முக்தி பவனம்...

சிறுகதை: போகன் சங்கர், ஓவியங்கள்: செந்தில்

முக்தி பவனம்...

அகோபிலத்தில் வைத்துதான் இந்தப் பெயரை நான் முதன்முறையாகக் கேள்விப்பட்டேன்.அகோபிலத்துக்கு மழைக்காலத்தில் போவது அவ்வளவு உசிதமானது அல்ல. ஆனால், நான் என் வாழ்க்கையில் எது உசிதமானது... எது உசிதமற்றது என்று எல்லாம், நின்று யோசிக்கிற மனநிலையில் இல்லை. எனக்கு எல்லாவற்றிலும் இருந்து எங்கேயாவது தப்பித்துப்போக வேண்டும்போல இருந்தது. கொஞ்ச நாட்கள் கேரளத்தில் சுற்றினேன். நாராயணகுருவின் ஆசிரமம் இருக்கும் வர்க்கலையில் ஒரு மாதம் இருந்தேன். மனம் கொஞ்சம் அமைதியானதுபோல இருந்தது. அங்கே உள்ள கடற்கரையில் நடுவெயிலில் தோல் பொரிய நிற்பேன். மாலை நேரங்களில் கடலில் குளிப்பேன். அந்த உப்பு நீர் பட்டு உடல் எல்லாம் காந்தும். அந்த எரிச்சல் என்னைத் தற்காலிகமாக மனப்பதற்றத்தில் இருந்து விடுவிக்கும்.

ஜெர்மனியில் இருந்து அங்கு வந்திருந்த ஒரு வெள்ளைக்காரருடன் சற்றுப் பரிச்சயம் ஏற்பட்டது. அவருக்கு இரண்டு கால்களும் இல்லை. ஒரு மீனவ வாலிபன் வர்க்கலையின் கடற்கரையில், சக்கர நாற்காலியில் வைத்து அவரை உருட்டிவருவான். அவரும் நாராயண குருவைத் தேடி வந்தவர்தான். எனக்கு அது சற்று வியப்பை அளித்தது. நாராயணகுரு வழக்கமாக வெள்ளைக்காரர்கள் தேடிவரும் யோகிகள்போல அல்ல. அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதி.

ஒரு குறிப்பிட்ட இனக் குழுவை அதன் தளைகளில் இருந்து அகற்றியவர். அத்வைதம் போதித்தவர். காலை நேரங்களில் ஆசிரமத்துக்குப் போய் தியானம் செய்வேன்.

ஒருநாள் அங்கு இருக்கும் மூத்தத் துறவி ஒருவர் என்னை அழைத்து, `உங்களுக்கு என்ன பிரச்னை? தியானம் செய்யும்போது உங்களையும் அறியாமல் அழுதுவிடுகிறீர்கள்' என்றார்.

நான் திடுக்கிட்டேன். எனக்கு அது செய்தியாக இருந்தது.

`ஒன்றும் இல்லை... ஒன்றும் இல்லை' என்று சொல்லிவிட்டுப் பதற்றத்துடன் அங்கு இருந்து வெளியே வந்தேன்; களைப்பாக விடுதிக்கு வந்துசேர்ந்தேன். அலைபேசி, அவள் அனுப்பிய குறுஞ்செய்திகளால் விம்மிக்கொண்டிருந்தது.ஒன்றை விடுவித்துப் பார்த்தேன்.

`கண்ணா... நீ எங்கே இருக்கிறாய்? எதற்கும் நாம் காரணம் இல்லை; நீ காரணம் இல்லை.  ஐ லவ் யூ.'

நான் கசப்புடன் அலைபேசியைத் தூர எறிந்தேன். கண்ணுக்குள் மாமாவின் கால்கள் மீண்டும் ஒரு முறை ஆடின. நான் மானசீகமாக அவரின் உயிரற்ற கால்களைப் பிடித்துக்கொண்டு அழுதேன். மன்னிப்பு கேட்டேன். எப்படித் துணிந்தேன்... என் உடல் முழுவதும் மலம் நொதிப்பதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது. மாமாவுடன் இதே ஊருக்கு வந்திருக்கிறேன். நாராயணகுரு, அத்வைதம் பற்றி எல்லாம் அவர்தான் எனக்குச் சொன்னவர். `ஒரே இனம், ஒரே நம்பிக்கை, ஒரே கடவுள், ஒரே மனிதன்'... இதில் `ஒரே மனிதன்’ எவ்வளவு அற்புதமான வரி. மாமா சற்று செறிவாக்கிய நாராயணகுருவின் வரி அது என்று பின்னால் அறிந்தேன்.

சூரியன் ஒரு சிறிய தூரக் குரல்போல மேற்கே மறையும் தருணத்தில், `எல்லாம் ஒன்று. நான், நீ, இந்தக் கல், அந்த வானம், உன் அப்பா, கவிதை, படகின் நிழல், கடல்மணலில் தனியாக கால்பந்து விளையாடும் இந்த மீனவச் சிறுவன், எல்லோரும் எல்லாம் ஒன்று. நாம் ஒருவரை ஒருவர் அழிக்கவே முடியாது. நாம் நம்மையேதான் அழித்துக்கொள்ள முடியும்' என்றார் அவர்.

என் முதுகெலும்பு சொடுக்கியது  `நாம் நம்மையேதான் அழித்துக்கொள்ள முடியும்'.

எனக்குத் தலை வலித்தது. அவர் தன்னையா அழித்துக்கொண்டார்? அதன்மூலம் என்னையும் அல்லவா, அவளையும் அல்லவா? ஆனால், அவளுக்கு அது புரியவில்லை.

அவள் சொல்கிறாளே... `இது எதற்கும் நாம் காரணம் அல்ல; நான் காரணம் அல்ல.'

உண்மையில் அவளுடைய `நான்’ எது?

அவளுக்கு மிக நீளமான தலைமுடி. நிதம்பம் தாண்டி முழங்கால் வரையும்கூட ஒரு  கரும்பட்டுத் துகில்போல நீளும் கூந்தல். அவள் விளையாட் டாக, அதுகொண்டு  முக்கியமான சந்தர்ப்பங்களில் அவளது பெண்மையை மறைத்துக்கொள்வது உண்டு. அவளது ‘நான்’ அதுவோ?அல்லது வான் நோக்கிக் காற்றுக்காகத் தவிக்கும் மீன்களின் மோவாய்கள் போன்ற அவளது மார்புகளோ? அல்லது நிறைவுற்றப் பொழுதில், அவள் முகத்தில் விரியும் பால் நிலா இரவிலே முகையவிழ்க்கும்  அல்லிமலர் போன்ற அமைதியா?

நான் தலையை உலுக்கிக்கொண்டேன்.நாசமாயிற்று... நாசமாயிற்று எல்லாம். நான் எனது குருதியை மாசுபடுத்திக்கொண்டேன்.இளம்காற்று, அந்தி மாலை, விடிவெள்ளி, கடலலையின் கால் தொடுகை எதையும் இனி காண முடியாத ஒரு பிணக்குழிக்குள் விழுந்துவிட்டேன். மீண்டும் ஒரு முறை அலைபேசி ஒளிர்ந்தது...

`I love you. Still and always will’

நான் அதை எடுத்துத் தரையில் அடித்து உடைத்தேன். தலைவலி விண்ணிட்டு வெளியே வந்து, மாமாவின் கால்கள்போல உயிரற்றுத் தொங்கிக்கொண்டிருந்த துணிகளை விலக்கி, வாந்தி எடுத்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்