இன்னொரு நந்தினி - சிறுகதை

ஆத்மார்த்தி, ஓவியங்கள்: ஸ்யாம்

பெருமழைக் காலத்தின் ஆரம்பக் கணங்களை, பெரிய கண்ணாடிச் சுவர் வழியாகப் பார்ப்பது வரம். செல்லில் நந்தினியின் மெசேஜ். `பார்க்கணும்டா!' - ஒரே ஒரு வார்த்தை.வரவேற்பறைக்கு வந்து காபி மெஷினில் இருந்து ஒரு குவளையை நிரப்பிக்கொண்டு, மழையைப் பார்க்க மறுபடி வந்தேன்.

இன்னும் மழை ஆரம்பிக்கவில்லை. மழைக்கு முந்தைய காற்றும் லேசாகத் தெறிக்கும் தூறலும் மட்டுப்பட்டாற்போல் தோன்றியது. அடுத்த விநாடி மீதான அறியாமைதான் எத்தனை அழகு! நகரத்தின் முக்கியமான சாலையில் அவ்வளவாகப் பரபரப்பு இல்லை. இன்று ஏதோ லோக்கல் விடுமுறை. இல்லாவிட்டால், சாலையை இந்நேரம் விழுங்கியிருக்கும் பள்ளிக்கூடக் கூட்டம்.

காது அருகே, ``இன்னிக்கு மழை வரக் கூடாது'' என்றான் அருண்.

திரும்பி முறைத்து, ``ஏன் பிசாசு, மழையை வெறுக்கிறே?''

``முறைக்காதேக்கா... நான் மழையை வெறுக்கலை. எக்ஸ்க்யூஸ் கேக்குறேன். ஒன் மந்த் காதல் தோல்விக்கு அப்பால இன்னிக்குதான் மறுபடியும் ஒரு பூ பூத்திருக்கு. மனசு ஈரமா இருக்கணும்னா, இன்னிக்கு மழை பெய்யக் கூடாதுதானே! நான் பாவம்.''

``போன மாசம் இதே மாதிரி மீட்டிங்குக்குக் கிளம்புனியே அருண். ஏரோப்ளேன்லகூட மீட் பண்ணதா சொன்னியே..?''

என் கேள்வியை அவன் காதில் வாங்காததைப்போல் நடித்தான். சடாரெனத் திரும்பி, முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு ``அவளுக்கு அத்தை பையன் இருக்கானாம். மின்னசோட்டா போற வழியில பேச்சுத்துணைக்கு என்னை அணுகியிருக்கா. `எங்கு இருந்தாலும் ஒழிக'னு துப்பி அனுப்பிச்சுட்டேன்.''

கொஞ்சம் சத்தமாகச் சிரித்துவிட்டு, ``ஆல் தி பெஸ்ட்'' என்றேன்.

``வர்றேன்க்கா'' என்றவாறே காணாமல் போனான்.

அன்றைய வேலையை முடித்துவிட்டு, ஸ்கூட்டியில் நந்தனம் சிக்னல் தாண்டி, சேமியர்ஸ் என்ற வெள்ளைக்காரத்தனமான கட்டடத்தின் உள்ளே வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டை லாக்கிட்டு உள்ளே சென்று படியேறினேன். மேலோட்டமாகப் பார்த்தால், சென்னையின் அராஜகங்களில் ஒன்றாகவே தெரியும்... அந்த டீ ஷாப்பில் இரண்டு பேர் ஆளுக்கொரு கேக், காபி சாப்பிட்டால், ஆயிரம் ரூபாய்க்கு அருகில் பில் வரும். வேறு இடத்துக்குப் போகலாம் என்றால், அதற்கு நந்தினி ஒப்புக்கொள்ள மாட்டாள்.

``நோ பப்பு... பிரைவசிங்கிறது எவ்ளோ பெரிய விஷயம் தெரியும்ல? அதுக்கும் சேர்த்துத்தான் இந்த விலை. விடு பப்பு!'' என்பாள்.

நந்தினியோடு அடிக்கடி வந்து, எனக்கும் அந்த இடம் பிடித்துப்போனது. ஒரு சுவர் முழுவதும் பழங்கால கறுப்பு-வெள்ளைப் புகைப்படங்கள் அலங்கரித்துக்கொண்டிருக்கும். அழகுக்காக எதையாவது பெயர்த்துத் தருபவர்களுக்கு மத்தியில், அத்தனை புகைப்படங்களும் 120 வருடங்களுக்கு முந்தைய ரத்தமும் சதையுமாக வாழ்ந்து, இல்லாமல்போன மனிதர்களின் புகைப்படங்கள்.

முதல்முறையாக அங்கே போய் வந்த அன்று இரவு, எனக்கு நெடுநேரம் உறக்கமே இல்லை.

``நாம் இன்னும் நூறு வருஷங்கள் கழிச்சு என்னவாக இருப்போம் நந்து?'' என்று போனில் கேட்டேன்.

``ஃபன்னி...'' என்றவள், சற்று நேரம் கழித்து ``ஆமாம்ல... நம்ம சந்ததியில் யாராச்சும் நம்மளை நினைச்சுப்பார்ப்பாங்களா? நீயும் நானும் முன்னோரை எவ்ளோ நினைக்கிறோம்? அவ்ளோதான். எதைப் பார்க்கிறோமோ, எதில் இருக்கிறோமோ, அது மட்டும்தான் நிஜம். எவ்வளவு இருக்கோம். அவ்வளவும் இல்லாமப்போயிருவோம்'' என்றாள்.

