’. மிகப் பிரமாதமான வெற்றிபெற்ற படம் அது. ‘அடுத்து நாம பண்ணுவோம்’ என்றபோது, ‘இன்னொரு சொந்தப் படம் பண்ணவேண்டிய சூழல். அதை முடிச்சுட்டு உங்களுக்குப் பண்றேன்’ என்றார். ‘ஓ.கே’ என்றேன். அதையும் முடித்தார். அதுவும் சூப்பர் ஹிட். அந்தப் படம் ‘தவமாய் தவமிருந்து’. அவர் மார்க்கெட் உயர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. ‘அடுத்து நமக்குப் பண்ணும்போது இது இன்னும் பலம்தானே. லேட்டானாலும் பரவாயில்லை’ எனக் காத்திருந்தேன்.

பிறகு ஒருநாள் கூப்பிட்டிருந்தார். போயிருந்தேன். ‘ ‘சேரன் திரும்பத் திரும்பக் குடும்பக் கதைகள் எடுத்துட்டிருக்கார்’னு சொல்லிடுவாங்களோனு பயமா இருக்கு. அதனால கொஞ்சம் வித்தியாசமா பண்ணுவோமா?’ என்றார். ‘எப்படி?’ என்றேன். ‘சொல்றேன்’ என்றார். வந்துவிட்டேன். பிறகு ஒரு மாதம் கழித்துபோய்ப் பார்த்தேன். ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஒட்டுமொத்தமாக மாறிப்போயிருந்தார். தலையை ப்ளீச் பண்ணி, நவநாகரிக வாலிபர்போல் தன்னை மாற்றிக் கொண்டிருந்தார்.

‘இந்தத் தோற்றத்துக்கான கதாபாத்திரம் இல்லையே... தாங்குவாரா, தப்பாப்போயிடுமே, இந்த மனுஷன் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆச்சே’ என மனதுக்குள் தோன்றியது. ஆனால், வெளிப்படையாக என்னால் சொல்ல முடியவில்லை. ‘சார், நீங்க பண்ணின எல்லா படங்களுமே ஹிட். என் சூழ்நிலையும் உங்களுக்குத் தெரியும். பேங்க்ல கடன் வாங்கிக் கொடுக்கிறேன். இதுதான் லாஸ்ட் சோர்ஸ். இது சரியா வரலைன்னா, எனக்குப் பெரிய பிரச்னை ஆகிடும்’ என்றேன். ‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் வராம நான் பார்த்துக்கிறேன். நீங்க ரிலாக்ஸா இருங்க’ என்றார். நானும் என் பையன் சுப்புவைக் கூப்பிட்டு, ‘அவர் இஷ்டத்துக்கு விட்டுடு. அவர் பண்ணித்தர்றேன்னு சொல்லிட்டார்’ எனச் சொல்லிவிட்டேன். அந்தப் படம்தான் ‘மாயக்கண்ணாடி’.

அதில் சேரன், நவ்யா நாயர் என முக்கியமான ஆர்ட்டிஸ்ட்கள் இரண்டே பேர்கள்தான். கால்ஷீட் பிரச்னையே கிடையாது. அவர் ஒரு கதை சொன்னார், எனக்குப் பயங்கர ஷாக். ‘நீ கனவு காணக் கூடாது. நீ எந்த வேலையில் இருக்கிறாயோ, அந்த வேலையிலேயே இருக்கணும். அதுக்கு மேல நீ ஆசைப்படுறது தப்பு; பேராசைப்பட்டால் பெருநஷ்டம்’ என்ற அர்த்தம் தொனிக்கும் கதை. ‘நெகட்டிவ் கதையாச்சே. இது எப்படி ஓடும்?’ என எனக்கு யோசனையாகவே இருந்தது.

‘படம் பார்க்க வர்றவங்களுக்கு அவங்களின் முன்னேற்றத்துக்கான வழிவகைகளைச் சொன்னா தான், ஆர்வத்தோடு பார்ப்பாங்க. ‘நீ இப்படித்தான் இருக்கணும்’னு சொன்னா எரிச்சலாவாங்க’ எனச் சொன்னேன். ‘இல்லல்ல... இந்தப் படத்தை நான் எப்படி எடுத்துக்காட்டுறேன் பாருங்க’ என்றார். ‘சரி பண்ணுங்க’ என்று ஒதுங்கிவிட்டேன். எந்த விஷயத்திலும் நான் தலையிடவில்லை. ஒருவழியாக படத்தை முடித்தார். அப்போதே ஆறரை கோடி ரூபாய்க்கும் மேல் செலவானது.  தென் இந்தியாவில், முதன்முதலில் தனியார் வங்கியில் சினிமா எடுக்க லோன் சேங்ஷன் ஆனது எனக்குத்தான். அதை வைத்துத்தான் அந்தப் படத்தை எடுத்தோம்.

ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத வகையில் எட்டு கோடி ரூபாய்க்கு அந்தப் படம் பிசினஸ் ஆனது. அதற்கு சேரன் மீதான எதிர்பார்ப்புதான் காரணம். ரிலீஸ் சமயம் ஏகப்பட்ட பிரச்னைகள். எங்கெங்கோ கடனை வாங்கி, பேங்க் லோன் கட்டி படத்தை ரிலீஸ் பண்ணினோம். ஆனால், ஏகப்பட்ட நஷ்டம். படம் எதிர்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

இப்படியான தொடர் தோல்விகளால் ஏற்பட்ட கடனை எப்படி அடைத்தேன், பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, என் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொண்டேன் என்பதைப் பற்றி பேசி அடுத்த வாரத்துடன் தொடரை முடித்துக் கொள்கிறேன். அதற்கு முன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி சில விஷயங்கள் பேசலாம் என நினைக்கிறேன். காரணம், இந்தத் தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து எனக்கு ஏகப்பட்ட தொலைபேசி அழைப்புகள். அவற்றில் பெரும்பாலானாவை, இப்போது சினிமா இயக்கிக் கொண்டிருக்கும் இளைய இயக்குநர்களின் அழைப்புகள்.

அவர்களில் பலரும், ‘உங்க படங்களோட வெற்றிக்கு உங்க திரைக்கதைக்குப் பெரும்பங்கு இருக்கு. திரைக்கதையை எப்படி அமைப்பீங்க..?’ - இப்படி ஏகப்பட்ட கேள்விகள். பலர் தங்களின் ஸ்க்ரிப்ட் புத்தகங்களைக் கொடுத்து, ‘படிச்சுட்டு கரெக்‌ஷன்ஸ் சொல்லுங்க சார்’ என்கிறார்கள். சிலர், தங்களின் குறும்படங்களைக் கொடுத்து, ‘இதை சினிமாவாக்கலாமானு பார்த்துட்டுச் சொல்லுங்க சார்’ என்கிறார்கள். இதற்கு எல்லாம் காரணம், நான் எழுதிய படங்களின் வெற்றி. அந்த வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் இல்லை என்றாலும் நான் பின்பற்றிய அந்தக் கதைசொல்லும் பாணி எனக்கு மிகப்பெரிய வெற்றிகளைக் கொண்டுவந்து சேர்த்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்