றெக்க - சினிமா விமர்சனம்

`ஐந்நூறு பேரைக் கொன்னாத்தான் அரை ஆக்‌ஷன் ஹீரோ ஆக முடியும்' என்ற கோடம்பாக்கச் சரித்திரத்தை நம்பி இறங்கியிருக்கிறார் விஜய் சேதுபதி.

ஊரார் காதலைச் சேர்த்துவைக்கும் நவீன ‘ஷாஜஹான்’ விஜய் சேதுபதி. ஒருமுறை கும்பகோண தாதா திருமணத்துக்குள் புகுந்து கல்யாணப் பெண்ணைத் தூக்க, பகை ஆரம்பம். விஜய் சேதுபதி தங்கையின் திருமணம் அன்று செக் வைக்கிறார் தாதா. மதுரையின் டாப் அரசியல்வாதியின் மகள் லட்சுமி மேனனை, விஜய் சேதுபதி தூக்க வேண்டும். லட்சுமி மேனனின் மாப்பிள்ளை, கோவையின் நம்பர் ஒன் தாதா. மூன்று ஊர்கள், மூன்று தாதாக்கள். ஒரே டார்கெட், விஜய் சேதுபதி. போதாதா?

``நான் பன்ச் பேச மாட்டேங்க... பஞ்சு பஞ்சாத்தான் பேசுவேன்” என அடக்கி வாசித்தாலும் அதிரடி என்ட்ரி விஜய் சேதுபதிக்கு. மாடுலேஷனில் மயக்கினாலும், ஆக்‌ஷனில் ஆவ்வ்வ்வ்! ஸ்லோமோஷனில் நடக்கவும் அசராமல் அடிக்கவும் ஒரு பெரிய லிஸ்ட்டே கோடம்பாக்கத்தில் இருக்கேஜி? ஹீரோயின் லூஸாக இருப்பது பழசுதான். இதில் சேஞ்சுக்கு பாட்டி, பொண்ணு, பேத்தி என எல்லோருமே கழண்ட கேஸுகள். மூன்று வில்லன்களும், மூவாயிரம் பக்க பில்டப் வசனம் பேச மட்டுமே!

ஹீரோவின் பெயர் சிவா. அப்பாவின் பெயர் ரத்தினம். இயக்குநரின் பெயர் ரத்தினம்சிவா. பேர் சொல்லும் படமாக எடுக்க நினைத்திருக்கிறார். `ரன்', `கில்லி' என கமர்ஷியல் கிராமர்களை மனப்பாடம் செய்து அப்படியே இறக்கியிருக்கிறார் இயக்குநர். ஓப்பனிங் பாடல், தெறிக்கும் ஆக்‌ஷன், எமோஷனல் ஃப்ளாஷ்பேக் என எல்லாம் ஓ.கே. ஆனால், அந்த ஸ்க்ரீன்ப்ளே மேஜிக் மட்டும் அவுட் ஆஃப் சிலபஸ்.

மதுரை, கோவை என ஊர் மாறிச் சென்று அதகளம் செய்யும் விஜய் சேதுபதி, அதை கும்பகோண தாதாவிடம் மட்டும் செய்திருந்தாலே போதுமே! விடிந்தால் திருமணம். அதற்குள் மதுரைக்குச் சென்று திரும்ப வேண்டும். ஹாயாக பஸ்ஸிலா போவார் ஹீரோ? செல்ஃபி எடுத்து அனுப்பினால் கடத்தியதாக நம்பிவிடுவாரா கும்பகோண தாதா?

ஆக்‌ஷன் பட எனர்ஜியைக் கொண்டுவந்திருக்கிறது தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு. ஷ்ரேயா கோஷலின் மேஜிக் `கண்ணைக் காட்டு போதும்...' பாடலில் மட்டும் தெரிகிறார் இமான்.

சிட்டி போதாது, பட்டித்தொட்டிக்கும் போவோம் என விஜய் சேதுபதி மாட்டிய `றெக்க' தாம்பரம் தாண்டவில்லை!

- விகடன் விமர்சனக் குழு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்