ப்போதோ படித்த நகுலனின் கவிதை ஞாபகம் வந்து கனத்தது. டீ ஷாப்பின் டிஸ்ப்ளே பகுதி, பழங்காலப் பொருட்களின் கூடுகையாக அட்டகாசமாக இருந்தது. இன்னும் நந்தினி வரவில்லை. அவள் வரும் வரை பழங்கால ரேடியோ தொடங்கி போன் வரைக்கும் பார்த்துக் கொண்டிருக்கலாம். தூரத்தில் இருந்தே சிக்கனமாகக் கையசைத்தவாறு மிதந்து வந்தாள் நந்தினி. `எப்படி இவளால் இவ்வளவு அழகாக இருக்க முடிகிறது?' பதின்ம வயதின் அழகுகள் இன்னும் அவளிடம் பாக்கியிருந்தன.

பணம், தன்னைத்தானே பெற்றுக்கொண்டு தேவையான பலவற்றைத் தரவல்லது. நந்தினி சொல்வாள்... `பணம், பணமா இருந்தா பத்தாது.எனக்கு, பணம் ஒரு நாய்க்குட்டி மாதிரி வேணும். அப்படி இல்லாட்டி, லைஃப் அலுத்துடும்.'

முன் நெற்றியில் வந்துவிழுந்த கற்றை முடியை ஒதுக்கியபடியே, ``ரொம்ப நேரமா காத்திருக்கியா பப்பு?'' என்றாள்.

``இல்லடா. பத்து நிமிஷம்தான்'' என்றேன்.

நந்தினியை முதன்முதலில் ஒரு பார்லரில் சந்தித்தேன். பிரபு, என்னை ரொம்ப இம்சித்ததாலும், சொந்தக் காரர்களின் கல்யாணத்துக்கு மதுரைக்குச் செல்லவேண்டி இருந்ததாலும் பியூட்டி பார்லர் போனேன். எதிர் நாற்காலியில் இருந்தவள்தான் நந்தினி. முதலில் `அவள்தான் பியூட்டீஷியனோ!' எனக் குழம்பினேன். `இன்னும் என்ன பாக்கி என்று இங்கே வந்திருக்கிறாள் எனத் தெரியவில்லையே!' என நினைக்கும் அளவுக்கு மேக்கப்புடன் இருந்தாள்...பெப்பர்மின்ட் வாசனையோடு.

எனக்கு ஃபேஷியல் நடந்தபோது, எனக்கு எதிர்த்தாற்போல் அவள் அமர்ந்துகொண்டாள். அவளது பாதங்களைச் சீரமைக்கும் வேலையை ஒருத்தி செய்தாள். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. `எல்லாம் பணத்திமிர்!' என எனக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால், இன்னொருத்தியின் கால்களை எந்த அசூசையும் இல்லாமல் தன் கரங்களால் கழுவித் தேய்த்து, அலம்பி, நகம் வெட்டிவிட்டு எல்லாம் செய்துகொண்டிருந்த அந்த பார்லர் பெண் மீது எனக்கு பெரும் மரியாதை வந்தது.

முடித்துவிட்டு வாசலுக்கு வந்தேன்.ரிசப்ஷனில் பில் செட்டில் செய்துவிட்டுக் கிளம்பியபோது, பெப்பர்மின்ட்டாள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள். இருவரும் வெளியே வரும்போது அவள் தன் கையை நீட்டி ``நந்தினி'' என்றாள்.

எதிர்பாராததால் ஒரு கணம் திணறி ``நான் பவித்ரா'' என்று கை கொடுத்தேன்.

``உங்களைக் கவனிச்சுக்கிட்டே இருந்தேன். இதுக்கு முன்னாடி பார்லர் வந்தது இல்லையா நீங்க? நான் பெடிக்யூர் செய்துகிட்டப்போ உங்க முகத்துல சின்னதா ஆத்திரத்தைப் பார்த்தேன்.''

எனக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நான் ஏன் மறைக்க வேண்டும்? `ஆமாம்' என்பதுபோல் தலையாட்டினேன். ``ஸீ... பணம் இடம்மாறுது இல்லையா? இதை ஒரு வேலையா யோசிங்க, ஒரு தொழிலா புரிஞ்சுக்கங்க. கோபம் வராது'' என்றவள், டக் டக்கென நடந்து காரில் ஏறிக் காணாமல்போனாள்.

அவளை மறந்துபோனேன். ஒரு வாரம் கழித்து என் நம்பருக்கு போன் வந்தது. ``உங்க நம்பரை பார்லர்ல வாங்கினேன். ஏனோ எனக்கு உங்களைப் பிடிச்சுபோச்சு. நாம ஃப்ரெண்ட்ஸா இருக்கணுமே'' என்றாள்.

வசியப் பறவையைப்போல கதவுகளைத் திறந்து அல்ல, உடைத்துக்கொண்டு என் உலகத்துக்குள் நுழைந்தாள். ஒரே ஒரு நந்தினி. அவளும் `பப்பு... பப்பு...' என உருகத்தான் செய்கிறாள். அவளது செல்வந்தத்தின் மத்தியில் ஒரே ஒரு சாதாரணம் நானாகத்தான் இருப்பேன். அவளுக்கு அதில் எந்தக் குறையும் இல்லை. ஆச்சு, அறிமுகமாகி ஐந்து வருடங்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்