திரைத்தொண்டர் - 29

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம்

வெறும் காது கழுத்துடன் நிற்கும் அம்மா, செலவாளி அப்பா, பள்ளியில் படிக்கும் தம்பிகள், தங்கைகள். வறுமையின் பிடியில் குடும்பம். இப்படிப்பட்ட வீட்டின் மூத்த மகனாக இருப்பது ஒரு பக்கம் வேதனையாக இருந்தாலும், ‘இவங்க தேவைகளை நாமதானே பூர்த்தி செய்யணும்’ என நினைக்கும்போது, அது ஒரு சுகமான சுமை.  ‘இன்றைய தேவைக்கு சம்பாதிச்சா போதும்’ என முடிவு எடுக்காமல், ‘மெட்ராஸ் போய் ஏதோ ஒரு வகையில் பெரிய ஆளா வரணும்’ என அன்று நான் நின்று நிதானமாகச் செயல்பட்டது எனக்கே ஆச்சர்யம்தான்.

அப்போது எங்கள் உறவினர்கள் நிறையப் பேர், வியாபார விஷயமாக காரைக்குடியில் இருந்து சென்னை வருவார்கள். அன்று நான் ஊரில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியபோது, ரயிலில் வந்த உறவினர் ஒருவர் என்னைப் பார்த்து வேறொருவரிடம், ‘இந்தப் பய தலப்பட்டுதான் இவங்க குடும்பத்தைக் காப்பாத்தணும்’ எனச் சொன்னார். அவர் சொன்னதை இப்போது நினைத்துப்பார்க்கிறேன். ஆம், நான் தலப்பட்டுதான் என் குடும்பத்தைக் காப்பாற்றினேன். அந்த விஷயத்தில் ஒரு மூத்த மகனாக, நான் மனநிறைவாக இருக்கிறேன். ஆரம்பத்தில் என்னை அரவணைத்த ஏ.எல்.எஸ் தொடங்கி, உதவியாளராக சேர்த்துக்கொண்ட கவிஞர் வரை எத்தனையோ பேரை இன்று நினைத்துப்பார்க்கிறேன். கவிஞருக்கு 15 பிள்ளைகள் இருந்தாலும் என்னையும் என் மனைவி மீனாவையும் தன் 16, 17-வது பிள்ளைகள்போலவே நடத்துவார். இது, அவர் அமைத்துக் கொடுத்த வாழ்க்கை. அவரின் பிள்ளைகளும் அப்படியே, ‘பஞ்சண்ணன்... பஞ்சண்ணன்...’ என்று அவ்வளவு ப்ரியம். நானும் அவர்களிடம் அப்படித்தான் இருக்கிறேன்.

எதையும் கதைகளாகவும் காட்சிகளாகவும் பார்க்கும் எழுத்தாளர்களுக்கு அது ஒரு பக்கம் வரம் என்றாலும், இன்னொரு பக்கம் சாபம். ஒரு மாய உலகில் மாய மானைத் துரத்திக்கொண்டு ஓடுவதுபோல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த ஓட்டம் தடைபடாமல் பார்த்துக்கொண்டது என் குடும்பம். மீனாட்சி என்கிற மீனா. என் மனைவி. சென்னை, அவளுக்கு ஆரம்பத்தில் கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போன்ற ஒரு  உணர்வு. ‘குடும்பம் நல்லா இருக்கணும்னுதானே சம்பாதிக்கிறார். ஆனா, அந்தக் குடும்பத்தைப் பற்றிய எந்தச் சிந்தனையுமே இல்லாம இருக்காரே இந்த மனுஷன்!’ என்று நினைத்திருப்பாள். என் கடைசிக்காலம் வரைகூட அவளுக்கு அந்த நினைப்பு இருக்கும் என நினைக்கிறேன். ஆம், அன்றில் இருந்து இன்று வரை நான் அப்படியேதான் இருக்கிறேன்.

காலை எழுந்தவுடன் கிளம்பிவிடுவேன் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், நான் எப்போது வீட்டுக்கு வருவேன் என்பது எங்கள் இருவருக்குமே தெரியாது. பல நாள், நள்ளிரவைத் தாண்டியும் வருவேன். பொறுமையாகக் காத்திருப்பாள். நான் கொஞ்சம் முன்கோபி. பொறுத்துக்கொள்வாள். நான் கடும் சோம்பேறி, அவள் உற்சாகமாக இருப்பாள். என் நெகட்டிவ் விஷயங்களை தன் பாசிட்டிவ் விஷயங்களால் சமப்படுத்துவாள். எங்கள் இருவர் வீட்டு உறவுகளுக்கும் அவள்தான் பாலம். ஊரில் யார் வீட்டில் விசேஷம் என்றாலும் தவறாமல் கலந்துகொள்வாள். அப்படி காரைக்குடி ரயில் பயணங்கள்தான் அவளின் ஒரே ஆறுதல்.

என் பனியன் சைஸ் என்ன என்றுகூட எனக்குத் தெரியாது. இப்படி வேட்டி-சட்டை வாங்கி வைப்பதில் தொடங்கி, அனைத்தையும் பார்த்துக்கொள்வாள். ஆனால் நானோ, ‘உனக்கு என்ன வேணும்... புடவை, நகைநட்டு எதுவும் வாங்கித் தரவா?’ என்று இதுநாள் வரை கேட்டதே இல்லை. காரைக்குடியைவிட்டு வந்து வெகுநாட்கள் ஆனாலும், அந்த ஊர் சுவையும் எங்கள் அம்மாவின் கைப்பக்குவமும் என் நாக்கிலும் மனதிலும் அப்படியே தங்கிவிட்டன. அம்மாவின் அந்தக் கைப்பக்குவம் பழக, மீனாவுக்குக் கொஞ்சம் நாள் பிடித்தது.

‘இந்த மனுஷனுக்கு எது பிடிக்குமோ?’ என நினைத்திருப்பாள்போல. நான்கைந்து வகைகளைச் செய்து வைத்துவிட்டு உட்கார்ந்து இருப்பாள். நான் ஏதோ ஒரு சிந்தனையில் ஏதோ அனிச்சைச் செயல்போல சாப்பிட்டுக்கொண்டு இருப்பேன். இது என்னைப் போன்ற ஆட்களுக்கே உள்ள சாபம். மனதில் எப்போதும் நான்கைந்து அலைவரிசைகளை ஆன் செய்துவைத்தபடியே சுற்றுவார்கள். அந்தச் சமயத்தில் உணவை கேட்காமல் பரிமாறிவிட்டால், அந்த நான்கில் ஏதோ ஓர் அலைவரிசை தடைபட்டதாக நினைத்து கோபப்படுவேன். மற்றதைவிட ஒரு கரண்டி கூடுதலாக எதை அதிகமாக எடுத்துவைத்து சாப்பிடுகிறோனோ, ‘ஓ... அவருக்கு அதைவிட இதுதான் பிடிக்கும்போலிருக்கு’ என்று குத்துமதிப்பாக என் விருப்ப உணவாக அதை மனதில் புரிந்துகொள்வாள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்