‘தண்ணி’ காட்டும் மோடி!

ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

‘தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது' என, புதிய புத்தராக மாறி புத்திமதி சொல்லியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இது பொருந்தும் என்றால், தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் பொருந்தாதா மோடி?

குஜராத் மக்களுக்கு தண்ணீர் தருகிறது நர்மதா. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களும் நர்மதா நதிநீரைப் பங்கிட்டுக்கொள்கின்றன. இது எதன் அடிப்படையில் என்றால், இந்த நான்கு மாநிலங்களுக்குமான நடுவர் மன்றத்தின்படிதான். நர்மதா கன்ட்ரோல் அத்தாரிட்டி அடிப்படையில் மிகச் சுமுகமாக நதிநீர் பங்கீடு நடந்து கொண்டிருக்கும்போது, காவிரிக்கு மட்டும் மேலாண்மை வாரியம் அமைக்க தயக்கம் என்ன மோடி?

`குஜராத்துக்கு வெண்ணெய், தமிழ்நாட்டுக்கு ஏன் சுண்ணாம்பு?' எனக் கேட்க, உரிமை உண்டுதானே?

முதலமைச்சர் சித்தராமையா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா, முன்னாள் பிரதமர் தேவகவுடா, எதற்குமே பிரயோஜனப்படாத வட்டாள் நாகராஜ் - ஆகிய நால்வரும் என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகட்டும். கர்நாடகாவை நம்பி அரசியல் நடத்துபவர்கள், கன்னடர்களை நம்பி பாத்திரம் நிரப்பிக்கொள்பவர்கள். ஆனால், பெருங்களத்தூரில் உங்களைப் பார்த்ததும் ‘பாரத் மாதா கி ஜே!’ என்று முழக்கமிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு, தாங்கள் காட்டியது கருணைதானா?

`காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது' என மத்திய அரசு மனுத்தாக்கல் செய்கிறது என்றால், பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய அரசும் தமிழ்நாடு வேண்டாம் என நினைக்கிறார்களா... கருகட்டும் என நினைக்கிறார்களா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதால் மட்டும் தமிழ்நாட்டுக்கு நீதி கிடைத்துவிடப்போவது இல்லை. காவிரி ஆணையம் கொடுத்த உத்தரவுப்படி, அறிவிக்கப்பட்ட அளவில் கர்நாடக காங்கிரஸ் அரசாக இருந்தாலும், பா.ஜ.க அரசாக இருந்தாலும் ஓர் ஆண்டுகூட தண்ணீரைத் திறந்துவிடவில்லை. `காவிரி ஆணையமும் கட்டுப்படுத்தாது. மத்திய அரசுக்கும் கட்டுப்பட மாட்டோம். உச்ச நீதிமன்றத்தையும் மதிக்க மாட்டோம்' எனச் செயல்படும் மாநிலமாக கர்நாடக அரசு இருக்கும்போது என்ன செய்ய முடியும்? தண்ணீர் தெளித்துவிடப்பட்டதுபோல் ஒரு மாநிலம் செயல்படும்போது, அதைக் கட்டுப்படுத்த காவிரி மேலாண்மை வாரியமாவது அமையுங்கள் எனக் கேட்க உரிமை இல்லையா?

காவிரி மேலாண்மை வாரியம் அமையுங்கள் எனச் சொல்வதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை இல்லை என்றால், அவர்கள் சொல்வதற்கு முன்னால் நீங்களே அமைத்திருந்தால் அவர்கள் ஏன் உத்தரவிடப்போகிறார்கள்?

ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. இந்தத் தடையை நீக்கக் சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டபோது, ‘உச்ச நீதிமன்றம் சொன்னதை மீற முடியாது' என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ஏன் உச்ச நீதிமன்றத்தின் பேச்சைக் கேட்டீர்கள்? இப்போது ஏன் கேட்க மறுக்கிறார்கள்? தமிழ்நாடு, தமிழன் என்பதாலா?

பிரதமர் நரேந்திர மோடிக்குப் பாராட்டு மாலை போட்டு மகிழ்ந்திருக்கிறது, கர்நாடக சட்டமன்றம். அது, பெரும்பான்மை பா.ஜ.க கொண்ட சபை அல்ல; காங்கிரஸ் பெரும்பான்மை கொண்ட சபை. ‘கர்நாடகத்தின் மீது தொங்கிக் கொண்டிருந்த கத்தி விலகி உள்ளது. இதை விலக்கிய மோடிக்குப் பாராட்டுகள்' எனத் தீர்மானம் போட்டுள்ளார்கள்.

“நான் எட்டு முறை பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினேன். அவர் பதில் கடிதமே போடவில்லை. அவரைச் சந்திப்பதற்காக மூன்று முறை நேரம் கேட்டேன். நேரம் ஒதுக்கவே இல்லை. `நான்கு மாநில முதலமைச்சர் கூட்டத்தையாவது கூட்டுங்கள்' என்றேன். அதையும் செய்யவில்லை'' என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆசீர்வாதத்துடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்